நேபாளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த பயணி உயிரிழப்பு

பட மூலாதாரம், Nepal Police
நேபாளத்தில் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு அருகே உள்ள ஃபெரிச்சே கிராமத்தில் தரையிறங்க முயன்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இணைச் செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர புல் பிபிசியிடம் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பயணி என்று சோலுகும்பு மாவட்டத்தின் உதவி தலைமை மாவட்ட அதிகாரி பூபேந்திர தாபா தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் காத்மாண்டுவிலும், மற்ற இருவர் லுக்லாவிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் ஃபிஷ்டெய்ல் ஏர் மற்றும் ஏர் டைனஸ்டி நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
எவரெஸ்ட் மலைப்பயணப் பாதையில் அமைந்துள்ள இந்தக் கிராமம் கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டருக்கும் சற்றே அதிகமான உயரத்தில் உள்ளது.
உயிரிழந்தவரின் உடல் லுக்லா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஃபிஷ்டெய்ல் ஏர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
காயமடைந்தவர்கள் யார்?

பட மூலாதாரம், Nepal Police
காயமடைந்தவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என்றும், இரு ஹெலிகாப்டர்களின் நேபாளத்தைச் சேர்ந்த விமானிகளும் காயமடைந்துள்ளனர் என்றும் சோலுகும்பு மாவட்டத்தின் உதவி தலைமை மாவட்ட அதிகாரி பூபேந்திர தாபா தெரிவித்தார்.
ஃபிஷ்டெய்ல் ஏர் ஹெலிகாப்டரின் விமானி சிகிச்சைக்காகக் காத்மாண்டுவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றொரு ஹெலிகாப்டரின் விமானியும் நியூசிலாந்தைச் சேர்ந்த பயணியும் ஹெலிகாப்டர் மூலம் லுக்லாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
காலை 8:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
"லுக்லாவிலிருந்து சென்றுகொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டரும், அடிவார முகாமுக்கு அருகிலுள்ள கோரக்ஷேப்பிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டரும் ஒரே இடத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது," என்று புல் கூறினார்.
விபத்து எப்படி நிகழ்ந்தது?
விபத்துக்கான தெளிவான காரணம் இதுவரை தெரியவில்லை.
"அந்தப் பகுதியில் வேறு ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளங்களும் உள்ளன. ஆனால், அவை பனியால் மூடப்பட்டிருந்ததால், இரண்டும் ஒரே தளத்தில் தரையிறங்க முயன்றிருக்கலாம் என்று தோன்றுகிறது," என்று புல் கூறினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், இரண்டு ஹெலிகாப்டர்களும் எதிரெதிர் திசைகளிலிருந்து வருவதும், அவற்றில் ஒன்றின் சுழல்தகடு மற்றொரு ஹெலிகாப்டரின் மீது மோதுவதும் தெரிகிறது.
அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசி நியூஸ் நேபாள சேவை உறுதிப்படுத்தவில்லை. எனினும், உள்ளூர் ஊடகங்களும் அந்தக் காணொளியை ஒளிபரப்பியுள்ளன.
விபத்தின்போது இரண்டாவது ஹெலிகாப்டரின் பின்பகுதி உடைந்து சிதறியதுடன், அதன் முன்பகுதி தரையில் புதைந்திருப்பதும் காணொளியில் தெரிகிறது.
அதற்கு நேர் முன்னால் நின்றுகொண்டிருந்த சிலர், தப்பிப்பதற்காக ஓடுவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.
தற்போது எவரெஸ்ட் பகுதியில் உள்ள ஆமாதப்லம் மலையில் ஏறுவதற்கான உச்சப் பருவம் நிலவுகிறது. இலையுதிர் காலம் அந்தப் பகுதியில் மலைப்பயணம் மேற்கொள்வதற்கும் பிரபலமான பருவமாகும்.
ஹெலிகாப்டர் மூலம் எவரெஸ்ட் அடிவார முகாமுக்குச் சென்று, இடையிலுள்ள கிராமங்களில் சிறிது நேரம் தங்கி 'காலை உணவு' சாப்பிடும் சுற்றுலாப் பயணத் திட்டங்களும் அந்தப் பகுதியில் பிரபலமாக உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































