இந்திய மாலுமிகளுடன் ரஷ்ய கப்பல் பிரிட்டிஷ் படையால் சிறைபிடிப்பு - இந்தியர் ஒருவர் கைது

பட மூலாதாரம், UK MOD
- எழுதியவர், பேட்ரிக் ஜாக்சன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஞாயிற்றுக்கிழமை ஆங்கில கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பலை பிரிட்டிஷ் படை கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, பொருளாதாரத் தடைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் இந்தியர் ஒருவரை தேசிய குற்றவியல் முகமை (என்சிஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தேசிய குற்றவியல் முகமை (என்சிஏ) மற்றும் ராயல் மரைன் கமாண்டோக்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டார்செட் கடற்கரைக்கு அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள ஸ்மிர்டோஸ் கப்பலில் 24 ஜார்ஜிய மற்றும் இந்திய மாலுமிகள் இருப்பதாக என்சிஏ தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, கமாண்டோக்கள் ஹெலிகாப்டரிலிருந்து கயிறுகள் மூலம் அந்த எண்ணெய் கப்பலில் இறங்கினர்.
பிரிட்டன் ஆயுதப் படைகள் முதல் முறையாக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
யுக்ரேன் மீதான படையெடுப்பு காரணமாக பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்களை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
ரஷ்யாவின் "நிழற்படை" என்று மேற்கத்திய நாடுகளால் அழைக்கப்படும் இந்த கப்பல்கள் பிரிட்டன் துறைமுகங்களுக்குள் நுழைவதை பிரிட்டிஷ் பொருளாதாரத் தடைகள் தடை செய்கின்றன.
ரஷ்ய எண்ணெயை வழங்கும் அல்லது விநியோகிக்கும் கப்பல்களுக்கு நிதி, காப்பீடு அல்லது தரகு சேவைகளை வழங்குவதிலிருந்தும் பிரிட்டிஷ் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை இது தடை செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற 500-க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆயுதப் படைகளால் "இப்போது நமது கடல் பகுதி வழியே செல்லும் தடை விதிக்கப்பட்ட கப்பல்களில் ஏறி சோதனையிட முடியும்" என்று பிரதமர் ஸ்டார்மர் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் கூறுகையில், "இந்த வெற்றிகரமான நடவடிக்கை ரஷ்யாவிற்கு மேலும் ஒரு அடியைக் கொடுத்துள்ளது. யுக்ரேனில் [ரஷ்ய அதிபர் விளாடிமிர்] புதினின் போருக்கு உத்வேகம் அளிப்பவர்கள் மறைந்துகொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை இது அவர்களுக்கு நினைவூட்டுகிறது" என்றார்.
ரஷ்யாவின் எண்ணெய் கப்பலுக்கு எதிராக ஓர் "முக்கியமான நடவடிக்கையை" எடுத்ததற்காக யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி பிரிட்டனுக்கு நன்றி தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து இதற்கு உடனடி பதில் எதுவும் வரவில்லை. இருப்பினும், இதுபோன்ற இடைமறிப்புகளை சட்டவிரோதமானது என்றும் "சர்வதேச கடற்கொள்ளைக்கு இணையானது" என்றும் ரஷ்யா இதற்கு முன்பு விவரித்துள்ளது.
கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் மரைன் டிராஃபிக் இணையதளத்தின்படி, ஸ்மிர்டோஸ் கப்பல் கேமரூன் நாட்டுக்கொடியுடன் பயணித்தது.
பிபிசி வெரிஃபை கண்டறிந்தபடி, இந்தக் கப்பல் ஜூன் 5 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகிலுள்ள எண்ணெய் முனையமான ரஷ்யாவின் உஸ்ட்-லுகா துறைமுகத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, சனிக்கிழமை மேற்கு நோக்கி ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்தது.
இந்தக் கப்பல் 2025 ஜூலையில் பொருளாதாரத் தடைக்கு உள்ளானது. அதன் பிறகு, கப்பலின் பெயர் மிர்டோஸ் என்பதிலிருந்து ஸ்மிர்டோஸ் என்று மாற்றப்பட்டதோடு, கப்பலில் ஏற்பட்ட கொடியும் இரண்டு முறை மாற்றப்பட்டுள்ளது.
பிரிட்டன் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்கள் இரண்டையும் முழுமையாகப் பின்பற்றியதாக அது கூறியது.
இந்த இடைமறிப்பு பல வார கால ராணுவ மற்றும் அரசியல் திட்டமிடலின் விளைவாக நிகழ்ந்தது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சமீபத்தில் பிரிட்டன் தனது நட்பு நாடுகளுக்கு வழங்கிய ஆதரவின் தொடர்ச்சியாக, பிரான்ஸ் நாட்டுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இது நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய "நிழல்படையின்" ஒரு பகுதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை பிரிட்டன் ஆதரவுடன் தங்கள் நாட்டு ராணுவம் இடைமறித்ததாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஜூன் ஒன்றாம் தேதி தெரிவித்தார்.
அந்த நடவடிக்கையின் போது பிரிட்டிஷ் ஹெலிகாப்டர் ஒன்று ஆதரவு வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























