இடதுசாரிக் கட்சிகள் தவெக கூட்டணியில் இணைவதில் என்ன சிக்கல்? தள்ளி நிற்கவே முயல்வது ஏன்?

பட மூலாதாரம், X
தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 09) சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.
''தாங்கள் அளித்திருக்கும் ஆதரவு தவெக தொடர்ந்து அரசை நடத்துவதற்கு மட்டுமே, தவெக கூட்டணியில் சேரவோ, தவெக எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் ஆதரிக்கவோ அல்ல'' என்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், இடதுசாரிகள் மட்டும் கூட்டணியில் சேராத நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தவெக அரசை நடத்த "இன்னும் பயின்று வருகிறார்கள். அவர்கள், இப்போது பயிற்சிக் காலத்தில் இருக்கிறார்கள், கற்றுக் கொள்வார்கள்" என்று கூறுகிறார்.
அதோடு, "ஆட்சியை ஐந்து ஆண்டுகள் தக்க வைக்க வேண்டுமென்ற எண்ணம் எங்களைவிட அவர்களுக்கே அதிகமாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே நடைபெற்ற தவெக கூட்டணிக் கட்சிகளுக்கான முதல் கூட்டத்திலும் இடதுசாரி கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், "நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம், தவெக கூட்டணியில் இல்லை" என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த முடிவு ஒரு கூட்டத்தைப் புறக்கணிப்பதுடன் மட்டுமே தொடர்புடையதல்ல. ஆட்சி அமைந்த நாள் முதலே இருந்து வரும் கருத்து வேறுபாடுகளின் தொடர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் அதற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க இடதுசாரிகள் முடிவு செய்தன.
பிபிசி தமிழிடம் பேசிய மு.வீரபாண்டியன், "தவெக அரசுக்கான ஆதரவு நிபந்தனையற்றதல்ல. மதச்சார்பின்மை, உழைக்கும் மக்களின் நலன் ஆகிய கொள்கைகளில் தவெக அரசு உறுதியாக இருக்கும் வரை ஆதரவு தொடரும்" என்றார்.
கடந்த சில மாதங்களாக தவெக அரசுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு வெளிப்பட்டு வருகிறது. இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கண்காணிக்க பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுற்றறிக்கை தொடர்பாக இடதுசாரிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், 'அது அதிகாரிகளின் நடவடிக்கை' என்று தவெக அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால் அந்த விளக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம். வீரபாண்டியன் ஏற்க மறுத்தார். அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களும் முதலமைச்சருமே அரசை வழிநடத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியைப் பெறுவதில் மத்திய அரசுக்கு எதிராக தவெக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி வந்துள்ளது. சமீபத்திய விமர்சனம் சட்டப்பேரவை குறித்து எழுந்தது. முதலமைச்சர் விஜய், "ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசுவதற்குப் பதிலாக தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அரசியல் கணக்குத் தீர்ப்பில் அதிக நேரம் செலவிடுகிறார்" என்று பெ. சண்முகம் குற்றம் சாட்டினார்.
"தவெக அரசின் செயல்பாடுகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பொறுத்தே" தங்கள் நிலைபாடு அமையும் என்று பெ.சண்முகம் கூறுகிறார். அதுகுறித்து அவர் விரிவாகப் பேசியபோது, ''இடதுசாரி கட்சிகள் பிரச்னை அல்லது விவகாரத்தின் அடிப்படையிலேயே தங்கள் ஆதரவு வழங்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளன. இப்படியான அரசியல் ஏற்பாடு மே மாதம் தொடங்கியது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தவெக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தபோது, தவெக அல்லாத வாய்ப்புகளில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக இருந்ததால் தவெக அரசை ஆதரிக்க முடிவு செய்தோம்'' என சண்முகம் கூறுகிறார்.
"ஆளுநர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜனநாயகத்திற்கு குரல் கொடுக்க, தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தோம். அரசின் மீதுள்ள விமர்சனங்களையும் தொடர்ந்து வைத்து வருகிறோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகிறார்.
அதோடு, "திமுக கூட்டணியில் இருந்தாலும், தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென முதலில் கூறியவர்கள் நாங்கள்தான்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், "தவெக அரசில் இருப்பவர்கள் புதியவர்கள், சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் பலர் உள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். முந்தைய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றினாலும், தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்" என்றார்.
திமுகவையோ தவெகவையோ எதிரியாகப் பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நாங்கள் முரண்படும் விஷயங்களை வெளிப்படுத்தி வருகிறோம். அதே நேரம் தவெகவை, திமுகவை, பகை அரசியல் கட்சியாகப் பார்க்கவில்லை" என்றார்.

தவெக கூட்டணியில் இடம்பெற்றால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல் குறித்துப் பேசிய பெ.சண்முகம், "அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம். தவெக அமைக்கும் புதிய கூட்டணியில் இடம்பெறவில்லை. கூட்டணியில் இடம்பெற்றால் அரசின் எல்லா முடிவுகளிலும் எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்" என்றார்.
இதேபோன்ற கருத்தைத் தெரிவித்த மு.வீரபாண்டியன், "உதாரணமாக 100 ஏழைகளை அரசு அப்புறப்படுத்துகிறார்கள் என்றால், நாங்கள் அந்த முடிவை எதிர்ப்போம். ஆனால் அரசின் ஓர் அங்கமாகிவிட்டால் அப்படிச் செய்ய முடியாதே!" என்றார்.
பல்வேறு விவகாரங்களில் அரசின் மீதான இடதுசாரிகளின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்ட போது பெ.சண்முகம், "இந்த அரசு பயிற்சிக் காலத்தில் இருக்கிறது, கற்றுக் கொள்வார்கள். வரவேற்கத்தக்க விஷயங்களை வரவேற்போம். விமர்சிக்க வேண்டியதை விமர்சிப்போம். விமர்சனங்களை நல்ல விதமாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது" என்றார்.
இந்தச் சூழலில் நடைபெறும் தவெக கூட்டம், ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளின் வெவ்வேறு அணுகுமுறைகளை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம், " பிரதமராக விஜய்" என்ற பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கிறது. 2029ஆம் ஆண்டுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் தங்கள் தேர்வு என்று காங்கிரஸ் மீண்டும் கூறியுள்ளது. மறுபுறம், இடதுசாரிகள் கூட்டணிக்குள் வரவே மறுக்கின்றன.
ஆட்சி அமைக்க இடதுசாரிகளின் ஆதரவு தவெகவுக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் நான்கே மாதங்களில் அந்த ஆதரவு எந்த நிபந்தனையுமற்ற அரசியல் உறவல்ல என்பதை இடதுசாரிகள் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
பெ.சண்முகம் தவெக அரசு தொடரத் தேவையான எண்ணிக்கைகள் குறித்துப் பேசுகையில், "தவெக அரசுக்கு இப்போதுள்ள எண்ணிக்கையில், 'இடதுசாரி கட்சிகளின் ஆதரவின்றி இருக்க முடியும்' என்று கூற முடியாதே," என்றார்.
இதுகுறித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னையில் பேசியபோது, "இடதுசாரிக் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளனர். அரசை நடத்துவதில் அவர்களின் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெறுவோம்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































