மேகேதாட்டு அணை விவகாரம்: மத்திய அமைச்சரைச் சந்தித்து தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது என்ன?

பட மூலாதாரம், AADHAV ARJUNA
மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைச் சந்தித்து இதுதொடர்பாக கடிதம் அளித்துள்ளனர்.
கடந்த வாரம், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கோரியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

பட மூலாதாரம், X/DK Shivakumar
நவம்பர் 13-ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரதமர் மோதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகேதாட்டு அணைத் திட்டத்துக்குத் தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
மேகேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய டி.கே.சிவக்குமார், இந்த அணை பெங்களூருவின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் தமிழ்நாட்டுக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் கோரிக்கை

பட மூலாதாரம், DMK
பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே டி.கே. சிவக்குமார் இவ்வாறு பேசியது தமிழ்நாட்டு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை ஒருமித்த குரலில் பதிவு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மௌனம் காக்கக் கூடாது என்றும், கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தைப் பிரதமருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்தியுள்ளார்.
காவிரி விவகாரம் வெறும் நீர் பகிர்வு பிரச்சினை மட்டுமல்ல என்றும் தமிழர்களின் வரலாறு, உணர்வு மற்றும் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
'மேகேதாட்டு திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்' - தவெக அமைச்சர்கள்

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக அமைச்சர்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
மேகேதாட்டு அணைத் திட்டத்தை எந்தச் சூழலிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தார்.
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கர்நாடக அரசால் மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றார். முந்தைய அரசுகளைவிடத் தற்போதைய அரசு வலுவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த தமிழக எதிர்க்கட்சிகள்
இதற்கிடையே, நவம்பர் 16-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான 'பிலாங்கில்: எ ஜர்னி ஆஃப் லவ்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்.
இந்தப் பயணத்தின்போது, கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களிடம் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா முறையாகத் திறந்துவிடுவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
காங்கிரஸ் மேலிடத்தின் மூலம் கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணைத் திட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்தார்.
மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கோரி முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவகவுடா, இந்தத் திட்டத்துக்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோதிக்குக் கடிதம் எழுதினார்.
பெங்களூருவின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மேகேதாட்டு திட்டம் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் முன்னுரிமை அளித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீர்வளத்துறை அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் பேசியது என்ன?

பட மூலாதாரம், AADHAV ARJUNA
இந்தப் பின்னணியில்தான், நவம்பர் 18 ஆம் தேதி அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் டெல்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் (நீர்வளத்துறை) சி.ஆர். பாட்டீலைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர்.
மேகேதாட்டு அணைக்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய ஜல் சக்தி அமைச்சகமும் மத்திய நீர் ஆணையமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
மேலும், காவிரிப் படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் புதிய நீர்த்தேக்கங்கள் அல்லது நீரைத் திசைதிருப்பும் திட்டங்களைச் செயல்படுத்த கர்நாடக அரசை அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மேகேதாட்டு அணை விவகாரத்தை சட்டரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்ததாகவும், விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக தமிழக அரசை பரிசீலனை செய்யாமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று பதிவு செய்ததாகவும் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































