பெண்கள் கெட்ட வார்த்தை பேசுவது மோசமானதா? இந்தியாவில் பூதாகரமாக எழும் கேள்வி

பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் அது இன்னும் மோசமானதா?

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பெண்கள் விவகார ஆசிரியர், தில்லி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டெல்லியில் ஒரு போராட்டத்தின் போது இளம் பெண்கள் கெட்ட வார்த்தை பேசிய காட்சிகள் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஒரு வித்தியாசமான விவாதம் உருவாகியுள்ளது: கெட்ட வார்த்தைகள் பெண்களின் வாயிலிருந்து வந்தால் அவை இன்னும் மோசமானவையா?

இந்த விவாதத்தில் சமீபத்தில் கருத்து தெரிவித்தவர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இளம் பெண்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்ப்பது தனக்கு ஒரு "கலாசார அதிர்ச்சி" என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியதை அவர் விமர்சித்தார்.

"ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் எந்தப் பிரச்னையும் இல்லை; அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண் கெட்ட வார்த்தை பேசினால் அது கலாசார அதிர்ச்சியாகிறது," என்று ராகுல் காந்தி கூறினார்.

போராட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். அவர்களது சில கடுமையான வார்த்தைகள் பிரதமரை நோக்கியும் இருந்தன. இதனால் பிரதமரின் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மோதியின் அரசியலை விமர்சிப்பவர்களில் பலர்கூட, பெண்கள் எல்லை தாண்டிவிட்டதாகக் கூறினர்.

போராட்டங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்துவிட்டன. ஆனால் ராகுல் காந்தியின் கருத்துகள், பெண்களின் அரசியல் செயல்பாடு, பெண்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் — அது தீவிரமாக இருந்தாலும், கெட்ட வார்த்தைகளுடன் இருந்தாலும் — இந்தியாவில் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

கடந்த மாதம், கல்வி சீர்திருத்தங்களைக் கோரி டெல்லியிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் பல வாரங்கள் நடைபெற்ற காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) போராட்டங்களின் போது, சில இளம் பெண்கள் பிரதமருக்கு எதிராக கடுமையான மற்றும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதிலிருந்து இந்த விவகாரம் தொடங்கியது.

போராட்டம் குறித்து மோதியும் தனது கருத்தை ஒரு செல்ஃபி வீடியோவில் தெரிவித்தார். இளம் பெண்கள் இவ்வாறு கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்ப்பது தனக்கு "கலாசார அதிர்ச்சியாக" இருந்ததாக அவர் கூறினார். அதே நேரத்தில், அவர்களை மன்னிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் வன்முறை நடவடிக்கை குறித்தோ சிஜேபி போராட்டங்களில் பங்கேற்றதற்காக இணையத்தில் துன்புறுத்தப்பட்டதாகவும் பாலியல் வன்முறை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறிய பெண்களுக்கு ஆதரவாகவோ பிரதமர் கருத்து தெரிவிக்கவில்லை.

வார இறுதியில், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, புனேவில் மாணவர்களுடன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மோதியின் "கலாசார அதிர்ச்சி" என்ற கருத்தை விமர்சித்தார்.

தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மோதி ஏன் பெண்களைப் பற்றி மட்டும் பேசுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

பெண் போராட்டக்காரர்கள் மோதியை அவமதிக்கும் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலான சில வாரங்களுக்குப் பிறகு ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் வெளியாயின.

பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் அது இன்னும் மோசமானதா?

பட மூலாதாரம், Congress Party

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவதூறான வார்த்தைகளைக் கொண்ட பதிவுகள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது, 15 வயது சிறுமி ஒருவர் இந்த சர்ச்சையின் மையத்தில் சிக்கிக்கொண்டார். சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக கடும் சொற்களும், மிரட்டல்களும் அனுப்பப்பட்டன.

அந்தச் சிறுமி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். தனது வீடியோவை நீக்கிவிட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் அவரைச் சுற்றிய சர்ச்சையும் எதிர்ப்பும் தொடர்ந்தன.

ஒற்றைப் பெற்றோராக இருக்கும் அவரது தாயார், இந்த சர்ச்சை காரணமாக தாங்கள் பலமுறை வீடுகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

போராட்டம் முடிந்த பிறகு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தனது வீடியோவில் மோதி ஒரு சமரசமான அணுகுமுறையை எடுத்திருந்தார்.

"சில குறும்புக்காரக் குழந்தைகள், நாகரிகமான சமூகத்தில் இடமில்லாத அளவுக்கு மிகக் கடுமையான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினர்," என்று அவர் கூறினார்.

"அவர்கள் என்னைத் திட்டினர்; என் மறைந்த தாயாரையும் திட்டினர். அது மிகவும் வேதனையளித்தது."

தனது ஆதரவாளர்களிடையே எழுந்த கோபத்தைப் பற்றி பேசும்போது, அவர்களது கோபத்தைத் தான் புரிந்துகொள்வதாக அவர் கூறினார்.

"இது ஒரு கலாசார அதிர்ச்சி. நமது மகள்கள் இப்படிப்பட்ட மொழியை எப்படிப் பயன்படுத்தலாம்? ஆனால் குழந்தைப் பருவத்தில் தவறுகள் நடக்கும்; அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்பாக இதைப் பார்க்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்."

புனே நிகழ்ச்சியில், பெண் போராட்டக்காரர்களின் பாலினத்தை மட்டும் குறிப்பிட்டு மோதி பேசியதன் பின்னணியில் ஆணாதிக்க மனப்பான்மை இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.

"ஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட இடம்தான் இருக்கிறது, ஆனால் ஆண்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்ற இந்த மனப்பான்மை என்ன? அவர்கள் விரும்பியதைச் செய்யலாம்; கெட்ட வார்த்தை பேச விரும்பினால் பேசலாம்... இந்த ஆணாதிக்கத்தை நாம் உடைத்தெறிய வேண்டும்," என்று அவர் கூறினார்.

பாலினப் பிரச்னைகள் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் கட்டுரையாளரான பத்திரிகையாளர் நமிதா பண்டாரே, "மக்கள் சொல்வதற்கு மாறாக, இந்தியாவில் பெண்கள் நிச்சயமாகக் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள்; இது ஒன்றும் புதிதல்ல," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் அது இன்னும் மோசமானதா?

பட மூலாதாரம், Getty Images

வட இந்தியாவின் பல கிராமங்களில், திருமணத்தின் ஒரு முக்கியமான சடங்கின் போது மணமகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், மணமகன் தரப்பினரை வரவேற்கும்போது கெட்ட வார்த்தைகள் அடங்கிய பாடல்களைப் பாடுவது ஒரு மரபாக உள்ளது. அந்த மரபை யாரும் அவமதிப்பதாகக் கருதுவதில்லை.

எனவே, ஜந்தர் மந்தரில் கூறப்பட்டவற்றை "கலாசார அதிர்ச்சி" என்று விவரிப்பதும், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக பெண்களை மட்டும் சுட்டிக்காட்டுவதும் "இரட்டை நிலைப்பாட்டை" வெளிப்படுத்துகிறது என்று பண்டாரே கூறுகிறார். ஏனெனில், பிரதமர் உட்பட அனைத்து அரசியல் தரப்பினரும், தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பெண்களுக்கு எதிரான இழிவான சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

2022ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையில், பெண்களை வெறுக்கும் மனப்பான்மைக்கு எதிராக இந்தியர்கள் போராட வேண்டும் என்று மோதி அழைப்பு விடுத்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக அவரது அரசு பல திட்டங்களை நடத்தி வருகிறது. பெண் வாக்காளர்களிடையிலும் மோதிக்கு பெரும் ஆதரவு உள்ளது.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் மோதியும் அவரது கட்சித் தலைவர்களும் பெண்களை மரியாதையற்ற முறையில் பேசியதாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் உடை குறித்து பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளைப் பல மூத்த கட்சித் தலைவர்கள் கூறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மோதி 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பேரணியில் "ஜெர்சி பசு" என்றும், 2012ஆம் ஆண்டு மற்றொரு நிகழ்வில் "50 கோடி கேர்ள்ஃபிரெண்ட்" — அதாவது "50 கோடி ரூபாய் மதிப்புள்ள பெண் நண்பர்" — என்றும் பயன்படுத்திய சொற்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

இந்த விமர்சனங்கள் பாஜகவுக்கு மட்டும் உரியவை அல்ல. ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் தலைவர், அரசியல் எதிரிகளுக்கு எதிராக பொய்யான புகார்களை அளிக்க பெண்களைப் பயன்படுத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்ததால் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார்.

"பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள்; அவர்களை குறிவைப்பது மிகவும் எளிது. ஆனால் அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினால் மட்டும், 'நமது பெண்கள் எப்படி இப்படித் திட்டலாம்?' என்று அனைவரும் கேட்கிறார்கள்," என்று பண்டாரே கூறுகிறார்.

2014ஆம் ஆண்டு முதல் கெட்ட வார்த்தைப் பயன்பாட்டை நிறுத்துவதற்கான காலி பந்த் அபியான் என்ற பிரசாரத்தை நடத்திவரும் சமூக செயற்பாட்டாளர் சுனில் ஜலான், "கெட்ட வார்த்தையைப் பயன்படுத்துபவர் ஆணா பெண்ணா என்பதை விட, கெட்ட வார்த்தைப் பயன்பாட்டில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்," என்று கூறுகிறார்.

கடந்த ஆண்டு அவரது அரசு சாரா அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில், 28 இந்திய மாநிலங்கள் மற்றும் எட்டு ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த 70,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களில் 55% பேர் தாங்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி மிகவும் நேரடியானது: தாய்மார்கள், சகோதரிகள் அல்லது மகள்களை இலக்காகக் கொண்ட கெட்ட வார்த்தைகளை நீங்கள் எவ்வளவு அடிக்கடி கேட்கிறீர்கள் அல்லது பயன்படுத்துகிறீர்கள்?

அவர்களின் 2025ஆம் ஆண்டுக்கான காலி மேப் ஆஃப் இந்தியா ஆய்வு, வட இந்தியாவில் இதன் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதைக் காட்டியது. டெல்லியில் 80%, பஞ்சாபில் 78%, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் 74% எனப் பதிவாகியுள்ளது. பெரும்பாலான தென் மாநிலங்களில் இது 44%-க்கும் குறைவாக இருந்தது. வடகிழக்கு மாநிலங்களில் இது 15% முதல் 18% வரை இருந்தது.

இந்த நாட்டில் கெட்ட வார்த்தைப் பயன்பாடு குறித்து ஒரு பொது விவாதம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்றும், "இதிலிருந்து ஏதாவது நல்லது உருவாகும் என்று நம்புகிறேன்," என்றும் ஜலான் கூறுகிறார்.

"இது மிகவும் தீவிரமான பிரச்னை. சமூகத்தில் பரவியுள்ள ஒரு வைரஸ் கிருமியை போன்றது. நகைச்சுவை, ஜோக்குகள் மற்றும் திரைப்படங்கள் கெட்ட வார்த்தைப் பயன்பாட்டை இயல்பான ஒன்றாக மாற்றிவிட்டன. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் அது இன்னும் மோசமானதா?

பட மூலாதாரம், Congress Party

ஆனால் இந்தியாவின் ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்த பலர் கெட்ட வார்த்தைகளை அதே பார்வையில் காணவில்லை.

"கெட்ட வார்த்தைகளும் போராட்டங்களும் நீண்ட காலமாக ஒன்றோடொன்று இணைந்தே இருந்து வருகின்றன. அதில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது; அது போராட்டத்தின் அடிப்படையான ஓர் அம்சமாகும்," என்று சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் முன்பு பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

"சிலருக்கு அது விரும்பத்தகாததாக இருக்கலாம்; மற்றவர்களுக்கு அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அதற்காக அதை குற்றமாக்க முடியாது," என்றும் அவர் கூறினார்.

இத்தகைய மொழி தெருவில் நடக்கும் போராட்டங்களுக்கு மட்டும் உரியது அல்ல. தொலைக்காட்சி விவாதங்கள் முதல் நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் வரை, கெட்ட வார்த்தைகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் இந்தியாவின் பொது அரசியல் உரையாடலின் ஒரு பகுதியாக அதிகரித்து வருகின்றன.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் வைரலான ஒரு வீடியோவில், இந்திய அரசுக்குச் சொந்தமான தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒரு பெண் தொகுப்பாளர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை நோக்கி தொடர்ச்சியாக கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திய கோவில் பூசாரி ஒருவரை கட்டுப்படுத்த முயன்றார். அதற்கு அவரும் அதே மொழியில் பதிலளித்தார்.

2023ஆம் ஆண்டு, பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி, நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் எம்.பி.க்கு எதிராக இஸ்லாமிய விரோத இழிவுச் சொற்களைப் பயன்படுத்தியதற்கும் அவரை மிரட்டியதற்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். எதிர்ப்பு அதிகரித்தபோது, பின்னர் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

சமூகவியலாளர் சிவ் விஸ்வநாதன், "கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான சிதைவின் ஒரு அறிகுறி. அது உரையாடலின் முடிவையும் பரஸ்பர மரியாதையின் குறைவையும் காட்டுகிறது," என்று கூறுகிறார்.

நாடாளுமன்றத்திலும், நீதிமன்றங்களுக்குள்ளேயும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படும் போது, "அது மொழியின் சிதைவைக் காட்டுகிறது; வாதத்தின் தரம் குறைந்து வருவதையும், ஜனநாயகத்தின் வீழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது," என்று அவர் கூறுகிறார்.

போராட்டக்காரர்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கான காரணம், "பரஸ்பர மரியாதை குறைவாக இருக்கும் சூழலில், கெட்ட வார்த்தைகள் ஒரு பதிலடியாக மாறுகின்றன" என்பதுதான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு