'மீண்டும் இணைந்த பின்பும் கிடைக்காத கட்சிப்பதவி' - எஸ்.பி. வேலுமணியின் நிலை என்ன?

பறிபோன கட்சிப்பதவி: அதிமுகவிலிருந்து பிரிந்து சேர்ந்த வேலுமணி தரப்பின் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், X/@AIADMKOfficial

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து, மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்ட அதிமுகவிலிருந்து பலரும் விலகி, தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்துள்ளனர். 4 அதிமுக உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் போன்றோர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் சேராமலும், தவெகவிலும் இணையாமலும் உள்ளனர்.

இப்போதைக்கு அமைதியாக இருக்க விரும்புவதாக பிபிசியிடம் கூறினார் சி.வி.சண்முகம். வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் உள்ளிட்ட பல அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்துவிட்ட நிலையில் அவர்களின் கட்சிப்பதவிகள் மீண்டும் வழங்கப்படவில்லை.

இதுபற்றி வேலுமணி தரப்பில் யாரும் பேச முன்வரவில்லை. வேலுமணிக்குப் பதிலாக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செ.ம.வேலுச்சாமி, தனக்கு எல்லோரும் ஆதரவளித்துவருவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

''அதிமுக மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில், இருக்கும் கட்சியைக் காப்பாற்றுவதற்கு மீண்டும் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது அவசியம்'' என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா.

பறிபோன கட்சிப்பதவி: அதிமுகவிலிருந்து பிரிந்து சேர்ந்த வேலுமணி தரப்பின் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், X/@AIADMKOfficial

தவெகவுக்கு ஆதரவளித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

தமிழக வெற்றிக்கழகம் 107 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆட்சியமைக்க முயன்றபோது, பல கட்சிகளின் ஆதரவைத் தேடியது. திமுக கூட்டணிக் கட்சிகளிடம் தவெக முதலில் ஆதரவு கோரியது.

பின்பு அதிமுக தரப்பிலும் சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவை மீறி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், தவெக அரசுக்கு வாக்களித்தனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுகவினர் யாருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. மாறாக திமுக கூட்டணியிலிருந்து சென்று ஆதரவளித்த காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது. இதனால் தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுகவினரின் நிலை கேள்விக்குறியானது.

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேருடைய கட்சிப் பதவிகளை பறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

இதற்கிடையில் வேலுமணி தரப்பிலிருந்த அதிருப்தி அணியிலிருந்து ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினராக மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர்.

மற்றொரு புறத்தில் இதே அணியிலிருந்த 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களுடைய பதவியையே ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். இதனால் வேலுமணி தரப்பின் நிலைமை மேலும் மோசமானது

அதன்பின்பே, வேலுமணி தலைமையில் மேலும் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை மீண்டும் இணைத்துக் கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, ''கட்சிதான் எங்களுக்கு உயிர். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடுதான். ஒரு கட்சிக்கு வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால் தோல்விக்கான காரணத்தை ஆராய்வது அவசியம். ஒதுக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், குழு அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பரிசீலித்து செய்வதாக பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.'' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, 21 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

அதிமுக

பட மூலாதாரம், X/SP Velumani

'இப்போது அமைதியாக இருக்க விரும்புகிறேன்!' - சி.வி.சண்முகம்

இந்த சூழலில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் இருவரும் தவெகவில் சேராமலும், மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்காமலும் உள்ளனர்.

தனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட புதிய மாவட்டச்செயலாளரிடம் புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்த சி.விஜயபாஸ்கரிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் எந்த பதிலையும் தரவில்லை.

தங்களின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு என்ன என்று சி.வி.சண்முகத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அதுபற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போதைய நிலையில் எதையும் பேசவிரும்பவில்லை.'' என்றார்.

வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மற்ற பலரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்தது போன்று தாங்களும் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, ''இப்போதைக்கு அமைதியாக இருக்க விரும்புகிறேன். சில நாட்கள் போகட்டும். அப்போது விரிவாகப் பேசுகிறேன். '' என்று தெரிவித்தார்.

சண்முகம், சி.விஜயபாஸ்கரைப் போலவே அதிமுக தலைமையின் மீது பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். வெல்லமண்டி நடராஜன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இப்போதைக்கு வேறு எந்தக் கட்சியிலும் சேரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சியை விட்டு விலகியது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, ''கட்சியின் தலைவர்கள், மூத்த நிர்வாகிகளிடம் இருக்கும் ஈகோ, கட்சியின் வளர்ச்சியைத் தடுத்து வருகிறது. ஆரோக்கியமான கலந்துரையாடல், விவாதம் நடப்பதில்லை. எஞ்சியுள்ளதாவது மிஞ்சுமா என்ற நிலையில், அதற்கும் பஞ்சம் ஏற்படும் நிலை. இனியும் கட்சியிலிருந்து நீக்குவது, ஒதுக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் கட்சியை பலப்படுத்த வேண்டும்.'' என்று கூறினர்.

முன்னாள் நாடாளுமன்ற அதிமுக குழுத்தலைவரும், மருத்துவர் அணி செயலாளருமான வேணுகோபால், ''பட்டியல் சமூக மக்களின் நம்பிக்கையை அதிமுக இழந்துவிட்டது. அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லவில்லை.'' என்று குற்றம்சாட்டி, அதிமுகவை விட்டு விலகியுள்ளார். அதிமுக தொடர் தோல்விகளுக்கு இதுபோன்ற சமூக காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அதிமுகவிலிருந்து பலரும் விலகி, தவெகவில் இணைந்து வருவதுடன், பலரும் கட்சியை விட்டு ஒதுங்கியும் வருவது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் தற்போதைய நிலைக்கு, அதன் தலைமையின் அணுகுமுறைதான் காரணமென்று ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக

பட மூலாதாரம், X/SP Velumani

செ.ம.வேலுச்சாமியும் எஸ்.பி.வேலுமணியும்

இவை ஒரு புறமிருக்க, வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்ட நிலையிலும், அவர்கள் யாருக்கும் மீண்டும் கட்சிப்பதவி வழங்கப்படவில்லை.

குறிப்பாக அதிருப்தி அணிக்குத் தலைமை வகித்த வேலுமணியிடமிருந்து கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு வழங்கப்பட்டது.

வேலுமணி மீண்டும் கட்சியில் இணைந்த பின்னும் அவருக்கு அந்தப் பதவி திருப்பித் தரப்படாத நிலையில், கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று செ.ம.வேலுச்சாமி புதிய மாவட்டச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகமாக இதயதெய்வம் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜூனன், கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் மற்றும் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட பலரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் வேலுமணி பங்கேற்கவில்லை.

பிபிசியிடம் பேசிய செ.ம.வேலுச்சாமி, ''தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் கோவையை மீண்டும் அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டுமென்று கூறி, இந்தப் பொறுப்பை எனக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். எனக்கு எல்லோருமே நன்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் கிடைத்துள்ள இந்த பொறுப்பை சிரத்தையுடன் செய்வதற்கு என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன்.'' என்றார்.

மற்ற விஷயங்கள் குறித்து இப்போது எதுவும் பேசவிரும்பவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று அதிமுக நிர்வாகிகள் பலரிடமும் பேசியபோது, வேலுமணி குறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், வேலுமணியின் தீவிரமான ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பதுடன் அவருக்கு நெருக்கமாகவும் இருந்தவர்கள்.

இதயதெய்வம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த வேலுமணியின் புகைப்படங்களும் அகற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதிமுக

பட மூலாதாரம், X/@AIADMKOfficial

ஜெயலலிதா மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரான பின்பு, அதிமுகவில் வேலுமணியின் கை பெரிதும் ஓங்கியது. அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகிக்கும் அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது.

ஆனால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற 9 தொகுதிகளையும் தவெக மற்றும் திமுகவிடம் இழந்துள்ளது.

இந்நிலையில்தான் தவெகவுக்கு ஆதரவளித்த விவகாரத்தில், வேலுமணிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் ஏற்பட்டு, கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. மீண்டும் இணைந்த பின்னும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

வேலுமணி அமைச்சராக பொறுப்பேற்கும் முன்பாக, கோவையில் செ.ம.வேலுச்சாமிதான் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்து வந்தார். பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2001 மற்றும் 2006 ஆகிய இரு தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றார். அதில் 2001–2006 வரையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றினார்.

மீண்டும் 2011 அதிமுக ஆட்சியின்போது, கோவை மாநகராட்சி மேயராக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருடைய மேயர் பதவிக்காலம் முழுதாக முடிவதற்குள் 2014 ஆம் ஆண்டில் அவரை அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார் ஜெயலலிதா. தற்போது கோவை திமுக எம்பியாகவுள்ள ராஜ்குமார் அதிமுக சார்பில் மேயராக வெற்றி பெற்றார்.

அதற்குப் பின்பு செ.ம.வேலுசாமிக்கு 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அவர் திமுகவிற்குப் போவதாக பலமுறை தகவல்கள் பரவிய நிலையில், இறுதிவரை அதிமுகவிலேயே இருந்து வந்தார். அவருக்குதான் தற்போது வேலுமணிக்கு வழங்கப்பட்டிருந்த மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அதிமுகவில் மட்டுமின்றி வேலுமணியின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்குமென்ற பேச்சுகளும் எழத்துவங்கியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக வேலுமணி சென்றபோது, அங்கு அவருக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பியது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

பிபிசியிடம் பேசிய கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், ''எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பதைத்தான் நாங்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். கட்சி தற்போதுள்ள நிலையில், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் மிகவும் அதிகமாகவுள்ளது. ஆனால் மீண்டும் இணைந்தவர்களுக்கு கட்சிப் பதவி வழங்குவது பற்றி கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்.'' என்றார்.

இதுகுறித்து அதிமுகவின் செய்தித்தொடர்பாளர்கள் பலரிடம் பேசியபோதும், யாருமே கருத்துத் தெரிவிக்க முன்வரவில்லை. கட்சித்தலைமை என்ன முடிவில் இருக்கிறது என்பது தெரியாமல் எதையும் தெரிவிக்க முடியாது என்று அவர்களில் ஒருவர் தெரிவித்தார். வேலுமணி தரப்பில் பேச முயற்சி செய்தபோதும், அவருடைய தரப்பிலும் எந்த பதிலையும் பெறமுடியவில்லை.

திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா
படக்குறிப்பு, திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா

பிபிசியிடம் பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா, ''அதிமுக என்ற கட்சிக் கட்டமைப்பை அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது. அந்தக் கட்சியின் பெயர், சின்னத்துக்காகவே தொண்டர்கள் இன்னும் விசுவாசத்துடன் இருக்கிறார்கள். கட்சியிலிருந்து கொண்டு பதவிகளை அனுபவித்து விட்டு, கட்சிக்கு இக்கட்டான நிலை வரும்போது வெளியே செல்பவர்களை அவர்கள் நிச்சயமாக அடையாளம் கண்டு பாடம் கற்பிப்பார்கள்.'' என்றார்.

வேலுமணி, உள்ளிட்டோர் பதவி ஆசையில்தான் தவெகவை ஆதரிக்க வெளியே சென்றிருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தால் திரும்ப வந்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும், முக்கியமாக கட்சிப் பதவியையும் தரவேண்டியது எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பு என்ற துரை கருணா, ஏற்கெனவே அவருடைய நடவடிக்கைகளால்தான் கட்சி இவ்வளவு பலவீனமாகியுள்ளது என்றார்.

''தொண்டர்களின் வாக்குகளைப் பெற வேண்டுமெனில் கட்சியில் ஒருங்கிணைப்பு வேண்டும். ஆனால் கட்சியில் விலக்கப்பட்டவர்கள், விலகியவர்கள், அதிருப்தியாளர்கள் என எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டுமென யாராவது குரல் கொடுத்தால் அவர்களையும் எடப்பாடி பழனிசாமி நீக்குகிறார் அல்லது பதவியைப் பறிக்கிறார். இது கட்சியை அழித்துக்கொண்டிருக்கிறது.'' என்றார் துரை கருணா.

''பதவி ஆசைக்காக தவெகவை வேலுமணி ஆதரித்திருக்கலாம். ஜெயலலிதா மறைந்தபின்னும் 2021 தேர்தலில் கோவையில் 10க்கு 10 தொகுதிகளை வென்றது வேலுமணியால்தான். செ.ம.வேலுச்சாமி, ஜெயலலிதாவால் பாதியில் பதவி பறிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர். அதனால் வேலுமணி உள்ளிட்டோருக்குரிய அங்கீகாரத்தை தருவதுதான் சரி.'' என்றார் துரை கருணா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு