வங்கக்கடலில் 'முரசு' புயல் உருவானது - எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

வங்கக் கடலில் உருவானது 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
படக்குறிப்பு, இந்தப் புயலுக்கு 'முரசு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு முரசு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

ஆந்திரா மற்றும் அதனையொட்டிய தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 11:30 மணி வாக்கில் முரசு புயலாக மாறியது என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

வங்கக் கடலில் உருவானது 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
படக்குறிப்பு, நவம்பர் 2-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய-மேற்கு வங்கக் கடற்பகுதியில் தீவிர சூறாவளி புயலாக மேலும் வலுவடையக்கூடும்.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய-மேற்கு வங்கக் கடற்பகுதியில் தீவிர சூறாவளி புயலாக மேலும் வலுவடையக்கூடும்.

அதன்பிறகு, இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 2, 2026 அன்று நள்ளிரவு 11:30 மணி தொடங்கி நவம்பர் 3, 2026 அதிகாலை 4:00 மணி வரையிலான நேரத்தில், நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது இது தீவிர சூறாவளி புயலாக இருக்கும் என்றும் இதில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரையும், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு என்ன?

வங்கக் கடலில் உருவானது 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கையின்படி, இன்று (நவம்பர் 1) திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (நவம்பர் 2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (நவம்பர் 3) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில், அவ்வப்போது 75 கி.மீ வேகத்தை எட்டக்கூடிய பலத்த காற்று வீசக்கூடும்.

இந்த புயலுக்கு முரசு என்ற பெயர் வந்தது எப்படி?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வங்கக்கடலில் உருவெடுத்துள்ள புயலுக்கு முரசு என்று பெயர் வைக்கப்பட்டது எப்படி என்று கூறி கர்நாடக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய போது இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

"புயலுக்கு வைக்கப்படும் பெயர் அரசையோ மதத்தையோ சார்ந்து இருக்கக்கூடாது. தனிப்பட்ட நபரின் பெயராக இருக்கக்கூடாது. எவர் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. உச்சரிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும். 8 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விதத்தில் மக்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அதனடிப்படையில்தான் முரசு என்ற இந்த சொல் தேர்வு செய்யப்பட்டது.

முரசு என்பது பழங்காலத்தில், மன்னர் காலத்தில் ஒரு செய்தியை மக்களுக்கு தெரிவிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஓர் இசைக்கருவி. அதனால் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. இவற்றுடன் வேறு சில பெயர்களையும் பரிந்துரைத்தோம். இந்திய வானிலை ஆய்வு மையம் முரசு என்கிற பெயரைத் தேர்வு செய்தது." என்று புவியரசன் தெரிவித்தார்.

வங்கக் கடலில் உருவானது 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
படக்குறிப்பு, கர்நாடக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன்

புயலுக்கு எவ்வாறு பெயர் சூட்டுகிறார்கள்?

புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 2004-ஆம் ஆண்டில் தொடங்கியது. பல்வேறு நாடுகள் இணைந்து தயாரிக்கும் ஒரு பொதுப் பட்டியலின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய அளவில் ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது.

டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்குப் பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.

பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன.

சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.

ஒரு நாடு தலா 13 பெயர்களைப் பரிந்துரைக்கலாம். இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும். அந்த வரிசையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு முரசு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு