'8 வயது சிறுவன் தாக்கியதில் படுகாயமடைந்த 6 வயது சிறுமி' வகுப்பறைக்குள் 2 மணி நேரம் சிக்கிய கொடுமை - என்ன நடந்தது?

 தாக்குதல், சிறார், பஞ்ச்குலா, காவல்துறை, குற்றம், வன்முறை
படக்குறிப்பு, பள்ளி நிர்வாகத்துடன் தொடர்புடைய மூன்று நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பஞ்ச்குலா காவல்துறை தெரிவித்துள்ளது
    • எழுதியவர், நவ்ஜோத் கெளர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெறும் சில விவரங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் பள்ளி ஒன்றில், 8 வயது சிறுவன் 6 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி முதல்வர் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

காவல்துறை முதல் தகவல் அறிக்கையின்படி, இந்தச் சம்பவம் 2026 அக்டோபர் 28-ஆம் தேதி பள்ளியில் நிகழ்ந்துள்ளது.

இந்த வழக்கில் பள்ளி முதல்வர், வகுப்புப் பொறுப்பாசிரியர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர் ஆகிய மூவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

என்ன நடந்தது?

முதல் தகவல் அறிக்கையின்படி, அக்டோபர் 28-ஆம் தேதி, பள்ளிக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள ஓர் அறையில், 6 வயது சிறுமியை மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிறுமிக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகம், முதல்வர், வகுப்பு ஆசிரியர், பிற பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் கவனக்குறைவே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளி நேரம் முடிந்த பின்னரும் காயமடைந்த சிறுமி அதே அறையில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இருந்ததாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தந்தை பிபிசியிடம் கூறியது என்ன?

அக்டோபர் 28-ஆம் தேதி பள்ளி முடிந்த பிறகும் தனது மகள் வீட்டிற்கு வரவில்லை என்பதால், பள்ளிக்குச் சென்று தேடியதாகச் சிறுமியின் தந்தை பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

"நாங்கள் பள்ளிக்குள் சென்று தேடினோம். ஆனால், அங்கிருந்த யாருக்கும் என் மகள் எங்கே இருக்கிறாள் என்பது தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

"அப்போது ஒரு சிறு குழந்தை, என் மகள் மேல் தளத்தில் உள்ள வகுப்பறையில் இருப்பதாகக் கூறியது. நான் அங்கு சென்றபோது, வகுப்பறை வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. என் மகள் உள்ளே இருப்பதைக் கண்டேன். பின்னர், பூட்டைத் திறந்து அவளை வெளியே அழைத்து வந்தோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுமியை முதலில் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றதாகவும், பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பிஜிஐ மருத்துவமனைக்கு மாற்றியதாகவும் அவர் கூறினார்.

சிறுமிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தபோதிலும், அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என பிபிசிக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் உடல்நிலை குறித்து பிஜிஐ மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

தாக்குதல், சிறார், பஞ்ச்குலா, காவல்துறை, குற்றம், வன்முறை
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட சிறுமி பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், பஞ்ச்குலா காவல் துணை ஆணையர் அதிதி சிங் தெரிவித்தார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பஞ்ச்குலா காவல் துறை துணை ஆணையர் அதிதி சிங் வெளியிட்ட காணொளி அறிக்கையில், "பாதிக்கப்பட்ட சிறுமி சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையைக் கடந்து, நலமுடன் உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

"இந்தச் சம்பவத்தில் 8 வயது சிறுவன் ஈடுபட்டுள்ளான். சிறார் நீதிச் சட்டத்தின்படி, நிபுணர்கள் அவனை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

"சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தியச் சட்டத்தின்படி, 8 வயது சிறுவனைத் தண்டிக்கவோ சிறையில் அடைக்கவோ முடியாது என்று பஞ்ச்குலா காவல் துறையின் குற்றப்பிரிவு துணை ஆணையர் அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழல்களில், சிறுவனைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவனது நடத்தையைச் சீரமைப்பதிலும், தேவையான மனநல ஆலோசனைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படும்.

அதன்படி, இந்தச் சம்பவத்தில் சிறுவனின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறார் நீதிக் குழுமம், அந்தச் சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தங்கவைக்க உத்தரவிட்டுள்ளதாக அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

ஹரியாணா மாநில மனித உரிமைகள் ஆணையம் கூறியது என்ன?

தாக்குதல், சிறார், பஞ்ச்குலா, காவல்துறை, குற்றம், வன்முறை
படக்குறிப்பு, ஹரியாணா கல்வித்துறை அமைச்சர் மஹிபால் தண்டா (இடது) மற்றும் ஹரியாணா மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி லலித் பத்ரா

இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஹரியாணா அரசு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விசாரணையில் ஏதேனும் கவனக்குறைவு கண்டறியப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலக் கல்வித்துறை அமைச்சர் மஹிபால் தண்டா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஹரியாணா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்தச் சம்பவத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதையடுத்து, பஞ்ச்குலா மாவட்டக் கல்வி அதிகாரியிடம் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், வருகைப் பதிவேடுகள் மற்றும் சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திரிப்தி ஹரிபால் ஷியோரன், சிறுமியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

ஹரியாணா மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி லலித் பத்ராவும் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் அல்லது பிற அதிகாரிகள் தரப்பில் கவனக்குறைவு இருந்தது விசாரணையில் தெரியவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மாநிலக் கல்வித்துறையும் மாவட்ட அளவிலான விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு இரண்டு நாட்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு