பட மூலாதாரம், Global Sumud Flotilla/Handout via Reuters
காஸாவுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு சென்ற ஒரு படகுக் குழுவில் இருந்த 22 படகுகளை, கிரேக்கத்தின் கிரீட் தீவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் இடைமறித்துள்ளதாக பாலத்தீன ஆதரவு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையைக் 'கடற் கொள்ளை' என்று விவரித்துள்ள ‘குளோபல் சுமூத் ஃப்ளோடில்லா’ (GSF) ஏற்பாட்டாளர்கள், காஸாவிலிருந்து 965 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் இருந்த மக்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
காஸா மீது இஸ்ரேல் கடற்படை முற்றுகையை அறிவித்துள்ளது.
சுமார் 175 ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், இந்த படகுகளின் அணிவகுப்பை ஒரு 'விளம்பர யுக்தி' என்று விவரித்துள்ளது. அவர்கள் வியாழக்கிழமை பிற்பகலில் கிரேக்கக் கடற்கரையில் இறக்கிவிடப்படுவார்கள் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்எப் தரவுகளின்படி, அந்த படகுக் குழுவில் எஞ்சியிருக்கும் 36 படகுகளில் பெரும்பாலானவை தற்போது கிரீட் தீவின் தெற்கு கடற்கரைக்கு அருகில் உள்ளன.
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 58 படகுகளைக் கொண்ட இந்த அணிவகுப்பு, இஸ்ரேலின் காஸா முற்றுகையை எதிர்க்கும் நோக்கில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது பயணத்தைத் தொடங்கியது.
வணக்கம் நேயர்களே!
நேரலைப் பக்கத்தில் இன்று (01-05-2026) பிற்பகல் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது சிராஜ்.
நன்றி நேயர்களே!
இன்று இந்த நேரலைப் பக்கத்தில் எங்களோடு இணைந்திருந்த நேயர்கள் அனைவருக்கும் பிபிசி தமிழின் நன்றி.
அமெரிக்கா மீண்டும் தாக்கினால், அமெரிக்காவுக்கு எதிராக "நீண்ட மற்றும் கொடிய" தாக்குதலைத் தொடங்குவோம் என்று இரானின் புரட்சிகர காவல் படையினர் எச்சரித்துள்ளனர்.
உண்மையில், இரானுக்கு எதிரான சாத்தியமான ராணுவ நடவடிக்கை குறித்து அதிபர் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும், இது எண்ணெய் விலைகளில் கடுமையான உயர்வுக்கு வழிவகுத்ததாகவும் செய்திகள் தெரிவித்தன.
இதற்கிடையில், இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இன்ஸ்டாகிராமில், "கி.பி. 1622-ல், 115 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு, நாங்கள் ஐரோப்பிய காலனிவாதிகளை பாரசீக வளைகுடாவிலிருந்து விரட்டியடித்தோம், மேலும் இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் 'வளைகுடா தினத்தை' கொண்டாடுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
"இன்றும் கூட, ஹோர்மூஸ் நீரிணையின் மீதான இரானின் கட்டுப்பாடு, அமெரிக்காவின் இருப்பு மற்றும் தலையீடு இல்லாமல் தனக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும்." என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கடும் வெயில் நிலவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி கோவையில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து பல்வேறு பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் புறநகர் பகுதிகளில் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது.
தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
அமெரிக்க டாலருக்கு எதிராக மிகவும் குறைந்த இந்திய ரூபாய்
பட மூலாதாரம், Diptendu Dutta/NurPhoto via Getty Images
வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 32 பைசா சரிந்து, இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவான 95.20-ஐ எட்டியது.
பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலர் வலுப்பெற்றதன் காரணமாக ரூபாய் சரிந்தது.
பி.டி.ஐ-யின்படி, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை இந்தியாவின் இறக்குமதி செலவினங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், டாலருக்கு எதிராக ரூபாய் மேலும் சரியக்கூடும் என, அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
வியாழக்கிழமை, பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 126 டாலரை எட்டியது.
அதே நேரத்தில், மேற்கு ஆசியாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படக்கூடும் என்று முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்ததால், அமெரிக்க டாலர் மேலும் வலுப்பெற்றது.
"அமெரிக்காவின் கடற்படை முற்றுகை வெற்றி பெறாது" - இரான் அதிபர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் (கோப்புப்படம்)
இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை, வளைகுடா பகுதியில் பாதுகாப்பின்மையை மேலும் அதிகரிக்கும் என்று, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளார்.
பிபிசி அரபு சேவையின்படி, வியாழக்கிழமை அவர், "சர்வதேச சட்டத்துக்கு முரணாக கடற்படை முற்றுகையையோ அல்லது எந்தவிதமான தடைகளையோ விதிக்கும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறாது" என்று கூறியுள்ளார்.
மேலும் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், "இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதில் தோல்வியடைவது மட்டுமல்லாமல், உண்மையில் வளைகுடா பகுதியில் பதற்றத்தை உருவாக்கி, நிலைத்தன்மையை சீர்குலைக்கும்" என்றார்.
முன்னதாக, அமெரிக்க கடற்படை முற்றுகை பல மாதங்கள் நீடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சமாக 126 டாலரை எட்டியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு அபராதம் - ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு, அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 40-வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ஆடை மாற்றும் அறையில் ரியான் பராக் 'வேப்' (இ- சிகரெட்) பயன்படுத்தியிருந்தார்.
நடத்தை விதிகளின்படி, நிலை 1 விதிமீறலில் ஈடுபட்டதாக அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கணக்கில் ஒரு 'குறைமதிப்புப் புள்ளி' சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, "ரியான் பராக் ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.21-ஐ மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரிவானது, விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்கள் தொடர்பானது."
மேலும், ரியான் பராக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், போட்டி நடுவர் அமித் சர்மா விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம்: இரு வாகனங்கள் மோதி விபத்து - 16 பேர் உயிரிழப்பு
பட மூலாதாரம், Ishwari Lal
படக்குறிப்பு, இரண்டு வாகனங்களுக்கு இடையிலான மோதல் மிகவும் தீவிரமாக இருந்ததால், வாகனங்கள் சேதமடைந்தன.
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்து ஒன்றில் 16 பேர் உயிரிழந்தனர்; சுமார் 30 பேர் காயமடைந்தனர்.
இந்தூர்-ஆமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு வாகனம் டயர் வெடித்ததன் காரணமாக நிலைதடுமாறி கவிழ்ந்து, எதிர்திசையில் வந்துகொண்டிருந்த ஸ்கார்பியோ காரின் மீது மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கிடைத்த தகவல்களின்படி, அந்தச் சரக்கு வாகனம் மிக அதிக வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. இந்த விபத்தில் எட்டுப் பெண்கள், மூன்று இளம்பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர்.
இரு வாகனங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிகவும் தீவிரமானதாக இருந்ததால், பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றியதும், அதிவேகமாகச் சென்றதுமே விபத்துக்கான முதன்மைக் காரணங்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
வணக்கம் நேயர்களே!
நேரலைப் பக்கத்தில் இன்று (30-04-2026) இரவு வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது நந்தினி வெள்ளைச்சாமி.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை - ராஜ்நாத் சிங் விளக்கம்
பட மூலாதாரம், ANI
இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கையைத் தனது சொந்த விருப்பத்தின் பேரிலும், தனது சொந்த நிபந்தனைகளின் பேரிலும் நிறுத்தியதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் செயல் திறன் குறைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை இந்தியா நிறுத்தவில்லை என்றும் அவர் கூறினார். புதன்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் பேசுகையில், "எங்களின் செயல் திறன் குறைந்ததன் காரணமாகவே அந்த நடவடிக்கையை நாங்கள் நிறுத்தினோம் என்று கருதக்கூடாது என்பதை நான் மீண்டும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நாங்கள் அதை எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும், எங்கள் சொந்த நிபந்தனைகளின் பேரிலும் நிறுத்தினோம்," என்று கூறினார். தேவைப்பட்டால், 'நீண்ட காலப் போருக்கு' இந்தியா முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் மேலும் கூறுகையில், "திடீரெனத் தேவை ஏற்பட்டால், எங்கள் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான வல்லமையும் எங்களிடம் இருந்தது. அந்த வல்லமை அப்போது எங்களிடம் இருந்தது மட்டுமல்லாமல், இப்போதும் எங்களிடம் உள்ளது; அது முன்பை விடச் சிறப்பாகவும் உள்ளது," என்றார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பல இடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது; அங்கு அமைந்திருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்களே குறிவைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.
இது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராணுவ மோதல் ஏற்பட வழிவகுத்தது. இந்தியா தனது இந்த இராணுவ நடவடிக்கைக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிட்டிருந்தது.
புதன்கிழமை அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்த விரிவான தகவல்களை இந்தியாவில் உள்ள இரான் தூதரகம் வழங்கியுள்ளது.
"பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய நிலவரம் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது இந்திய தரப்புக்கு விளக்கினார்," என்று இரான் தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
"இரானுக்கு எதிராகத் திணிக்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார்." எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
"பாரசீக வளைகுடா பிராந்தியத்திலும், ஹோர்மூஸ் நீரிணையிலும் நிலவும் பாதுகாப்பின்மையை, இரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நேரடி விளைவு என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விவரித்தார்," என அந்த அறிக்கை தெரிவித்தது.
இரான் தூதரகத்தின்படி, இந்த நடவடிக்கைகள் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பொறுப்பேற்கச் செய்வது முக்கியம் என்று அப்பாஸ் அராக்சி கூறினார்.
பேச்சுவார்த்தையின் போது, இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதோடு, மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும் சர்ச்சையைத் தீர்க்கவும் இராஜதந்திரத்தை ஆதரித்தார் என்று தூதரகம் தெரிவித்தது.
முன்னதாக புதன்கிழமை, ஜெய்சங்கர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசியது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இரான் போரில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தகவல்
பட மூலாதாரம், Kevin Dietsch/Getty Images
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் விசாரணையின் போது, இரான் மீதான போருக்காக இதுவரை செலவிடப்பட்ட தொகை குறித்த தகவல்களை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (பென்டகன்) வழங்கியுள்ளது.
இக்குழுவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஆடம் ஸ்மித், இரான் மீதான போருக்காக அமெரிக்கா இதுவரை எவ்வளவு செலவிட்டுள்ளது என்றும், இது தொடர்பான முழுமையான செலவு மதிப்பீடு விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
விசாரணையில் பங்கேற்றிருந்த பென்டகனின் நிதித் துறைத் தலைவர் ஜூலஸ் ஹர்ஸ்ட், இதற்கான செலவு "சுமார் 25 பில்லியன் டாலர்" (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்) என்றும், இத்தொகையில் பெரும்பகுதி ஆயுதங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
"நீங்கள் இந்தக் கேள்விக்குப் பதிலளித்ததில் எனக்கு மகிழ்ச்சி; ஏனெனில், நாங்கள் நீண்ட காலமாகவே இந்தக் கேள்வியை எழுப்பி வருகிறோம், ஆனால் இதுவரை யாரும் எங்களுக்கு இந்த விவரத்தை அளிக்கவில்லை," என்று ஸ்மித் கூறினார்.
தொடர்ந்து அவர், இரானிடமிருந்து எழும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்க அரசு எத்தகைய திட்டங்களை வைத்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத்திடம் கேள்வி எழுப்பினார். முந்தைய அரசாங்கங்கள் "மோசமான ஒப்பந்தங்களை" மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டிய ஹெக்ஸெத், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காலத்தில், 2016-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட 'கூட்டு விரிவான செயல் திட்டம்' (JCPOA) குறித்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த ஜே.சி.பி.ஓ.ஏ. ஒப்பந்தம், 'இரான் அணுசக்தி ஒப்பந்தம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்மித், "அது கடந்த காலம்; இனி எதிர்காலத்திற்கான திட்டம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், இரானுடன் போர் தொடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் வகையிலான உடனடி அணு ஆயுத அச்சுறுத்தல் ஏதேனும் தற்போது நிலவுகிறதா என்றும் அவர் வினவினார்.
இரான் தனது "அணு ஆயுத லட்சியங்களைக் கைவிடவில்லை" என்றும், அதனால்தான் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் ஹெக்ஸெத் பதிலளித்தார்.
தமிழில் உயர் நீதிமன்ற தீர்ப்பு : வழக்கறிஞர்கள் சங்கம் சொல்வது என்ன?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தொடர்பான வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் தீர்ப்பு வழங்கியுள்ளது வழக்கறிஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்புகள் வெளியாகின்றன. நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வாதாடுவதில் தமிழ் மொழியைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கையை வைத்து வருகின்றன.
இந்தக் கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில், 'தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்களும் போராடி வந்தனர்.
இந்தநிலையில், கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின்போது வேத மந்திரங்களை சம்ஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழிலும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. 'சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழுக்கு சிறப்பு செய்யும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின்போது தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்' எனக் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தேதி இறுதி செய்யப்படவில்லை எனக் கூறிய நீதிபதி, 'கோவில் குடமுழுக்கு தமிழில் ஓதுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஜூன் 2 ஆம் தேதியன்று அரசுத் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை அவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வழங்கியுள்ளார். இதனை வரவேற்றுள்ள வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மூத்த வழக்கறிஞர் சத்திய சந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியது. "உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என இந்திய அரசு அறிவித்திருந்தது. 2019-ஆம் ஆண்டு சரவணபவன் ராஜகோபால் சரணடைய விலக்கு கோரிய வழக்கின் தீர்ப்பு முதல்முறையாக தமிழில் வெளியிடப்பட்டது" என்கிறார்.
அந்தவகையில், உயர் நீதிமன்றத்தில் முதல்முறையாக தமிழில் தீர்ப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
"நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கு இதுபோன்ற முயற்சிகள் பலன் அளிக்கும். வாதாடுவதும் தமிழில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. அது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் மட்டுமே சாத்தியம்," என்கிறார் சத்தியசந்திரன்.
"தமிழில் வாதாடுவது மட்டுமல்ல. சட்ட சொற்களும் அதிகளவு தமிழில் வெளிவர வேண்டும்" எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழில் சட்ட சொற்களைக் கொண்டு வருவது தொடர்பான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதில் நீதித்துறைக்கு எந்தவித பங்கும் கிடையாது" எனக் கூறுகிறார்.
"தீர்ப்புகள் அதிகளவில் தமிழ் மொழியில் வெளியில் வரவேண்டும். அதற்கு மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பு முன்மாதிரியாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 89.99% வாக்குப்பதிவு
பட மூலாதாரம், ANI
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 89.99% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகள் தெரிவிக்கின்றன.
புர்பா பர்தமான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. தெற்கு கொல்கத்தா மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 86.11% சாக்குகள் பதிவாகியுள்ளன.
ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வந்த ஜப்பான் கப்பல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
புதன்கிழமை அன்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வந்துள்ளது. முன்னர் பாரசீக வளைகுடாவில் இடைமறிக்கப்பட்ட இந்தக் கப்பலில் மூன்று ஜப்பான் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் தற்போது ஜப்பானை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ஹோர்மூஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் கப்பல்கள், குறிப்பாக ஜப்பானின் கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையில்லாமலும் பயணிப்பதை இரான் உறுதி செய்ய வேண்டும் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சர்வதேச கூட்டங்களிலும் ஜப்பான் கோரி வருகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பு என்கிற கோணத்தில் காணும்போது இதனை நேர்மறையான முன்னேற்றமாக ஜப்பான் அரசு பார்க்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மேற்கு வங்கம் இரண்டாம் கட்ட தேர்தல்: மதியம் 3 மணி வரை 78.68% வாக்குப்பதிவு
பட மூலாதாரம், ANI
மேற்கு வங்கத்தில் 142 இடங்களுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகளின்படி மதியம் 3 மணி அளவில் 78.68% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
சுமார் 3.2 கோடி வாக்காளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்கின்றனர். இதில் சுமார். 1.6 கோடி ஆண் வாக்காளர்கள், 1.5 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 792 திருநர் சமூக வாக்காளர்கள் அடங்குவர்.
மொத்தம் 41,001 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பிடிஐ செய்தி முகமையின்படி, இன்று காலை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பவானிபூர் வாக்குப்பதிவு மையத்திற்கு ஒரே நேரத்தில் வந்தடைந்தனர்.
ஹமாஸ் உளவு பிரிவு தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் தகவல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
வடக்கு காஸாவில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் உளவுப் பிரிவின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் உளவுப் பிரிவின் நடவடிக்கைகள் குழு தலைவரான இயத் அஹமது அப்துல் ரஹ்மான் ஷம்பாரி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இஸ்ரேலிய ராணுவ செயல்பாடுகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில் அவர் முக்கியப் பங்கு ஆற்றியதோடு அந்தப் பகுதியில் பணியிலிருந்த படைகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக கருதப்பட்டார்," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலைத் திட்டமிட்டதில் அவரும் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணக்கம் நேயர்களே!
நேரலைப் பக்கத்தில் இன்று (29-04-2026) இரவு வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது மோகன்.
அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கப்பல்களை விடுவிக்க இரான் கோரிக்கை
பட மூலாதாரம், Michael M. Santiago/Getty Images
படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபைக்கான இரானின் தூதர் அமீர் சயீத் இர்வானி.
அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தனது கப்பல்களை விடுவிக்குமாறு, இரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான இரானின் தூதர் அமீர் சயீத் இர்வானி, செவ்வாய்க்கிழமை அன்று ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்குமாறும், அமெரிக்கா பறிமுதல் செய்துள்ள இரானிய வணிகக் கப்பல்கள் மற்றும் டேங்கர்களை உடனடியாக விடுவிக்குமாறும் இர்வானி வலியுறுத்தினார்.
இரானிய கப்பல்கள் பறிமுதல் செய்யப்படுவதை 'கடற்கொள்ளை' என்று இர்வானி விவரித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், "சர்வதேச சட்டத்தின்படி, இந்த அப்பட்டமான நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க இரானுக்கு முழு உரிமை உண்டு" என்றும் இர்வானி கூறியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஒரு அறிக்கையில், அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால், இரானின் எண்ணெய் சேமிப்புத் திறன் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இது இரானின் எண்ணெய் விநியோகப் பாதைகளை சேதப்படுத்தும் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.