'அப்பா, அம்மாவின் பயணம் 2 முறை தள்ளிப்போனது' - நேபாளத்தில் காணாமல் போன பெற்றோரின் நிலையை அறிய முடியாமல் தவிக்கும் மகள்

பொற்செல்வி கோபால்
படக்குறிப்பு, பொற்செல்வி கோபால்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பிறகு அப்பாவும் அம்மாவும் ஆன்மிக பயணங்களில் ஆர்வம் காட்டினர். இந்த ஆண்டு கைலாயம் செல்வது என முடிவு செய்தனர். முன்பு இரண்டு முறை பயண தேதி தள்ளிப் போனது" என்கிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொற்செல்வி கோபால்.

"நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து பெற்றோர் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரில் பொற்செல்வியின் பெற்றோரும் அடங்குவர்.

நேபாளத்தில் இருந்து கைலாஷ் மானசரோவர் சென்ற இவர்கள் அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுமார் 106 சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளதாக தனியார் சுற்றுலா நிறுவனங்கள் கூறியுள்ளன.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் 49 பயணிகள் சென்றுள்ளனர்.

''நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து 49 பேரின் நிலை குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை" என, அந்த சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் மாரவேல் நாகப்பன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பயணிகளுக்கு வழிகாட்டியாக மாரவேல் நாகப்பனின் மகன் சத்யநாராயணன் சென்றுள்ளார்.

புதன்கிழமை காலை சுமார் 8.40 மணியளவில் தன்னை சத்யநாராயணன் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறிய அவர், " காலை 7.30 மணியளவில் கிராங் என்ற பகுதிக்கு வந்துவிட்டோம். இமிக்ரேஷன் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாக என் மகன் கூறினார்" என்கிறார்.

"எல்லையில் இருந்து கூட்டிச் செல்வதற்கு வாகனங்கள் தயாராக உள்ளதாகவும் கூறினார். ஆனால், அதன்பிறகு அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை" என்கிறார், மாரவேல் நாகப்பன்.

"இதுவரை இப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தது இல்லை. அவர்கள் காணாமல் போய்விட்டதாக அறிகிறோம். சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது இமிக்ரேஷன் அலுவலகத்தில் வெள்ளம் சூழ்ந்த காட்சிகளைப் பார்க்க முடிந்தது" எனக் கூறி அழுதார்.

சுற்றுலா நிறுவனம் மூலம் சென்ற பயணிகளின் விவரங்களை சேகரிப்பதற்காக வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த சுற்றுலா நிறுவனத்துக்கு வந்திருந்தனர்.

"அதிகாரிகள் கேட்ட விவரங்களைக் கொடுத்துள்ளேன். தூதரக அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்" என்கிறார், மாரவேல் நாகப்பன்.

நேபாள வெள்ளப் பேரிடரில் சிக்கிய குடும்பத்தினர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், PRAKASH MATHEMA / AFP via Getty Images

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 பேரின் நிலை என்ன?

இந்தநிலையில், தங்கள் உறவினர்களின் நிலையை அறிவதற்காக சிலர் சுற்றுலா நிறுவனத்துக்கு வந்திருந்தனர். அவர்களால் உரிய தகவலைப் பெற முடியாத நிலையைப் பார்க்க முடிந்தது.

அவர்களில் ஒருவரான பொற்செல்வி கோபாலிடம் பிபிசி தமிழ் பேசியது. இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது தந்தை கோபால் அருணாச்சலம் மற்றும் தாய் சரஸ்வதி ராஜகோபால் ஆகியோர் கடந்த 14-ஆம் தேதி கைலாஷ் மானசரோவருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இவர்களின் அண்டை வீட்டாரான அருள்செல்வன், லதா பானுமதி தம்பதியும் யாத்திரைக்கு உடன் சென்றுள்ளனர். இதில், அருள்செல்வன் பேராசிரியராக இருந்த ஓய்வு பெற்றுவிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக இருந்த லதா பானுமதியும் ஓய்வு பெற்றுவிட்டார். "என்னுடைய பெற்றோர் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஓய்வுக்குப் பிறகு பத்ரிநாத், கேதார்நாத் சென்று வந்துவிட்டனர்" என்கிறார் பொற்செல்வி கோபால்.

நேபாள வெள்ளப் பேரிடரில் சிக்கிய குடும்பத்தினர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Safal Prakash Shrestha/Anadolu via Getty Images

'இரண்டு முறை பயண தேதி தள்ளிப்போனது'

"இந்த ஆண்டு கைலாய யாத்திரை செல்வது என முடிவு செய்தனர். ஜூன் மாதம் 22 -ஆம் தேதி கிளம்புவதாக இருந்தது. ஆனால், திபெத்தில் திருவிழா எனக் கூறியதால் தேதி தள்ளிப் போனது. ஜூலை மாதம் 14-ஆம் தேதி செல்வதாக இருந்த பயண தேதியும் தள்ளிப் போனது" என்கிறார் அவர்.

தனது பெற்றோர் தொடர் பயணத்தில் இருந்தாலும் தினமும் இரவு வாட்ஸ்ஆப் மூலமாக பேசியதாகக் கூறிய பொற்செல்வி கோபால், "கைலாய மலையை பார்க்கும்போது வீடியோ காலில் வந்து என்னிடம் காட்டினர். ஆனால் எந்தப் புகைப்படத்தையும் அவர்கள் பகிரவில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " சாகாவில் இருந்து கிராங் கிளம்பிவிட்டதாக என் அப்பா கூறினார். கிராங் வந்த பிறகு அங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் பேசினேன். அதுதான் கடைசியாக அவர்களிடம் பேசியது" எனத் தெரிவித்தார்.

தனது பெற்றோரின் ஓய்வு காலத்துக்குப் பிறகு கைலாய பயணம் மிக முக்கியமானதாக இருந்ததாகக் கூறும் அவர், "இந்தப் பயணத்தை முடித்துவிட்டால், எங்கள் பிறவிப் பயனை அடைந்துவிடுவோம் என பெற்றோர் கூறினர். தற்போது அவர்களின் நிலையை அறிய முடியவில்லை" எனக் கூறுகிறார்.

"தனியார் சுற்றுலா நிறுவனத்துக்கும் பயணிகளின் நிலை குறித்து தெரியவில்லை. தூதரகம் மூலமாக ஏதேனும் தகவல் கிடைக்குமா என்பதற்காக செல்ல உள்ளோம்" என்கிறார் பொற்செல்வி கோபால்.

தேனி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சென்னை நிறுவனம் மூலம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கைலாய யாத்திரைக்குச் சென்றுள்ளனர்.

மூன்று பேர் குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை தெரிய வராததால் தேனி மாவட்ட ஆட்சியரிடம் அவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்த செல்வம், அவரது மனைவி சித்ராதேவி மற்றும் தாய் சரஸ்வதி ஆகியோர் கைலாய யாத்திரைக்குச் சென்றுள்ளனர்.

அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாததால் கண்டுபிடித்துத் தரக் கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். "செவ்வாய்க்கிழமை வரை அவர்களுடன் தொடர்பில் இருந்தோம். அதன்பிறகு என்ன நிலவரம் எனத் தெரியவில்லை" என செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், அருப்புக்கோட்டை அஜீஸ்நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகஸ்ட் 14 ஆம் தேதி யாத்திரை சென்றுள்ளனர்.

இவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். இவரது மனைவி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இதே வரிசையில் சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த நாகலட்சுமி, அவரது உறவினர் மகள் சசிரேகா, கருப்பூர் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் சேலம் ஆலமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் சென்னையை சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் மூலமாக யாத்திரை சென்றுள்ளனர்.

நேபாள வெள்ளப் பேரிடரில் சிக்கிய குடும்பத்தினர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Sunil Pradhan/Anadolu via Getty Images

'நேபாளம் செல்வது முதல் முறை'

சென்னை வேளச்சேரியில் வசிக்கும் கபீர் தாஸ் - விஜயா புவனேஸ்வரி ஆகியோர் கைலாய யாத்திரைக்குக் கடந்த 23-ஆம் தேதி சென்றுள்ளனர்.

இவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் மூலம் சென்றவர்கள்

இவர்களின் வீட்டுக்கு பிபிசி தமிழ் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இவர்களின் வீட்டுக்கு எதிரில் வசிக்கும் மாலினியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"அவர்கள் இருவரும் ஆன்மிக பயணங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர். அவ்வப்போது புனித தலங்களுக்குச் சென்று வருவது வழக்கம். நேபாளம் செல்வது இதுவே முதல் முறை" என்கிறார்.

இவர்களின் ஒரே மகள் பெங்களூருவில் வேலை பார்த்து வருவதாகக் கூறிய அவர், "அவர்களின் நிலை என்ன ஆனது என்ற பதற்றத்தில் இருந்தோம். ஆனால், முகாமில் பாதுகாப்பாக இருப்பதாகவும் நிலைமை சரியில்லை எனவும் மகளுக்கு போன் செய்து கூறியுள்ளனர்" என்கிறார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள தகவலில், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் நேபாளத்தில் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் மூலம் சென்றவர்கள்

சுமார் 200 இந்தியர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் மீட்கப்பட காத்திருப்பதாகவும் மேலும் 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு