கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா நடித்த 'சர்தார்-2' திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனம்

சர்தார் 2: படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Prince Pictures/X

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

"முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியே இரண்டாம் பாகத்தை உருவாக்கும் நம்பிக்கையை எங்களுக்குக் கொடுத்தது. இதில் சர்வதேச அளவிலான உளவு வேலைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்களை மையமாகக் கொண்டு கதையை அமைத்திருக்கிறோம்" என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? முன்னணி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்து என்ன?

படத்தின் கதை என்ன?

முதல் பாகத்தில் அணுக்கழிவு மற்றும் குடிநீர் சந்தைப்படுத்தல் அரசியலை மையமாகக் கொண்டு சமூக விழிப்புணர்வு கதையாக அமைத்திருந்த பி.எஸ்.மித்ரன், இந்த பாகத்தில் கதையை 1980-களின் பின்னணியுடன் இணைத்து சர்வதேச உளவுத் தளத்திற்கு சென்றுள்ளார்.

1980-களில் ஜப்பான் உருவாக்கிய அதிபயங்கர 'டோகு' என்ற பயோ-ஆயுதம் இந்தியாவில் விழுகிறது. இந்திய உளவு அமைப்பான 'ரா-வில் இருக்கும் சர்தார் மற்றும் அவரது குழுவினர் அந்த ஆபத்தான உயிரியல் ஆயுதத்தைச் செயலிழக்கச் செய்யப் போராடுகின்றனர்.

தற்போதைய காலத்தில், அந்த பயோ-ஆயுதத்தைக் கைப்பற்றி 140 கோடி இந்தியர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தத் திட்டம் தீட்டுகிறது 'யோகி' (எஸ்.ஜே. சூர்யா) தலைமையிலான சர்வதேச கூலிப்படை. முக்கியத்துவம் இல்லாத சாதாரண பிரிவில் முடக்கப்பட்டிருக்கும் சர்தாரின் மகனும் ஏஜென்டுமான விஜய் (கார்த்தி), இந்த சதியை முறியடிக்கிறாரா என்பதே 'சர்தார் 2' படத்தின் கதையாகும்.

சர்தார் 2: படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Prince Pictures/Youtube

திரைக்கதை மற்றும் இயக்கம் எப்படி உள்ளது?

"படத்தின் முதல் பாதி விறுவிறுப்பான தேடலுடனும், ஆகாயத்தில் நடக்கும் அபாரமான விமான சண்டைக் காட்சிகளுடனும் த்ரில்லராக நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதியின் அதிகப்படியான நீளம் பார்வையாளர்களுக்குச் சற்றே அசௌகரியத்தைக் கொடுக்கிறது" என்று தினமணி நாளிதழ் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

முதல் பாகத்தில் இருந்த தெளிவான சுவாரஸ்யமும் உணர்வுப்பூர்வமான பிணைப்பும் இந்த இரண்டாம் பாகத்தில் சற்றே குறைவு என்று தி இந்து நாளிதழ் விமர்சித்துள்ளது.

திரைக்கதையில் அளவுக்கு அதிகமாகத் திணிக்கப்பட்டுள்ள சர்வதேச அறிவியல் மற்றும் உளவுத் தகவல்கள் சாமானிய ரசிகர்களுக்குப் படத்துடன் ஒன்றிப்போவதில் சிக்கலை ஏற்படுத்துவதாக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், "ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளை யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி மூலமாகக் நகைச்சுவையோடும் சிந்திக்க வைக்கும் வகையிலும் இயக்குநர் சொன்ன விதம் சிறப்பு" எனத் தினமணி பாராட்டியுள்ளது.

179 நிமிடங்கள் கொண்ட நீளமான திரைக்கதை மற்றும் லாஜிக் மீறல்கள் படத்தின் விறுவிறுப்பைக் குறைப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

நடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பலம்

சர்தார் 2: படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Prince Pictures/Youtube

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தந்தை 'சர்தார்' மற்றும் மகன் 'விஜய்' என இரு வேறு பரிமாணங்களில் தோன்றும் கார்த்தி, தனது அசாத்தியமான உழைப்பை வழங்கிப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் என பல ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

முதியவரான 'சர்தார்' மற்றும் இளம் ஏஜென்ட் 'விஜய்' என இரு வேறு கெட்டப்புகளிலும் கார்த்தி தனது மிகச்சிறப்பான மற்றும் அசாத்தியமான உழைப்பை வழங்கியிருப்பதாக தி இந்து நாளிதழ் பாராட்டியுள்ளது.

இருவேறு காலகட்டங்களில் வரும் கதாபாத்திரங்களின் வேறுபாட்டைக் காட்டி, தனது அசாத்தியமான நடிப்பால் படத்தைத் தனி ஆளாகத் தாங்கிப் பிடிக்கிறார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

எஸ்.ஜே. சூர்யா இந்த திரைப்படத்தில் ஒரு சமூக காரணத்துக்காக தவறான வழியில் போராடும் வித்தியாசமான வில்லனாக உருவெடுத்துள்ளார். யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவியுடன் அவர் இணைந்து தோன்றும் காட்சிகள் நகைச்சுவையையும் அதே நேரத்தில் வலுவான சமூகச் செய்தியையும் சிறப்பாக கடத்துவதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அவரது வில்லன் கதாபாத்திரத்தின் பின்னணி இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம் என்றும் தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.

திரைப்படத்தின் முதல் 30 நிமிடங்களில் எஸ்.ஜே. சூர்யாவின் வருகை படத்திற்கு மிகப்பெரிய வேகத்தையும் ஆற்றலையும் அளிப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியுள்ளது.

திரைப்படத்தில் ரா எஜெண்டாக வரும் மாளவிகா மோகனன் சண்டை காட்சிகளில் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக அதில் பாராட்டப்பட்டுள்ளது. ஆஷிகா ரங்கநாத் மற்றும் ரெஜிஷா விஜயன் ஆகியோர் வந்து செல்லும் கதாபாத்திரங்களாக அமைந்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் உளவுக்கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு சர்தார் 2 ஏமாற்றம் கொடுக்காத உளவாளி என தினமணி கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு