வங்கக்கடலில் 'அர்னாப்' புயல் நகர்வு எப்படி உள்ளது? தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன?

பட மூலாதாரம், India Meteorological Department
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் எச்சரிக்கைச் சின்னங்கள் ஏற்றிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தின் சில பகுதிகளில் அக்டோபர் 27-ஆம் தேதி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை மையம், அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வெளியிட்ட துறைமுகங்களுக்கான எச்சரிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், India Meteorological Department
புயலின் தற்போதைய நிலை என்ன?
இந்திய வானிலை ஆய்வு மையம் , புயல் அர்னாபின் நகர்வு குறித்து இன்று அதிகாலை 3 மணிக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அதில், அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அர்னாப் மிக தீவிர புயல், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும் புயல் இருந்தது.
மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவுக்குத் தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்குக் கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவுக்குத் தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் நிலைகொண்டிருந்தது.
அந்தமான் தீவுகளில் உள்ள ஸ்ரீ விஜயபுரத்துக்கு மேற்கே வடமேற்குத் திசையில் 870 கி.மீ. தொலைவில் புயல் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Soumyabrata Roy/NurPhoto via Getty Images
நாளை (அக்டோபர் 28) கரையைக் கடக்க வாய்ப்பு
அக்டோபர் 27-ஆம் தேதி மாலை வரை புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 27) தமிழகத்தில் மழை எங்கு பெய்யும்?
வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, அக்டோபர் 27-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தென் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அக்டோபர் 29, 30-ஆம் தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Soumyabrata Roy/NurPhoto via Getty Image
தமிழகத் துறைமுகங்களில் எச்சரிக்கை
புயல் ஆந்திரக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல துறைமுகங்களில் எச்சரிக்கைச் சின்னங்களை ஏற்றிவைக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் உள்ளூர் எச்சரிக்கைச் சின்னம் எண் 3-ஐ ஏற்றிவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் எச்சரிக்கைச் சின்னங்கள் எண் 2 மற்றும் 3-ஐயும் ஏற்றிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் எச்சரிக்கைச் சின்னம் எண் 2-ஐ ஏற்றிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அக்டோபர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். பின்னர் காற்றின் வேகம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.
ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 27-ஆம் தேதி காலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை இருக்கக்கூடும். நண்பகலுக்குப் பிறகு மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வரை அதிகரித்து, இடையிடையே 110 கி.மீ. வேகத்தை எட்டக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அக்டோபர் 28-ஆம் தேதி காலை ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். இடையிடையே 140 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால், புயல் பாதிக்கக்கூடிய கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆந்திரா, ஒடிசாவில் சிவப்பு எச்சரிக்கை
அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் இன்று மற்றும் நாளை பரவலாக மழை பெய்யும் என்றும், சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் ஆந்திரப் பிரதேச மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பிரகர் ஜெயின் எச்சரித்தார்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளுக்கும், ஒடிசாவின் தெற்குக் கடலோரப் பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































