'டைனோசருடன் மோதுவது போல' - சுறாவிடம் சண்டையிட்டு உயிர் தப்பிய இளம்பெண்

 லியா ஸ்டீவர்ட்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, கடந்த ஜூன் மாதம் சிட்னியின் கூஜி கடற்கரையில் லியா ஸ்டீவர்ட்டை ஒரு சுறா தாக்கியது.
    • எழுதியவர், லானா லாம்
    • பதவி, சிட்னி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சுறா மீன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவர், 4 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளைச் சுறாவை நேருக்கு நேர் எதிர்கொண்ட தருணத்தையும், அதைத் தொடர்ந்து பலமுறை குத்தியதையும் விவரித்துள்ளார்.

34 வயதான லியா ஸ்டீவர்ட், கடந்த ஜூன் மாதம் கூகி கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது, சுறா அவரது தொடை மற்றும் கைகளைக் கடித்ததால் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதில் அவருக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதுடன், காயங்கள் மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவர்கள் அவரது இடது கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நேர்காணலில், ஒரு குழந்தையின் தாயான அவர், தனது கைக்குழந்தைக்காக உயிருடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறினார்.

"என் மனதில், 'நீ என்னை என் மகளிடம் இருந்து அழைத்துச் செல்ல முடியாது' என்று நினைத்துக்கொண்டேன். பின்னர் அதை மீண்டும் மீண்டும் குத்தத் தொடங்கினேன். அது ஒரு டைனோசருடன் சண்டையிடுவது போல இருந்தது" என்றார்.

அதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் ஸ்டீவர்ட் தனது வழக்கமான சனிக்கிழமை காலை நீச்சலை முடித்துவிட்டு கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆபத்து குறித்து அவருக்கு எச்சரிக்கை கிடைத்தது.

"எனக்குப் பின்னால் ஒரு பெண்... கூர்மையான சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, அவளுக்குப் பின்னால் மிகப் பெரிய, மிகப் பெரிய துடுப்பு தெரிந்தது. அது மிகவும் பிரமாண்டமாக இருந்தது" என்று நைன் நெட்வொர்க்கின் 60 மினிட்ஸ் நிகழ்ச்சியிடம் அவர் கூறினார்.

"அதன் அளவைப் பார்த்தபோது, அது டால்பின் அல்ல என்பதை உணர்ந்தேன்."

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஸ்டீவர்ட் திரும்பிப் பார்த்தபோது, சுறா "அங்கேயே இருந்தது... அது மேலும் மேலும் நெருங்கிக்கொண்டே இருந்தது" என்பதை உணர்ந்தார்.

சுறாவின் முகம் "பயங்கரமாக" இருந்ததாகவும், அதற்கு "சிறிய கருப்பு மணிக்கண்களைப் போன்ற கண்கள்" இருந்ததாகவும், அதன் "பற்களும் வாயும் மிகப் பிரமாண்டமாக" இருந்ததாகவும் அவர் கூறினார்.

"நாங்கள் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தோம்" என்று ஸ்டீவர்ட் கூறினார். ஒரு கட்டத்தில், சுறாவின் முகம் அவரது முகத்திலிருந்து வெறும் 30 செ.மீ. தொலைவில் இருந்தது.

அந்த தருணத்தில்கூட ஸ்டீவர்ட்டின் எண்ணங்கள் அமைதியாகவே இருந்தன.

"நான் வலது கை பழக்கம் கொண்டவள். அதனால், 'இடது கையால் ஒரு குத்து விடுவோம்' என்று நினைத்தேன்" என்றார்.

"நான் எனது இடது கையை வீசினேன். அது எனது முன்கையைப் பிடித்து, தோல், தசை என அனைத்தையும் கிழித்தெடுத்தது... எனது முன்கைக்கும் கைக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது."

சுறா ஸ்டீவர்ட்டை தண்ணீருக்குள் இழுக்கத் தொடங்கியது. அவரது காலையும் அது பிடித்துக்கொண்டது.

"'இதுதான் முடிவு, இப்படித்தான் நான் இறக்கப் போகிறேன்' என்று நினைத்தேன். பின்னர் எனது மகள் ஆகஸ்ட் நினைவுக்கு வந்தாள். அவளுக்கு அம்மா இருக்க மாட்டார், அம்மா இல்லாமல் அவள் வளர வேண்டியிருக்கும் என்று நினைத்தேன்" என்று கண்ணீரை அடக்கியபடி கூறினார்.

"அவளை விட்டுச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிந்தது... இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் எப்படியோ நான் மீண்டும் என்னைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்று உறுதியாக நினைத்தேன்"என அவர் பகிர்ந்துகொண்டார்.

சுறாவுடன் சண்டையிடுவது "செங்கல் சுவரைக் குத்துவது போல" இருந்ததாகக் கூறிய அவர், தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். "நான் ஒரு முறை மிகவும் பலமாகக் குத்தியிருக்க வேண்டும். அதனால் அது என்னை விட்டுவிட்டது. அது உலகிலேயே மிகவும் கடினமான விஷயம். ஆனால் நான் போராடி அங்கிருந்து தப்பித்தேன்."

மற்ற நீச்சல் வீரர்கள் ஸ்டீவர்ட்டை கரைக்கு இழுத்துச் சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் செயற்கையாக கோமா நிலையில் வைக்கப்பட்டதுடன், கிட்டத்தட்ட அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

தனக்கு நேர்ந்த கொடூரமான அனுபவத்தையும் மீறி, "கடற்கரையில் சுறாவால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெண்" என்று தான் நினைவுகூரப்பட விரும்பவில்லை என்று கூறும் ஸ்டீவர்ட், "சுறாவின் முகத்தில் குத்திய பெண் என்றுதான் நான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு