'திபெத்தில் புதிதாக உருவான ஏரி' - வெள்ள அபாய எச்சரிக்கையால் நேபாளத்தில் மீண்டும் பதற்றம்

நேபாளம், திபெத், வெள்ளம்

பட மூலாதாரம், CCTV

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

புதன்கிழமை நிலச்சரிவுக்குப் பிறகு உருவான 'ஏரி' போன்ற அமைப்பு அமைந்திருக்கும் இடம் தொடர்பாக தகவல்களை சீன அரசு ஊடகமான சிசிடிவி வெளியிட்டுள்ளது.

இந்த ஏரி கிரோங் போர்ட் என்கிற இடத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்திருப்பதாகவும் இருபது லட்சம் கன மீட்டர் தண்ணீர் அளவு தண்ணீர் கொண்டிருப்பதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

அந்த ஏரி உடைந்து மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கிற அச்சத்தால் திபெத் பகுதியில் இன்று காலை மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான ஏரி போன்ற அமைப்பிலிருந்து (barrier lake) இன்று நீர் வழிந்தோடுவதாக சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஏரி நிரம்பியுள்ளதாகவும், அதிலிருந்து நீர் கசிந்து வெளியேறுவதாகவும் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் அதே வேளையில், திபெத் பகுதியில் மீட்புப் பணிகளை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அடுத்த சில மணிநேரங்களில் நிலவரத்தை இன்னும் துல்லியமாக மதிப்பிடுவதற்காக, ஏரியைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

நேபாளம், திபெத், வெள்ளம்

பட மூலாதாரம், CCTV

வெள்ள அபாய எச்சரிக்கையால் மக்கள் பதற்றம்

நேபாளம், திபெத், வெள்ளம்

பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் ஆசாதே மோஷிரி நேபாளத்தின் திரிசூலியில் நேரில் கண்டதாக பகிர்ந்த விவரங்கள்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வெள்ள அபாய எச்சரிக்கைகளுக்கு மத்தியில் மக்கள் பதற்றத்துடன் தகவலுக்காகக் காத்திருக்கின்றனர்.

வடக்கு நேபாளத்தில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கைகள் பரவி வருகின்றன; அவசர காலப் பணியாளர்கள் மக்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.

நாங்கள் இப்போது திரிசூலி ஆற்றின் மேல் பகுதியில் உள்ள ஓர் இடத்திற்கு வந்துள்ளோம்; ஆபத்து நீங்கும் வரை பாதுகாப்பிற்காக மக்கள் இங்கு கூடியுள்ளனர். ராணுவத்தினர் வந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளரும் எங்களுடன் இங்கு வந்துள்ளார்.

திரிசூலியில் உள்ள ராணுவ முகாமில் சில நிமிடங்களுக்கு ஒருமுறை ஹெலிகாப்டர்கள் தரையிறங்குகின்றன. அவை பேரிடரிலிருந்து மீட்கப்பட்டவர்களை அங்கு கொண்டு வந்து சேர்க்கின்றன; அவர்களில் சிலர் காயமடைந்த நிலையில் உள்ளனர்.

முகாமின் நுழைவாயிலுக்கு வெளியே, தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவலுக்காகவோ அல்லது நன்கு தெரிந்த முகங்களைப் பார்ப்பதற்காகவோ டஜன்கணக்கான மக்கள் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

மீட்கப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைக் கொண்ட காகிதத் தாள்கள் சுவரில் ஒட்டப்பட்டுள்ளன; அவற்றைச் சுற்றிலும் மக்கள் கூட்டமாக நின்று பார்க்கின்றனர்.

பலி எண்ணிக்கை 470-ஐ கடந்ததாக நேபாள ராணுவம் தகவல்

முன்னதாக வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 900 பேர் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 119 பேர் வெளிநாட்டவர்கள் என்கிற நிலையில் 92 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 470-ஐ கடந்துள்ளதாகவும் நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு