ஓமன்: கப்பலில் இருந்து மீட்கப்பட்ட தூத்துக்குடி இளைஞரின் உடல் எங்கு உள்ளது? - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், FSUI
ஓமன் நாட்டு கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி உயிரிழந்தார். இதையடுத்து, அவருடைய உடல் தற்போது கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஓமன் நாட்டின் டுக்ம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த , எம்டி செலஸ்டியல் (MT Celestial) என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்த்தநாதன் என்ற இரண்டாம் நிலை அதிகாரி, கடந்த ஜூன் 11ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஆனால், "முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும்" நிஷாந்த் உயிரிழந்துள்ளார் என நிஷாந்தின் குடும்பத்தினரும், இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எஃப்எஸ்யூஐ (FSUI)-உம் குற்றம்சாட்டுகிறார்கள்.
நிஷாந்தின் உடலைப் பாதுகாக்க போதுமான குளிரூட்டும் வசதிகள் கப்பலில் இல்லாததால், அவரது உடல் அழுகத் தொடங்கிவிட்டது என கடந்த 13ஆம் தேதி எக்ஸ் தளத்தில் எஃப்எஸ்யூஐ பகிர்ந்த காணொளி வைரலான நிலையில், அதன் பின்னரே இந்த பிரச்னை குறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது நிஷாந்தின் உடல் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
'கணவர் இறந்ததை மறைத்துள்ளார்கள்'

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் தனது 21ஆம் வயது முதலே கப்பல் பணியில் ஈடுபட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
நிஷாந்த் உயிர்த்தநாதனுக்கு சரோபின் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
நிஷாந்திடம் ஜூன் 5ஆம் தேதி பேசியதாகக் கூறும் சரோபின், "குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்து, மொட்டையடிக்க வேண்டும், புதுத்துணிகள் எடுக்க வேண்டும். சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுகிறேன் என என் கணவர் கூறினார்" என்றார்.
"மத்திய கிழக்கில் நிலவிய போர் சூழல் காரணமாக கப்பல் குழு சில சிக்கல்களை எதிர்கொள்கிறது. கப்பல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, உணவுப் பொருட்கள் பற்றாக்குறையும் உள்ளது என்று அவர் கூறினார்."

தொடர்ந்து பேசிய சரோபின், "ஜூன் 8ஆம் தேதி அவரைத் தொடர்புகொண்டபோது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
சில நாட்கள் கழித்து, சமூக ஊடகங்களில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் பார்த்து பதறிப்போனேன். அவருடன் இதற்கு முன் பணிபுரிந்த ஒரு நபரிடம் விசாரித்தபோது, அவர் இறந்துவிட்டதாகக் கூறி சில புகைப்படங்களை அனுப்பினார்" என்கிறார்.
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசியவர், "கடந்த 4 நாட்களாக 'ரோமானா ஷிப் மேனேஜ்மென்ட் கோ லிமிடெட்' என்ற கப்பல் நிறுவனத்தின் நிர்வாகிக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பி வருகிறேன். இதுவரை பதில் இல்லை. எனது கணவரின் இறப்புக்கான காரணம் எனக்கு தெரிய வேண்டும். எனது கணவர் இறந்ததை என்னிடமிருந்து மறைத்துள்ளார்கள். சமூக ஊடகங்கள் இல்லையென்றால் இந்தப் பிரச்னை வெளியே வந்திருக்காது" என்கிறார்.
எம்டி செலஸ்டியல் கப்பல் 'ரோமானா ஷிப் மேனேஜ்மென்ட் கோ லிமிடெட்' சொந்தமானது தானா என்பதை மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்னும் உறுதி செய்யவில்லை.
'உடலைக் கூட பாதுகாக்க முடியாத சூழல்'

பிபிசி தமிழிடம் பேசிய சரோபினின் சகோதரர் ராபின், "நிஷாந்துக்கு எந்த நாள்பட்ட நோய்களும் கிடையாது. அவருக்கு ஏற்பட்ட கடும் காய்ச்சலுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை. இதுவே எங்களுக்கு கிடைத்த தகவல்" என்றார்.
"நிஷாந்த் 11ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அதற்கு முன்னதாக நிஷாந்தின் நிலைமை கவலைக்கிடமானபோது, அவரை வெளியேற்ற கப்பலில் இருந்தவர்கள் ஹெலிகாப்டர் உதவியைக் கோரியுள்ளனர். இருப்பினும், கப்பல் நிறுவனத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவரது உடலைக் கூட பாதுகாக்க முடியாத சூழல் அங்கு 3 நாட்களுக்கு நிலவியுள்ளது".
குடும்ப பொருளாதாரச் சூழல் காரணமாகவே நிஷாந்த் ஆபத்தான கப்பல் பணிக்கு சென்றார் எனக்கூறும் ராபின், "3 வயதில் ஒரு பெண் குழந்தை, 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகளுடன் சரோபின் ஆதரவற்று நிற்கிறார். அவர்களுக்கு தமிழக அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். அதேபோல, கப்பல் நிறுவனம் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும், முறையான இழப்பீடும் வழங்க வேண்டும். அவரது உடலை சீக்கிரமாக தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசு கூறியது என்ன?
நிஷாந்தின் உடலை மீட்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அயலக தமிழர் நல வாரியத்திடம் பிபிசி விளக்கம் கேட்டபோது, "நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்காக ஓமனில் உள்ள இந்திய தூதரகத்துடன் தமிழக அரசு இணைந்து செயல்பட்டுவருகிறது.
தற்போது நிஷாந்தின் உடல் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, நிஷாந்தின் உடல் இந்தியா கொண்டுவரப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
நிஷாந்த, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்டி செலஸ்டியல் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தார் என்று மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகம் கூறியுள்ளது.
அவருக்கு கடந்த ஜூன் 8ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்றும், ஆனால் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் ஜூன் 11ஆம் தேதி அவர் உயிரிழந்தார், அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, இது தொடர்பாக கப்பல் குழு மற்றும் நிர்வாகத்திடம் தொடர்பில் இருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஆனால், நிஷாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் உதவிக்காக கப்பலில் இருந்து தொடர்ச்சியான அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும், பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவும் நிஷாந்தை அங்கிருந்து வெளியேற்றவும் தாமதமானதாக எஃப்எஸ்யூஐ தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























