நேரலை, இரானில் தூக்கிலிடப்பட்ட 21 வயது இளைஞர்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

காஸாவுக்கு உதவிப் பொருட்கள்: 22 படகுகளை தடுத்த இஸ்ரேல்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை - புதிய நிபந்தனைகளை விதித்த இரான்

    இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் (கோப்புப் படம்)

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் (கோப்புப் படம்)

    அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய நிபந்தனைகளை பாகிஸ்தானிடம் இரான் வழங்கியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

    ஐஆர்என்ஏ (IRNA) செய்தி முகமையின்படி, இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானிடம் இந்த நிபந்தனைகள் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 30) வழங்கப்பட்டுள்ளன.

    வியாழக்கிழமை மாலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகாயி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இரானின் முன்னுரிமை போரை நிறுத்துவதும், நிலையான அமைதியை அடைவதுமே என்று வலியுறுத்தினார்.

    இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ மத்தியஸ்தராக இருப்பதாக பாகாயி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

    பல நாடுகள் மத்தியஸ்தராகச் செயல்படத் தயாராக இருந்தாலும், பாகிஸ்தான் மட்டுமே அதிகாரப்பூர்வமான மத்தியஸ்தர் என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

  2. மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல்

    வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் செல்லும் தேர்தல் அலுவலர்கள் ( கோப்புப்படம் )

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் செல்லும் தேர்தல் அலுவலர்கள் ( கோப்புப்படம் )

    மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை (மே 2) அன்று 15 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    இதில் மகராகாட் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளும், டைமண்ட் ஹார்பர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளும் அடங்கும்.

    இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    குறிப்பிட்ட இந்த வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடந்ததாகத் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் வந்ததன் அடிப்படையில் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

  3. வணிக சிலிண்டர் விலை உயர்வு - ராகுல் காந்தி விமர்சனம்

    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் 993 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் 993 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மீண்டும் ஒருமுறை உயர்ந்துள்ளது.

    ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் டெல்லியில் 19 கிலோ சிலிண்டரின் விலை தற்போது 3,071.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    விலை உயர்விற்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, “முதல் தாக்குதல் எரிவாயு மீது, அடுத்த தாக்குதல் பெட்ரோல் - டீசல் மீது” என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர் தனது பதிவில், “தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயர்வு எனும் வெப்பம் வரும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். இன்று வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் 993 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

  4. 18 வயது வீரரை அணியில் சேர்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    ஆல்ரவுண்டர் ஆர்.எஸ். அம்பரீஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார்.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஐசிசி ஆண்கள் யு-19 உலகக்கோப்பை 2026 தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் ஆர்.எஸ். அம்பரீஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஷிவம் மாவிக்கு பதிலாக ஆர்.எஸ். அம்பரீஷைத் தனது அணியில் சேர்த்துள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக, ஷிவம் மாவிக்குப் பதிலாக ஆர்.எஸ். அம்பரீஷை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தேர்வு செய்துள்ளது.

    வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரான மாவி, இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார்.

    ஆல்ரவுண்டர் ஆர்.எஸ். அம்பரீஷ், ஐசிசி ஆண்கள் யு-19 உலகக்கோப்பை 2026-ஐ வென்ற இந்திய யு-19 அணியின் ஒரு பகுதியாக இருந்தவர்.

    இந்தத் தொடரில் இந்திய யு-19 அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும், இடது கை பேட்டராகவும் செயல்படும் அம்பரீஷை, 30 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

  5. மும்பையில் கோக்கைன் பறிமுதல் - அமித்ஷா

    மும்பையில் 349 கிலோ உயர்தர கோகைனை என்சிபி பறிமுதல் செய்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார் (கோப்புப் படம்)

    பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images

    படக்குறிப்பு, மும்பையில் 349 கிலோ உயர்தர கோகைனை என்சிபி பறிமுதல் செய்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார் (கோப்புப் படம்)

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) ஒரு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

    மும்பையில் 1,745 கோடி ரூபாய் மதிப்பிலான 349 கிலோ உயர்தர கோகைனை என்சிபி பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, "போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒடுக்க நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

    "போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மும்பையில் ஒரு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்து, 349 கிலோ உயர்தர கோகைனைப் பறிமுதல் செய்துள்ளது. இதன் மதிப்பு 1,745 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  6. ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டைத் தவிர மற்ற அனைத்துக்கும் வரிகளை நீக்கிய சீனா

    ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டைத் தவிர மற்ற அனைத்துக்கும் வரிகளை நீக்கிய சீனா

    பட மூலாதாரம், Getty Images

    வெள்ளிக்கிழமை முதல் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சீனா சுங்க வரிகளை நீக்குகிறது. ஆனால் தைவானுடன் உறவைத் தொடர்ந்து வைத்திருக்கும் எஸ்வாத்தினிக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படவில்லை.

    கடந்த 2024 டிசம்பர் மாதத்திலேயே, குறைந்த வளர்ச்சியடைந்த 33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா வரி இல்லா கொள்கையை அமல்படுத்தியிருந்தது. தற்போது இந்த கொள்கை 53 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகை 2028 ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லை.

    ஆப்பிரிக்க நாடுகளுக்கு முழுமையான சுங்கவரி விலக்கு வழங்கிய முதல் பெரிய பொருளாதார நாடு தாங்கள்தான் என சீனா கூறியுள்ளது.

  7. வணக்கம் நேயர்களே!

    நேரலைப் பக்கத்தில் இன்று இரவு வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது நந்தகுமார்

  8. இரானில் தூக்கிலிடப்பட்ட 21 வயது இளைஞர்

    இரான்

    பட மூலாதாரம், UGC

    பிபிசி நியூஸ் பெர்சியன் தகவலின்படி, இரானின் இஸ்பஹானைச் சேர்ந்த 21 வயதான சசன் ஆசாத்வர் ஜோங்கானி தூக்கிலிடப்பட்டார்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட அவர், இஸ்பஹானின் தஸ்த்கார்ட் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

    அவரது குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம், மனித உரிமைகள் இணையதளமான HRANA-விடம், அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மதியம் ஒரு 'பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில்' நடைபெற்றதாகவும், அதில் "அவரது 10 உறவினர்கள் மட்டுமே" கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியது.

    இரானிய இஸ்லாமியக் குடியரசின் நீதித்துறை, அரசாங்கத்தை "கவிழ்க்கும்" நோக்கில் ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது, சசன் ஆசாத்வர் ஜோங்கானி "அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஒரு மினிபஸ் மீது கற்கள் மற்றும் குச்சிகளால் தாக்குதல் நடத்தி, வாகனத்தின் ஜன்னல்களை உடைத்து, அதிகாரிகள் மீது கற்களையும் செங்கற்களையும் வீசினார்" என்று கூறுகிறது.

    இரானிய நீதித்துறையின்படி, பேரணிகளில் கலந்துகொள்வதற்கு முன்பு, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் வீதிகளில் இறங்கப்போவதாக தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் கூறியதாகவும், மேலும் தனது நண்பர்களையும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு "அழைத்திருந்ததாகவும்" அவர் ஒப்புக்கொண்டார்.

    ஆசாத்வார் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலைமைகள், அவருக்கு வழக்கறிஞரை அணுகுவதற்கான அனுமதி, மற்றும் அவரது வாக்குமூலம் பெறப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை தங்களுக்குத் தெரியாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  9. காஸாவுக்கு உதவிப் பொருட்கள்: 22 படகுகளை தடுத்த இஸ்ரேல்

    காஸாவுக்கு உதவிப் பொருட்கள்

    பட மூலாதாரம், Global Sumud Flotilla/Handout via Reuters

    காஸாவுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு சென்ற ஒரு படகுக் குழுவில் இருந்த 22 படகுகளை, கிரேக்கத்தின் கிரீட் தீவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் இடைமறித்துள்ளதாக பாலத்தீன ஆதரவு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நடவடிக்கையைக் 'கடற் கொள்ளை' என்று விவரித்துள்ள ‘குளோபல் சுமூத் ஃப்ளோடில்லா’ (GSF) ஏற்பாட்டாளர்கள், காஸாவிலிருந்து 965 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் இருந்த மக்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

    காஸா மீது இஸ்ரேல் கடற்படை முற்றுகையை அறிவித்துள்ளது.

    சுமார் 175 ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், இந்த படகுகளின் அணிவகுப்பை ஒரு 'விளம்பர யுக்தி' என்று விவரித்துள்ளது. அவர்கள் வியாழக்கிழமை பிற்பகலில் கிரேக்கக் கடற்கரையில் இறக்கிவிடப்படுவார்கள் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் தெரிவித்துள்ளார்.

    ஜிஎஸ்எப் தரவுகளின்படி, அந்த படகுக் குழுவில் எஞ்சியிருக்கும் 36 படகுகளில் பெரும்பாலானவை தற்போது கிரீட் தீவின் தெற்கு கடற்கரைக்கு அருகில் உள்ளன.

    ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 58 படகுகளைக் கொண்ட இந்த அணிவகுப்பு, இஸ்ரேலின் காஸா முற்றுகையை எதிர்க்கும் நோக்கில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது பயணத்தைத் தொடங்கியது.

  10. வணக்கம் நேயர்களே!

    நேரலைப் பக்கத்தில் இன்று (01-05-2026) பிற்பகல் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது சிராஜ்.

  11. நன்றி நேயர்களே!

    இன்று இந்த நேரலைப் பக்கத்தில் எங்களோடு இணைந்திருந்த நேயர்கள் அனைவருக்கும் பிபிசி தமிழின் நன்றி.

  12. "கொடிய பதிலடி கொடுப்போம்" - அமெரிக்காவை எச்சரித்த இரான்

    இரான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரான் கொடி (கோப்புப்படம்)

    அமெரிக்கா மீண்டும் தாக்கினால், அமெரிக்காவுக்கு எதிராக "நீண்ட மற்றும் கொடிய" தாக்குதலைத் தொடங்குவோம் என்று இரானின் புரட்சிகர காவல் படையினர் எச்சரித்துள்ளனர்.

    உண்மையில், இரானுக்கு எதிரான சாத்தியமான ராணுவ நடவடிக்கை குறித்து அதிபர் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும், இது எண்ணெய் விலைகளில் கடுமையான உயர்வுக்கு வழிவகுத்ததாகவும் செய்திகள் தெரிவித்தன.

    இதற்கிடையில், இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இன்ஸ்டாகிராமில், "கி.பி. 1622-ல், 115 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு, நாங்கள் ஐரோப்பிய காலனிவாதிகளை பாரசீக வளைகுடாவிலிருந்து விரட்டியடித்தோம், மேலும் இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் 'வளைகுடா தினத்தை' கொண்டாடுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    "இன்றும் கூட, ஹோர்மூஸ் நீரிணையின் மீதான இரானின் கட்டுப்பாடு, அமெரிக்காவின் இருப்பு மற்றும் தலையீடு இல்லாமல் தனக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும்." என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

  13. கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கடும் வெயில் நிலவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி கோவையில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து பல்வேறு பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் புறநகர் பகுதிகளில் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

  14. அமெரிக்க டாலருக்கு எதிராக மிகவும் குறைந்த இந்திய ரூபாய்

    இந்திய ரூபாய்

    பட மூலாதாரம், Diptendu Dutta/NurPhoto via Getty Images

    வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 32 பைசா சரிந்து, இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவான 95.20-ஐ எட்டியது.

    பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலர் வலுப்பெற்றதன் காரணமாக ரூபாய் சரிந்தது.

    பி.டி.ஐ-யின்படி, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை இந்தியாவின் இறக்குமதி செலவினங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், டாலருக்கு எதிராக ரூபாய் மேலும் சரியக்கூடும் என, அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

    வியாழக்கிழமை, பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 126 டாலரை எட்டியது.

    அதே நேரத்தில், மேற்கு ஆசியாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படக்கூடும் என்று முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்ததால், அமெரிக்க டாலர் மேலும் வலுப்பெற்றது.

  15. "அமெரிக்காவின் கடற்படை முற்றுகை வெற்றி பெறாது" - இரான் அதிபர்

    இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் (கோப்புப்படம்)

    இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை, வளைகுடா பகுதியில் பாதுகாப்பின்மையை மேலும் அதிகரிக்கும் என்று, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளார்.

    பிபிசி அரபு சேவையின்படி, வியாழக்கிழமை அவர், "சர்வதேச சட்டத்துக்கு முரணாக கடற்படை முற்றுகையையோ அல்லது எந்தவிதமான தடைகளையோ விதிக்கும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறாது" என்று கூறியுள்ளார்.

    மேலும் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், "இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதில் தோல்வியடைவது மட்டுமல்லாமல், உண்மையில் வளைகுடா பகுதியில் பதற்றத்தை உருவாக்கி, நிலைத்தன்மையை சீர்குலைக்கும்" என்றார்.

    முன்னதாக, அமெரிக்க கடற்படை முற்றுகை பல மாதங்கள் நீடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சமாக 126 டாலரை எட்டியது.

  16. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு அபராதம் - ஏன்?

    ரியான் பராக்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ரியான் பராக்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு, அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 40-வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ​​ஆடை மாற்றும் அறையில் ரியான் பராக் 'வேப்' (இ- சிகரெட்) பயன்படுத்தியிருந்தார்.

    நடத்தை விதிகளின்படி, நிலை 1 விதிமீறலில் ஈடுபட்டதாக அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கணக்கில் ஒரு 'குறைமதிப்புப் புள்ளி' சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஐபிஎல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, "ரியான் பராக் ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.21-ஐ மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரிவானது, விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்கள் தொடர்பானது."

    மேலும், ரியான் பராக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், போட்டி நடுவர் அமித் சர்மா விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  17. மத்திய பிரதேசம்: இரு வாகனங்கள் மோதி விபத்து - 16 பேர் உயிரிழப்பு

    இரண்டு வாகனங்களுக்கு இடையிலான மோதல் மிகவும் தீவிரமாக இருந்ததால், வாகனங்கள் சேதமடைந்தன.

    பட மூலாதாரம், Ishwari Lal

    படக்குறிப்பு, இரண்டு வாகனங்களுக்கு இடையிலான மோதல் மிகவும் தீவிரமாக இருந்ததால், வாகனங்கள் சேதமடைந்தன.

    மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்து ஒன்றில் 16 பேர் உயிரிழந்தனர்; சுமார் 30 பேர் காயமடைந்தனர்.

    இந்தூர்-ஆமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு வாகனம் டயர் வெடித்ததன் காரணமாக நிலைதடுமாறி கவிழ்ந்து, எதிர்திசையில் வந்துகொண்டிருந்த ஸ்கார்பியோ காரின் மீது மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கிடைத்த தகவல்களின்படி, அந்தச் சரக்கு வாகனம் மிக அதிக வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. இந்த விபத்தில் எட்டுப் பெண்கள், மூன்று இளம்பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர்.

    இரு வாகனங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிகவும் தீவிரமானதாக இருந்ததால், பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றியதும், அதிவேகமாகச் சென்றதுமே விபத்துக்கான முதன்மைக் காரணங்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

  18. வணக்கம் நேயர்களே!

    நேரலைப் பக்கத்தில் இன்று (30-04-2026) இரவு வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது நந்தினி வெள்ளைச்சாமி.

  19. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை - ராஜ்நாத் சிங் விளக்கம்

    ராஜ்நாத்சிங்

    பட மூலாதாரம், ANI

    இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கையைத் தனது சொந்த விருப்பத்தின் பேரிலும், தனது சொந்த நிபந்தனைகளின் பேரிலும் நிறுத்தியதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் செயல் திறன் குறைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை இந்தியா நிறுத்தவில்லை என்றும் அவர் கூறினார். புதன்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

    ராஜ்நாத் சிங் பேசுகையில், "எங்களின் செயல் திறன் குறைந்ததன் காரணமாகவே அந்த நடவடிக்கையை நாங்கள் நிறுத்தினோம் என்று கருதக்கூடாது என்பதை நான் மீண்டும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    நாங்கள் அதை எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும், எங்கள் சொந்த நிபந்தனைகளின் பேரிலும் நிறுத்தினோம்," என்று கூறினார். தேவைப்பட்டால், 'நீண்ட காலப் போருக்கு' இந்தியா முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பாதுகாப்புத் துறை அமைச்சர் மேலும் கூறுகையில், "திடீரெனத் தேவை ஏற்பட்டால், எங்கள் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான வல்லமையும் எங்களிடம் இருந்தது. அந்த வல்லமை அப்போது எங்களிடம் இருந்தது மட்டுமல்லாமல், இப்போதும் எங்களிடம் உள்ளது; அது முன்பை விடச் சிறப்பாகவும் உள்ளது," என்றார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பல இடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது; அங்கு அமைந்திருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்களே குறிவைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

    இது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராணுவ மோதல் ஏற்பட வழிவகுத்தது. இந்தியா தனது இந்த இராணுவ நடவடிக்கைக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிட்டிருந்தது.

  20. இந்தியா-இரான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

    இரான்- இந்தியா

    பட மூலாதாரம், Getty Images

    புதன்கிழமை அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்த விரிவான தகவல்களை இந்தியாவில் உள்ள இரான் தூதரகம் வழங்கியுள்ளது.

    "பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய நிலவரம் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது இந்திய தரப்புக்கு விளக்கினார்," என்று இரான் தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

    "இரானுக்கு எதிராகத் திணிக்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார்." எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    "பாரசீக வளைகுடா பிராந்தியத்திலும், ஹோர்மூஸ் நீரிணையிலும் நிலவும் பாதுகாப்பின்மையை, இரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நேரடி விளைவு என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விவரித்தார்," என அந்த அறிக்கை தெரிவித்தது.

    இரான் தூதரகத்தின்படி, இந்த நடவடிக்கைகள் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பொறுப்பேற்கச் செய்வது முக்கியம் என்று அப்பாஸ் அராக்சி கூறினார்.

    பேச்சுவார்த்தையின் போது, இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதோடு, மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும் சர்ச்சையைத் தீர்க்கவும் இராஜதந்திரத்தை ஆதரித்தார் என்று தூதரகம் தெரிவித்தது.

    முன்னதாக புதன்கிழமை, ஜெய்சங்கர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசியது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.