தஞ்சை: கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - வழக்கின் பின்னணி

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் அருகே அமைந்துள்ள பெரியார் ஈ.வெ. ராமசாமி சிலையை நான்கு வாரங்களுக்குள் அகற்றி, ஆட்சேபனையற்ற வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றிருப்பதும், கோயில் நிலத்தில் சிலை அமைந்திருப்பதும் பக்தர்களின் நம்பிக்கையைப் பாதிப்பதாகக் கருதுவதாக மனுதாரர் ராமரவிக்குமார் கூறியுள்ளார்.
"பெரியார் சிலை கோயில் நிலத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால் கண்டியூரிலேயே வேறிடத்திற்கு பெரியார் சிலையை மாற்ற வேண்டும்" என்று திராவிடர் கழகத்தின் கூறுகின்றனர்.
இந்த வழக்கின் பின்னணி என்ன?
ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது என்ன நடந்தது?
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூரில் அமைந்துள்ள பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோயில் மதில் சுவரை ஒட்டி இருந்த கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், அதே பகுதியில் அமைந்திருந்த பெரியார் சிலை மட்டும் அகற்றப்படாமல் இருந்தது.
இதையடுத்து, கோயில் நிலத்தில் உரிய அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பட மூலாதாரம், FB/Rama Ravikumar
'ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றேன்'
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராம ரவிக்குமார், "கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலுக்கு தரிசனத்திற்குச் சென்ற போது, கோயில் நிலத்தில் பெரியார் சிலை அமைந்திருப்பதைப் பார்த்தேன். கோயில் நிலத்தில் இருந்த கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சிலை மட்டும் ஏன் அகற்றப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கேட்டேன். கோயில் நிலத்தில் சிலை அமைக்க அனுமதி அல்லது தடையில்லாச் சான்று வழங்கப்பட்டதா எனக் கேட்டபோது, அனுமதி வழங்கப்படவில்லை எனத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அறநிலையத் துறை அதிகாரிகள், அரசுச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பினேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடினேன்." என்றார்.
"சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றிருப்பதும், கோயில் நிலத்தில் சிலை அமைந்திருப்பதும் பக்தர்களின் நம்பிக்கையைப் பாதிப்பதாகக் கருதுகிறேன். சிலை அமைக்க விரும்புவர்கள் தங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் வைத்துக்கொள்ளலாம். கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சிலையை வைத்திருப்பதை ஏற்க முடியாது. " என்று அவர் கூறினார்.
சிலையை 4 வாரங்களில் இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் குறித்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எம். அருண் சுவாமிநாதன் பிபிசி தமிழிடம் பேசினார்.
அவர் கூறுகையில், "உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, சிலை அமைந்துள்ள இடம் தொடர்பான விவரங்களும் கோயில் நிர்வாகத்தின் ஆட்சேபனையும் முன்வைக்கப்பட்டன. கோயில் நிர்வாகம் அளித்த தகவலின்படி, கும்பாபிஷேகத்தின் போது கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பெரியார் சிலை மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது." என்றார்.
இதையடுத்து, சிலையைப் பாதுகாப்பாக அகற்றி, ஆட்சேபனையற்ற வேறு இடத்திற்கு மாற்றி வைக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நான்கு வாரங்களுக்குள் சிலையை மாற்றி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட மூலாதாரம், Handout
கண்டியூரில் மாற்றி வைக்க வேண்டும் - திராவிடர் கழகம்
இந்த விவகாரம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அமர் சிங்கிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
"கண்டியூரில் பெரியார் சிலை 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2013ஆம் ஆண்டு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றபோது, அப்பகுதியில் இருந்த சிலை திருவையாறு வட்டாட்சியர் முன்னிலையில் கீழ்ப்புறமாக மாற்றி வைக்கப்பட்டது. அப்போது கோயில் மதில் சுவருக்கு வெளியே வீடுகள் மற்றும் கடைகள் இருந்தன. பின்னர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அவை அகற்றப்பட்டபோது, பெரியார் சிலை மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. சிலை நிறுவப்பட்டபோது அதற்கான செலவுத் தொகையை அப்போதைய நடைமுறையின்படி செலுத்தியதாகவும், அதன் பராமரிப்பு தொடர்பான பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.
"பெரியார் சிலை கோயில் நிலத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சிலையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கண்டியூரில் ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்து சிலையை வைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இடம் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம்," என்றார் அவர்.
"நீதிமன்ற உத்தரவை மதித்துச் செயல்பட வேண்டும்"

பட மூலாதாரம், DuraiChandrasekaran/FB
இந்த விவகாரம் குறித்து திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் பிபிசி தமிழிடம் பேசினார்.
"புதிய சிலைகளைப் பொது இடங்களில் நிறுவுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கெனவே உள்ள சிலையை இடமாற்றுவது குறித்து அதிகாரிகள் சட்டப்படி முடிவு செய்ய வேண்டும். சிலையை கண்டியூருக்குள்ளேயே ஏதாவது ஒரு மையப்பகுதியில் வைக்க வேண்டும். சிலை அங்கே இருப்பதால் தற்போது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. இருப்பினும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதை மதித்துச் செயல்பட வேண்டும்," என்றார்.
தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் விளக்கம்

பட மூலாதாரம், Handout
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பிபிசி தமிழ் கேட்டதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, "கண்டியூர் பெரியார் சிலை இடமாற்றம் தொடர்பாக நீதிமன்ற ஆணை இன்னும் கிடைக்கவில்லை. ஆணை கிடைத்தவுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































