பிக்பாஸ்: சக ஆண் போட்டியாளரிடம் நேசம் காட்டிய பெண், மேடைக்கே வந்த பெற்றோர் - என்ன நடந்தது?

நேஹா ஃபாத்திமா
படக்குறிப்பு, நேஹா ஃபாத்திமா
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவரின் பெற்றோர், தங்கள் மகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்தனர். அப்போட்டியாளர் சக போட்டியாளர் ஒருவரை விரும்புவதாக நிகழ்ச்சியில் கூறியதாலேயே அப்பெற்றோர் வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தப் பெண் போட்டியாளர் ஒரு முஸ்லிம் ஆவார். அப்பெண் விரும்புவதாக கூறிய சக போட்டியாளர் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் போட்டியாளரிடம் அவரது பெற்றோர் பேசியது, அதற்கு அவர் அளித்த பதில் போன்றவை தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதையொட்டி பெரும் விவாதங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. என்ன நடந்தது?

பிக் பாஸ் மலையாள சீசன்-8 தற்போது நடைபெற்று வருகிறது. 50 நாட்களைக் கடந்துள்ள இந்த சீசனை மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் நேஹா ஃபாத்திமா என்பவர் ஒரு போட்டியாளராக உள்ளார். இவர், விமான நிலைய பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், சமூக ஊடக இன்ஃப்ளூயென்சராக கவனம் ஈர்த்துள்ளார். ஃபேஷன், வாழ்வியல் உள்ளிட்டவை குறித்து அவர் தன் சமூக ஊடக பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு பிரபலமானவர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சுமார் 3 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த பிக் பாஸ் சீசனில் நிகழ்ச்சியின் நடுவே 'வைல்ட் கார்ட்' போட்டியாளராக பங்கேற்றவர் சந்தோஷ் ராஜ். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைவதற்காக இணைய பிரபலங்கள், பொதுமக்கள் சார்பில் சிலர் பங்கேற்ற 'அக்னிபரீக்‌ஷா' எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் வாயிலாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொலைக்காட்சி பிரபலமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளையாட்டுகளில் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாக விமர்சனம் உண்டு. இதுதொடர்பாக தொகுப்பாளர் மோகன்லாலும் அவ்வப்போது எச்சரிக்கை செய்து வந்துள்ளார். சந்தோஷ் ராஜ் தன்னை 'தாஷி' என்ற பெயரில் அழைப்பதையே விரும்புவதாக நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேஹா மற்றும் சந்தோஷ் ராஜ் இருவருக்கும் ஒருவரையொருவர் "பிடித்திருப்பதாக" வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு எபிசோடில் நேஹா சந்தோஷ் ராஜிடம், "நான் இதை செய்தால் என் குடும்பத்தை அது சங்கடப்படுத்தும். அதை அறிந்தும் இப்படி நடந்திருக்கிறது எனில், ஒருவர் மீதான உணர்வுகள் வளர்வதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எனக்கு உன்னை பிடித்திருக்கிறது," என கூறியுள்ளார்.

"உன் மீதான என் உணர்வுகளை இங்கு (நிகழ்ச்சியில்) வெளிப்படுத்த மாட்டேன். இங்கிருந்து வெளியேறிய பின்பும், என் குடும்பம் சம்மதித்தால் நாம் இதுகுறித்து சிந்திப்போம். என் குடும்பத்துக்கு எதிராக நான் செயல்பட மாட்டேன். நம் இரு குடும்பங்களும் சம்மதித்து, நமக்கும் அதே உணர்வுகள் தொடர்ந்தால் வெளியே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். நாம் இங்கே இருக்கும் வரை கூடுமானவரை நான் உன்னிடமிருந்து விலகி இருக்கிறேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

சந்தோஷ் ராஜ்
படக்குறிப்பு, சந்தோஷ் ராஜ்

இந்நிலையில் தான், ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நேஹாவின் பெற்றோர் வந்துள்ளனர். "நேஹா உன்னை காண இருவர் வந்திருக்கின்றனர்" என மோகன்லால் கூற, அவர்களின் பெற்றோர் மேடைக்கு வந்தனர். அவருடைய தந்தை முகமது ஷெமி, நேஹாவிடம், "நேஹா உனக்கு நாங்கள் யார் என ஞாபகம் இருக்கிறதா? அப்படி உனக்கு ஞாபகம் இருப்பதாக தோன்றவில்லை" என கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மற்றவர்கள் விளையாட்டின் உத்திகள் மீது கவனம் செலுத்தும்போது நேஹா நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உணர்வுரீதியாக நிகழ்ச்சியை அணுகுவதாக அவருடைய தாய் ஷஹ்ரூபா ஷமீம் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கூறினார்.

"இந்த வீட்டில் உள்ள எல்லோரும் விளையாட்டுகளை விளையாடுகின்றனர். ஆனால், நீ இன்னும் உணர்வுகளில் இருந்து வெளிவராமல் இருக்கிறாய். உன்னை மற்றவர்கள் பயன்படுத்துகின்றனர். நாங்கள் செய்ய வேண்டாம் எனக் கூறிய அதே விளையாட்டைதான் நீ விளையாடிக் கொண்டிருக்கிறாய். நாங்கள் தான் இப்போது வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்," என கூறினார்.

இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்து காணப்பட்டார் நேஹா. பெற்றோர் நினைப்பது போன்று ஒன்றும் நடக்கவில்லை என்றும் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை என்றும் நேஹா தெரிவித்தார்.

பெற்றோருக்கு பதிலளித்த நேஹா, "செய்யக்கூடாத விஷயத்தை ஒன்றும் செய்யவில்லை. தாஷி உடன் தான் அவ்வளவு நெருக்கமாக ஒன்றும் இல்லை. நாங்கள் நிகழ்ச்சியில் ஒரு இடைவெளியுடனேயே பழகுகிறோம். திட்டமிட்டு நடக்கவில்லை, தானாக நிகழ்ந்துவிட்டது. இப்படி விரும்ப கூடாது என எனக்கு தெரியும், எவ்வளவு பிரச்னைகள் உள்ளன என்பதும் தெரியும். எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன என்பதும் தெரியும். அதனால் நான் மனதை கட்டுப்படுத்த பெரிதும் முயற்சி செய்தேன், அது உங்களுக்கு தெரியுமா? இதை எப்படி புரியவைப்பதென தெரியவில்லை, நான் உங்களை புரிந்துகொள்வதைப் போல நீங்கள் என்னை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நான் இதுவரை எதற்காகவும் உங்களிடம் பிடிவாதம் பிடித்ததில்லை. இப்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்பதை என்னால் இங்கு வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. இந்த சூழலில் எனக்கு என்ன தோன்றும் என்பதை யோசித்துப் பார்த்தால் எல்லோருக்கும் புரியும்." என கூறினார்.

நேஹா
படக்குறிப்பு, நேஹா

நிகழ்ச்சியில் பேசிய மோகன்லால், "எனக்கும் ஒரு மகள் இருக்கிறார். நேஹாவின் பெற்றோர் அவரை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்," என்றார்.

"இங்குள்ள நான் உட்பட போட்டியாளர்கள் அனைவருக்கும் வெளியே ஒரு வாழ்க்கை இருக்கிறது. போட்டியாளர்களுக்கு வெளியே பெற்றோர்கள் உள்ளனர். இங்குள்ளவர்களை விமர்சிக்கும் யூடியூபர்கள் உள்ளிட்டோர் அதை புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

நேஹா நல்ல போட்டியாளர் அவர் நன்றாக இனி விளையாடுவார் என்றும் அவர் கூறினார். நேஹாவின் பெற்றோர் மேடையிலிருந்து இறங்கியவுடன் மோகன்லால் நேஹாவை சமாதானம் செய்தார்.

நிகழ்ச்சியின் இந்த பகுதி முழுவதும் சந்தோஷ் ராஜ் அமைதியாக இருந்தார்.

இதன்பின், நேஹா சக போட்டியாளர் ஒருவரிடம், "எனக்கு தாஷாவை பிடிக்கும். எனக்கு இப்போதும் தாஷாவை பிடித்திருக்கிறது. நான் அவரைதான் தேர்வு செய்வேன். அவர் தவறாக எதையும் செய்யவில்லை," என்றார். உணர்வுகளை வெளிக்காட்டாமல் முழுவதும் மறைப்பதற்கு தான் ஒரு ரோபோ அல்ல என்றும் நேஹா தெரிவித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் நேஹாவை சந்தோஷ் ராஜ் சமாதானம் செய்தார்.

சமூக ஊடகங்களில் விவாதம்

நேஹாவின் பெற்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பலவிதமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் சிலர், 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் காதலிப்பது என்பது அவரின் உரிமை, அதை எப்படி அவரின் பெற்றோர் கேள்வியெழுப்ப முடியும் என விவாதிக்கின்றனர். இந்த சம்பவத்துக்குப் பிறகும் நேஹா உறுதியுடன் இருப்பதாகவும் சிலர் அவரை பாராட்டியும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதே சமயம், நேஹாவின் பெற்றோருக்கு அவர்களின் கவலைகளை தெரிவிப்பதற்கும் தன் மகளின் நலன் மீது அக்கறை கொள்வதற்கும் முழு உரிமை உள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர். நேஹா - சந்தோஷ் ராஜ் இருவருக்குமிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள், அதனால் நேஹாவின் பெற்றோர் கவலையடைந்திருக்கலாம் என்றும் பதிவுகளை வெளியிடுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு