தமிழறிஞர் சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்

பட மூலாதாரம், SolomonPappaiah/FB
இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.
தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90.
அவரது உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு சாலமன் பாப்பையா பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
மதுரை அரசடியில் உள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சாலமன் பாப்பையா, தனியார் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் நடுவராகப் பொறுப்பேற்று பேசி வந்தார். அவரது பேச்சுக்குப் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.
பட்டிமன்றங்கள் மற்றும் பொது மேடைகளில் நகைச்சுவை கலந்து சாலமன் பாப்பையா பேசி வந்தார். அவரது பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்படப் பல நாடுகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் சாலமன் பாப்பையா பெற்றுள்ளார். கடந்த 5ஆம் தேதி சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.
அதன் பிறகு உடல்நலக் குறைவால் அவர் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், " இது பேரிடியாக உள்ளது. அவர் இல்லையென்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தகப்பனாகவும் தாத்தாவாகவும் அவர் இருந்தார்" என்றார்.
சிவகாசியில் நடந்த பட்டிமன்றத்தின்போது சாலமன் பாப்பையா இயல்பாக இருந்தததாகக் கூறும் ராஜா, "வீட்டுக்கு வந்தவுடன் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறினார். இந்நிலையில் காலையில் திடீரென மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" எனக் கூறியுள்ளார்.
"நான், பாரதி பாஸ்கர் உள்படப் பல பேச்சாளர்களை அவர் உருவாக்கியுள்ளார். அவர் செய்த சாதனைகளுக்கு அளவில்லை. அவருடன் சுமார் 50 ஆண்டுகளாக உடன் இருந்துள்ளேன்" எனக் கூறும் ராஜா, "அவர் இல்லை என்ற துயரமான செய்தியை மனதில் வாங்கிக் கொள்ள முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
அவருடன் பல பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ள பாரதி பாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கும் பேச்சாளர் ராஜாவுக்கும் தகப்பனாக அவர் இருந்தார். ஒவ்வோர் இடத்திலும் எங்களை முன்னிறுத்தி அவர் பின்னால் இருப்பார். அந்தப் பெருந்தன்மையை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டோமா எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.
"அனைத்து மதங்களும் ஒரு கடவுளை நோக்கிச் செல்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். அவருடைய செய்தி அனைவருக்கும் சென்று சேர வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Special Arrangement
முதலமைச்சர் இரங்கல்.
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த சாலமன் மறைந்த செய்தியறிந்து துயரமும், வேதனையும் அடைந்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் எக்ஸ் பதிவில், "நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு" என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், CMOTamilnadu
பண்டிகையும், பட்டிமன்றமும்.
"உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்." என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்தான அவரது எக்ஸ் பக்கத்தில்,
"பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த ஆண்டு மே மாதம் மக்கள் சந்திப்புக்காக மதுரை சென்றிருந்தபோது அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது." என்று தனது பதிவில் அவர் குறிப்பிட்டார்.
'சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர்'
தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையாவின் மறைந்த செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா" என்று குறிப்பிட்டுள்ளார்.
"அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், EPStamilnadu/X
தமிழ் இலக்கியத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பட்டிமன்றத்தை சாலமன் பாப்பையா நடத்தி வந்தார். பட்டிமன்றங்களில் இரு தரப்பினரும் முன்வைக்கும் கருத்துகளை நகைச்சுவை கலந்து பகுப்பாய்ந்து அவர் அளிக்கும் தீர்ப்புகள் வரவேற்பைப் பெற்றன.
நடுவராக மட்டுமன்றி எழுத்தாளராக 'புறநானூறு புதிய வரிசை வகை', 'பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை', 'திருக்குறள் உரையுடன்' எனப் பல்வேறு நூல்களை சாலமன் பாப்பையா எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை சாலமன் பாப்பையா பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு முத்தமிழ்ப் பேரரறிஞர் என்ற விருதை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது.
பேச்சாளர் சுகி சிவம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "பாமரர்களுக்கு பண்டிதர்களின் தமிழைக் கொண்டு சென்ற பாரதியை போலவே பேச்சுலகில் பாமரர்களுக்கு பண்டிதர்களின் இலக்கியத்தைக் கொண்டு சென்ற பட்டிமன்ற பேரரசராக சாலமன் பாப்பையா இருந்தார்" எனக் கூறியுள்ளார்.
ஒரு பேச்சாளருக்கு உலகம் தழுவிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை அவரைச் சேரும் எனத் தெரிவித்துள்ள சுகி சிவம், "மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய சாலமன் பாப்பையாவை நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் பேச்சுகளில் அனல் பறக்கும்" என்றார்.
"அவரது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்போது ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு சிரமங்களை சந்தித்தார். தனது கடைசி காலகட்டங்களிலும் சுறுசுறுப்பாக இருந்தார். ஒரு நொடியைக்கூட வீணாக்க மாட்டார்" என்று சுகி சிவம் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























