தனியே அமர்ந்து சாப்பிடுவது உங்கள் உடல் நலனுக்கு கேடு - எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டேவிட் ராப்சன்
- எழுதியவர், அலெசியா ஃப்ராங்கோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உணவைப் பகிர்ந்து உண்ணும் பழக்கம் மனஅழுத்தம் மற்றும் மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
இது நம்புவதற்கு மிக எளிதான ஒன்றாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் உணவுப் பழக்கத்தில் செய்யப்படும் இந்த ஒரு சிறிய மாற்றம் உங்கள் உடலிலும் மூளையிலும் பெரிய அதிசயங்களை நிகழ்த்தும்.
இது மனஅழுத்தத்தின் அபாயத்தைக் குறைத்து, மறதி நோயில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் உண்ணும் உணவின் இன்பத்தை அதிகரிக்கும், மேலும் உங்களை நீண்ட காலம் வாழச் செய்யவும் கூடும்.
இது ஏதோ புதிய உணவு முறையைப் பற்றியது அல்ல, மாறாக மனிதகுலத்தின் மிகவும் தொன்மையான பழக்கங்களில் ஒன்றான பிறருடன் சேர்ந்து சாப்பிடுவது பற்றியது.
"உணவைப் பகிர்ந்து கொள்வது பிணைப்பை ஏற்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும், பிறருடன் இணையவும் ஒரு அத்தியாவசிய வழிமுறையாகும்," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் நடத்தை அறிவியல் பேராசிரியரான ஜான்-இமானுவேல் டி நெவ் கூறுகிறார்.
இது நம் நல்வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால், நவீன உலகின் அதிகரித்துவரும் தனிமைப்படுத்தல் இத்தகைய பழக்கத்தை அரிதாக்கி வருகிறது.
ஆனால் பிறரை அணுகுவதும், உணவுக்கும் நட்பிற்கும் இடையிலான தொன்மையான தொடர்பைப் பயன்படுத்துவதும் நீங்கள் நினைப்பதை விட எளிதானதாக இருக்கலாம்.
மன உறுதியை வளர்த்தல்

பட மூலாதாரம், Maskot/Getty Images
பிறருடன் சேர்ந்து சாப்பிடுவதைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள், அது நமது மனநலனில் ஏற்படுத்தும் விளைவுகளிலேயே கவனம் செலுத்தியுள்ளன.
சீனாவில் உள்ள செஜியாங் மாகாண நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைச் சேர்ந்த சின்யி வாங் மற்றும் அவரது சக ஊழியர்கள் நடத்திய ஓர் ஆய்வில், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 9,361 பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.
உணவருந்தும் போது மேசையைச் சுற்றி இருக்கும் நபர்களின் எண்ணிக்கையானது, ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் துல்லியமாகக் கணிக்கும் காரணியாக உள்ளது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது.
ஒருவரின் பொதுவான ஆரோக்கியம், செல்வம் மற்றும் அவர்கள் தனியாக வாழ்கிறார்களா இல்லையா என்பது போன்ற மனநலனைப் பாதிக்கும் பிற காரணிகளைக் கட்டுப்படுத்திய பிறகும் இந்த முடிவே நீடித்தது.
இது, பிறருடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தில் நமது மனநலனைப் பாதிக்கும் ஒரு தனித்துவமான அம்சம் உள்ளது என்பதை உணர்த்துவதாக அந்த ஆராய்ச்சிக்குழு முடிவுக்கு வந்தது.
பல பிற ஆய்வுகளும் இதே முடிவுகளையே சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, டோக்கியோவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். தங்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்தும் தனியாகச் சாப்பிடும் 65-74 வயதுடையவர்களுக்கு, வழக்கமாகப் பிறருடன் சேர்ந்து சாப்பிடுபவர்களை விட மனஅழுத்த அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

பட மூலாதாரம், BBC/ Serenity Strull/ Getty Images
இதற்கான மிக வலுவான ஆதாரம் 'உலக மகிழ்ச்சி அறிக்கை'யிலிருந்து (World Happiness Report) கிடைக்கிறது. இது 'கேலப்' (Gallup) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய உலகளாவிய ஆய்வின் அடிப்படையில் அமைந்த நல்வாழ்வு பற்றிய வருடாந்திர பகுப்பாய்வு ஆகும்.
2024-ஆம் ஆண்டில், ஜப்பானிய உணவு உற்பத்தியாளரான 'அஜினோமோட்டோ' இந்த நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்து, மக்களின் உணவுப் பழக்கம் குறித்த ஒரு பகுதியைச் சேர்த்தது. அதில் பின்வரும் கேள்விகள் இடம்பெற்றன:
கடந்த 7 நாட்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்…
(1) எத்தனை நாட்கள் உங்களுக்குத் தெரிந்த ஒருவருடன் மதிய உணவு சாப்பிட்டீர்கள்?
(2) எத்தனை நாட்கள் உங்களுக்குத் தெரிந்த ஒருவருடன் இரவு உணவு சாப்பிட்டீர்கள்?
"இதைப் பார்த்ததும் என் கண்கள் பிரகாசித்தன," என்கிறார் டி நெவ். இவர் சமீபத்திய உலக மகிழ்ச்சி அறிக்கையில் பிறருடன் சேர்ந்து சாப்பிடுவதன் முக்கியத்துவம் குறித்த அத்தியாயத்தின் இணை ஆசிரியராவார். "இந்தக் கேள்விக்கு உலகெங்கிலும் உள்ள சுமார் 1,50,000 பேரின் பதில்களை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம்."
மக்கள் பிறருடன் எத்தனை அதிகமான வேளை உணவைப் பகிர்ந்து கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான நல்வாழ்வின் அளவுகோல்களில் அதிக புள்ளிகளைப் பெறுகிறார்கள் என்பதை டி நெவ்வின் குழு கண்டறிந்தது. இது ஆச்சரியத்தக்க வகையில் சீரான தன்மையுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
"ஒருவரின் வேலைவாய்ப்பு நிலை மற்றும் அவர்களின் ஒப்பீட்டு வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களைப் போலவே, இதுவும் ஒருவரின் வாழ்க்கை திருப்தியைக் கணிக்கும் காரணியாக இருந்தது," என்று அவர் கூறுகிறார். இவை இரண்டும் நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை என அறியப்பட்ட காரணிகளாகும்.
மகிழ்ச்சியளிக்கும் வேதிப்பொருட்கள்

பட மூலாதாரம், Ippei Naoi/Getty Images
உணவைப் பகிர்ந்து கொள்வது பற்றிய கேள்விகள், ஒருவரின் பொதுவான சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கக்கூடும் என்பதை டி நெவ் சுட்டிக்காட்டினாலும், ஒன்றாகச் சாப்பிடுவதில் ஏதோ சிறப்பு இருப்பதாக அவர் சந்தேகிக்கிறார். துணை என்று பொருள்படும் ஆங்கிலச் சொல்லான 'Companion' என்பது 'Cum' மற்றும் 'Pānis' எனும் லத்தீன் வார்த்தைகளிலிருந்து உருவானது. இதன் பொருள் "ரொட்டியுடன்" என்பதாகும்.
அதே கருத்துக்கான சீனச் சொல்லான ஹுவோ பான் (huǒ bàn) என்பது ஒரே சமையலறை அடுப்பைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு ராணுவப் பிரிவை விவரிக்கும் எழுத்துகளிலிருந்து பெறப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். "இதற்கு ஆழமான கலாசார வேர்கள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் மானுடவியலாளரான ராபின் டன்பார், தனது 'ஃபிரன்ட்ஸ்' என்ற புத்தகத்தில், சாப்பிடுவது இயற்கையாகவே எண்டோர்பின் (Endorphin) அமைப்பைத் தூண்டுகிறது என்று குறிப்பிடுகிறார். இவை நமது இயல்பான மகிழ்ச்சிக்குக் காரணமான வேதிப்பொருட்களாகும். இது உணவின் போது உருவாகும் பிணைப்பை வலுப்படுத்தி, அதிகப்படியான தொடர்பை உணர வைக்கும்.
சுவாரஸ்யமாக, மற்ற நபர்களின் இருப்பு உணவின் சுவையையே அதிகரிக்கக்கூடும். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எரிகா பூத்பி நடத்திய ஆய்வுகளின் தொடரில், மற்றொரு நபரின் முன்னிலையில் சாக்லேட் சாப்பிட்ட மனிதர்கள், அது அதிக சுவையாக இருந்ததாகக் கண்டறிந்தனர்.
மறதி நோய் அபாயம் குறைகிறது
ஒன்றாகச் சாப்பிடுவது மூளையின் முதுமையைக் கூட மெதுவாக்கலாம்.
2025-ஆம் ஆண்டில், ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், தொடர்ந்து தனியாகச் சாப்பிடும் நபர்களுக்கு, மீடியல் டெம்போரல் லோப் மற்றும் ஹிப்போகேம்பஸ் உள்ளிட்ட, அறிவாற்றல் செயல்பாட்டுடன் தொடர்புடைய முக்கியப் பகுதிகளில் மூளையின் அளவு குறைந்திருப்பதாகக் கண்டறிந்தனர்.
இந்த வேறுபாடுகளில் சில உணவோடு மட்டுமே தொடர்புடையதாகத் தோன்றினாலும் பொதுவாக, தனியாகச் சாப்பிடுபவர்கள் ஊட்டச்சத்து குறைந்த உணவை உண்பார்கள். ஆனால் இது மட்டுமே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்க முடியாது.
எனவே குறைந்த சமூகத் தொடர்பும் அவர்களின் நீண்டகால மூளை ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது என்பதை இது காட்டுகிறது.
பகிர்ந்து கொள்ளப்படும் உணவின் மகிழ்ச்சியும், அதிகரிக்கும் சமூக ஆதரவும் மன அழுத்தத்தைத் தணிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்தனர்.
மனஅழுத்தம் என்பது நரம்பு சிதைவுக்கான (Neural decline) அறியப்பட்ட அபாயக் காரணியாகும். மாற்றாக, உணவின் போது நடக்கும் உரையாடல்கள் கூடுதல் மன தூண்டுதலை வழங்கி, முதிய வயதிலும் நமது மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடும்.
இந்த ஆய்வின் போது பங்கேற்பாளர்கள் சாதாரண அறிவாற்றல் செயல்பாட்டைக் கொண்டிருந்ததாகக் கருதப்பட்டனர், ஆனால் இந்த நரம்பு சிதைவு இறுதியில் அவர்களுக்கு மறதி நோயை உண்டாக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.
நவீன உலக அழுத்தங்களுக்கு எதிரான உணவுப் பழக்க முறை

பட மூலாதாரம், BBC/ Serenity Strull/ Getty Images
உணவுப் பழக்கவழக்கங்கள் நாடுகளுக்கு இடையே பெருமளவில் மாறுபடுகின்ற. எனவே ஒரு நாட்டின் நல்விருந்து கலாசாரத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்றும் உலக மகிழ்ச்சி அறிக்கை குறிப்பிட்டது.
சராசரியாக, ஜப்பானியர்கள் வாரத்திற்கு நான்கு வேளைக்கும் குறைவான உணவையே ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை சுமார் ஏழு முதல் எட்டு வரை உள்ளது, அதே நேரத்தில் இத்தாலியில் இது ஒன்பதை நெருங்குகிறது.
இத்தாலி அதன் சமூக உணவுக் கலாசாரத்திற்குப் பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. யுனெஸ்கோ இத்தாலிய சமையலுக்கு 'அருவமான கலாசார பாரம்பரியம்' என்ற அந்தஸ்தை வழங்கியபோது, "வீட்டிலோ, பள்ளிகளிலோ அல்லது திருவிழாக்கள், சடங்குகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் மூலமாகவோ குடும்பத்துடனும் சமூகத்துடனும் இணைவதில்" உணவுகள் வகிக்கும் முக்கியப் பங்கை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.
எனவே, நவீன உலகின் அழுத்தங்களுக்கு எதிராகத் தனது உணவைப் பகிர்ந்துண்ணும் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டறிவதில் இந்த நாடு முன்னணியில் இருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. இத்தாலியில் உருவான 'ஸ்லோ ஃபுட் மூவ்மென்ட்', ஃபாஸ்ட் ஃபுட்டின் வளர்ந்து வரும் பிரபலத்திற்கு நேரடி எதிர்ப்பாக 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
உள்ளூர் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதையும் நிலையான நுகர்வை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதற்காக இது அறியப்படுகிறது. ஆனால் இந்த இயக்கம் நீண்ட காலமாக நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் உணவை மையமாகக் கொண்டு அமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது.
"இத்தாலியில், உணவைப் பகிர்ந்து கொள்வது ஒரு தத்துவமாகும். ஒன்றாகச் சமைப்பது மற்றும் நாம் மேசையில் வைப்பதை தயாரிப்பதைப் பகிர்ந்து கொள்வது," என்று ஸ்லோ ஃபுட் இடாலியாவின் தலைவரான பார்பரா நப்பினி விளக்குகிறார்.
"இதற்கு அக்கறையும் பொறுமையும் தேவை," என்றும் அவர் கூறுகிறார்.
நட்புரீதியான சந்திப்புகள்

பட மூலாதாரம், Getty Images
அப்படி இருந்தும், 21-ஆம் நூற்றாண்டின் அழுத்தங்கள் பல இத்தாலியர்களைப் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர வைத்துள்ளன. ஆனால் நீங்கள் தனியாகச் சாப்பிட விரும்பவில்லை என்றால், இதற்கான தீர்வு நீங்கள் நினைப்பதை விட எளிதாக இருக்கும்.
உங்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைக் கண்டால் உடனடியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனிதர்களால் நீங்கள் ஏற்கனவே சூழப்பட்டிருக்கலாம். நாம் எதிர்பார்ப்பதை விட மக்கள் இதுபோன்ற அழைப்புகளை ஏற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
பொதுவாக, மக்கள் நம்மை எவ்வளவு விரும்புவார்கள், நம்முடன் நேரத்தைச் செலவிட விரும்புவார்கள் என்பதை நாம் குறைவாகவே மதிப்பிடுகிறோம். எனவே, தனிமையாக உணரும், நல்ல உணவோடு உரையாடும் வாய்ப்பைப் பாராட்டக்கூடிய யாராவது உங்களுக்குத் தெரிந்தால், அவர்களை அழைப்பதே சிறந்த தீர்வாகும்.
யாரையும் யோசிக்க முடியாமல் நீங்கள் உண்மையிலேயே சிரமப்பட்டால், அதற்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் உள்ளன.
2019ஆம் ஆண்டில், இத்தாலிய தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாவ்லோ பாவாரோ, தனிமையில் இருக்கும் உணவருந்துபவர்களை இணைக்க 'டேப்லோ' என்ற செயலியை நிறுவினார். இது இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை, இதன் சராசரி பயனர் சுமார் 30 வயதுடைய இளைஞர்கள் தான். "அந்த வயதில், நண்பர்களை உருவாக்குவது கடினம்," என்கிறார் பாவாரோ.
"நீங்கள் அதிகம் வேலை செய்கிறீர்கள், உங்களின் பல நண்பர்களுக்குக் குடும்பங்கள் உள்ளன. நீங்கள் சமூகமயமாக்க விரும்புகிறீர்கள், ஆனால் யாருடன் வெளியே செல்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.
பாவாரோவின் செயலி ஒரு குறிப்பிட்ட "வகை" நபரை இலக்காகக் கொண்டது அல்ல, இது ஒரு டேட்டிங் செயலியாகக் கருதப்படக் கூடாது என்பதை அவர் வலியுறுத்துகிறார். வாழ்க்கையில் மக்களுக்குச் சமூக வட்டம் மிகவும் தேவைப்படும் நேரத்தில் அதை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.
டி நெவ்விடம் இந்தச் செயலியைப் பற்றிக் குறிப்பிட்டபோது, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ஜமீல் ஜாகி நடத்திய பரிசோதனையைச் சுட்டிக்காட்டினார்.
அவர் கூச்ச சுபாவமுள்ள மாணவர்கள் வளாகக் காபி கடையில் சந்திப்பதற்காக "நட்புரீதியான சந்திப்புகளை" ஏற்பாடு செய்ய உதவினார். இது அவர்களின் சமூக நம்பிக்கையை உயர்த்த உதவிய ஒரு முயற்சியாகும். இத்தகைய தலையீடுகள் "மிகவும் நீண்டகால நன்மைகளைக் கொண்டிருக்கக்கூடும்," என்று அவர் கூறுகிறார்.
உணவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், நீங்கள் ஒரு நீண்டகால நட்பை உருவாக்கலாம். அந்த செயல்பாட்டில் உங்கள் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































