'10 நிமிடங்கள் தாமதித்திருந்தால்..' - நேபாள வெள்ளத்தில் 900 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்

- எழுதியவர், அசோக் தஹால், கமல் பரியார், அசாதே மோஷிரி மற்றும் ஆண்ட்ரூ கிளாரன்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், பள்ளி மாணவர்களை உடனடியாக வெளியேற்ற தலைமை ஆசிரியர் எடுத்த விரைவான முடிவு 900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியது.
வெள்ளநீர் வரவிருப்பதாக எச்சரிக்கை கிடைத்த சில நிமிடங்களுக்குள், மாணவர்களை உயரமான பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவாடி பிபிசியிடம் தெரிவித்தார்.
தானும் தனது நண்பர்களும் "வெறும் 10 விநாடிகள் வித்தியாசத்தில்" உயிர் தப்பியதாக ஒரு மாணவி கூறுகிறார். தங்களுக்கு அருகில் இருந்த சந்தைப் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் அவர் நேரில் பார்த்துள்ளார்.
புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவில் நேபாளத்தில் குறைந்தது 794 பேர் உயிரிழந்துள்ளனர்; 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திபெத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 23 நாடுகளைச் சேர்ந்த 261 வெளிநாட்டினர் இன்னும் காணவில்லை என சீன அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். காணாமல் போன வெளிநாட்டினரில் 49 இந்தியர்கள் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
'10 நிமிடங்கள் தாமதமாக முடிவு எடுத்திருந்தால்'
நேபாளத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்து, சுமார் 900 மாணவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றினார்.
நுவாகோட்டில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ராஜேந்திர தாவாடி, பள்ளியில் மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாகக் கூறுகிறார். வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து வெவ்வேறு நபர்களிடம் இருந்து சில நிமிடங்களுக்குள் அவருக்கு நான்கு எச்சரிக்கை அழைப்புகள் வந்துள்ளன.
அந்த அழைப்புகளில், ஆற்றின் மேற்பகுதியில் உள்ள பெட்ராவதி குடியிருப்புப் பகுதியில் ஏற்கெனவே வெள்ளநீர் புகுந்துவிட்டதாக வந்த தகவலும் அடங்கும்.
அதையடுத்து அவர் மாணவர்களை உடனடியாக வெளியேற்ற முடிவு செய்தார்.
"இனி தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். ஒருவேளை வெள்ளம் வராவிட்டாலும், ஒரு நாள் வகுப்புகள் மட்டும்தானே பாதிக்கப்படும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
மாணவர்களை உயரமான பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, ஆற்றில் இருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் இருந்த பள்ளி விடுதிக் கட்டடம் வெள்ளநீரில் மூழ்குவதை தாவாடி நேரில் பார்த்தார்.
"நாங்கள் 10 நிமிடங்கள் தாமதமாக முடிவு எடுத்திருந்தால், மாணவர்கள் உட்பட நாங்கள் யாருமே இன்று உங்களிடம் பேசிக்கொண்டிருக்க முடியாது."

தலைமை ஆசிரியரின் இந்த முடிவால் காப்பாற்றப்பட்ட 900 மாணவர்களில் 16 வயதான யுனிஷாவும் ஒருவர். வெள்ளம் வருவதற்கு சில நொடிகளுக்கு முன்பு தான் அங்கிருந்து தப்பியதாக அவர் கூறுகிறார்.
"நானும் என் நண்பர்களும் வெறும் 10 விநாடிகள் வித்தியாசத்தில் உயிர் தப்பினோம்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
பள்ளிக்குப் பின்புறம் இருந்த குறுகலான, சேறும் சகதியுமான பாதை வழியாக மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஓடியதாக யுனிஷா கூறுகிறார்.
"சிறிது நேரத்திற்குள்ளாகவே, என் கண் முன்னால் அந்தச் சந்தைப் பகுதியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
யுனிஷா தனது தாய் சபினா ஸ்ரேஷ்தாவுடன் இணைந்து பேட்டியளித்தார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட செய்தியைக் கேட்டதும், தனது மகளைத் தொடர்புகொள்ள குடும்பத்தினர் பல மணி நேரம் பதற்றத்துடன் முயன்றதாக சபினா கூறுகிறார்.
"நான் பதற்றத்தில் இருந்தேன். என் மகளுக்கும் அவளுடைய தந்தைக்கும் பலமுறை அழைத்தேன். ஆனால் இருவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை."
இறுதியில் மகளுடன் தொடர்பு கிடைத்தபோது சற்று நிம்மதி அடைந்ததாக சபினா நினைவுகூர்கிறார். ஆனால், யுனிஷா மூன்று நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பும் வரை குடும்பத்தினரின் பதற்றம் நீடித்தது.
"எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. கடவுள்தான் என் மகளைக் காப்பாற்றினார்."

பட மூலாதாரம், Getty Images
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பிறகு பெற்றோருடன் இணைந்த 5 வயது சிறுமி
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுமி, மருத்துவமனையில் தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்தார்.
மனிஷா என்ற அந்தச் சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ரசுவா மாவட்டத்தில் உள்ள சியாப்ருபேசி பகுதியில் மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, இடிபாடுகளுக்குள் பூனை ஒன்று சிக்கியிருப்பது போன்ற சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நேபாள ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த காவல் அதிகாரி சஞ்சு காட்ரி தலைமையிலான குழுவினர் அந்தப் பகுதியைத் தேடி, இடிபாடுகளை அகற்றத் தொடங்கினர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மனிஷாவைக் கண்டுபிடித்தனர்.
சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சிறுமி மீட்கப்பட்டார்.
அவரை மீட்க ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை.
இதையடுத்து, மீட்புக் குழுவினர் சிறுமியை தங்கள் மீட்பு முகாமுக்குக் கொண்டு சென்று தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு மனிஷாவுக்கு சுயநினைவு திரும்பியது. அவருக்கு வேகவைத்த அரிசி வடிநீரை உணவாகக் கொடுத்து உடல்நிலையைத் தேற்ற முயன்றனர்.
இந்தச் சம்பவத்தால் மனிஷா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், சனிக்கிழமை பிற்பகல் அவர் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையின் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தகவலில், மனிஷா தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
திபெத்தில் 49 இந்தியர்களை காணவில்லை
ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்குப் பிறகு, 23 நாடுகளைச் சேர்ந்த 261 வெளிநாட்டினர் இன்னும் காணவில்லை என்று சீன அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, காணாமல் போன வெளிநாட்டினரில் 49 இந்தியர்களும் உள்ளனர்.
சீன அதிகாரிகளின் தகவலின்படி, காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 104 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 49 பேரும், லாட்வியாவைச் சேர்ந்த 33 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 18 பேரும், பிரிட்டனைச் சேர்ந்த 15 பேரும் அடங்குவர்.
மேலும், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தலா 6 பேரும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 4 பேரும், மலேசியா, ஜெர்மனி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா 3 பேரும் காணாமல் போயுள்ளனர்.
அயர்லாந்து, எஸ்டோனியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த தலா 2 பேரும் காணவில்லை.
கஜகஸ்தான், பின்லாந்து, லிதுவேனியா, போர்ச்சுகல், யுக்ரேன், ஸ்பெயின் மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த தலா ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































