முடி உதிர்வு சிகிச்சையில் 'புதிய நம்பிக்கை' - எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது என்ன?

- எழுதியவர், விக்டோரியா டெர்பிஷயர்
- பதவி, நியூஸ்நைட் நிகழ்ச்சித் தொகுப்பாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
என் தலைமுடி உதிரத் தொடங்கிய அந்த தருணம் எனக்கு இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது.
ஒரு சனிக்கிழமை மாலை, என் நண்பரின் 40-வது பிறந்தநாள் விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியின் மீது குனிந்து தலைமுடியை அலசிக் கொண்டிருந்தேன். அதற்கு 17 நாட்களுக்கு முன்புதான் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையாக ஆறு கீமோதெரபி அமர்வுகளில் முதல் சிகிச்சையை மேற்கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு பல நாட்களுக்கு பின்னும் தலைமுடி உதிரவில்லை.
"ஒருவேளை அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருத்தியாக இருக்கலாம்" என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், என் தலையின் மீது ஷவரை பிடித்தபடி இருந்தபோது, திடீரென அதில் கற்றை கற்றையாக முடி இருந்ததைப் பார்த்தேன். நீண்ட பழுப்பு நிற முடிக்கற்றைகள் என் கண் முன்னே கொட்டிக் கொண்டிருந்தாலும் அதைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
"எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அது இவ்வளவு திடீரென்று நிகழும் என நான் எதிர்பார்க்கவில்லை.
கீமோதெரபி சிகிச்சையின் போது, "கோல்ட் கேப்" எனப்படும், தலைமுடியைப் பாதுகாக்க உதவும் குளிர்ந்த சிறப்பு தலைக்கவசத்தை அணிந்திருந்தேன். ஆனால் அது அனைவருக்கும் பயனளிக்காது என்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.
இது மிகைப்படுத்தலாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் இழப்பதைவிட கூட, தலைமுடியை இழப்பது மிகவும் வேதனையானதாக இருந்தது.
ஏன்? என்று கேட்டால், என் தலைமுடி இல்லாமல் நான் நானாகவே இல்லை.
என்ன்னுடைய தலைமுடி எனது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை, அது உதிரத் தொடங்கிய பிறகுதான் நான் உணர்ந்தேன்.

பட மூலாதாரம், Victoria Derbyshire
இப்போது, ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், லட்சக்கணக்கான மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லை நெருங்கிவிட்டதாக நம்புகின்றனர்.
பேராசிரியர் டகாஷி சுஜி தலைமையிலான குழுவினர் எலிகளில் முடி வளர்ச்சியின் முழு சுழற்சியையும் மீண்டும் உருவாக்கிக் காட்டியுள்ளனர்; அதாவது, முடி இயற்கையாகவே வளர்ந்து, உதிர்ந்து, மீண்டும் வளரும் நிலையை அவர்களால் சாத்தியமாக்க முடிந்துள்ளது.
பேராசிரியர் தகாஷி சுஜி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, எலிகளிடம் முடியின் முழு வளர்ச்சிச் சுழற்சியையும் தங்களால் மறுஉருவாக்கம் செய்ய முடிந்தது என்று கூறுகிறது. ஏற்கனவே மாற்று அறுவை சிகிச்சை மூலம் முடியை வளர்க்க முடிந்தாலும், உடலுக்குள் இருக்கும் இயற்கையான முடியைப் போலவே காலப்போக்கில் மீண்டும் மீண்டும் வளர்ந்து, உதிர்ந்து, மீண்டும் வளரும்—திறன் கொண்ட முடி வேர்க்கால்களை உருவாக்குவது மிகவும் சவாலான காரியமாகவே இருந்து வந்தது.
புற்றுநோய் சிகிச்சை, அலோபீசியா அல்லது முதுமை காரணமாக முடி இழப்பை சந்திக்கும் பெண்களுக்கு, இதுபோன்ற திருப்புமுனைகள் ஒரு காலத்தில் முடி உதிர்வை தடுப்பது அசாத்தியமானது என்ற நிலையை முற்றிலுமாக மாற்றி, மீண்டும் முடியைப் பெற முடியும் என்பதை சாத்தியமாக்கியுள்ளது.
உலகளவில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்க்கும் இந்த பிரச்னை குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் முடி உதிர்வை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க, முடி உதிர்வால் ஏற்படும் உணர்வுபூர்வமான தாக்கம் ஏன் இன்னும் பெரும்பாலும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது? மேலும், முடி இழப்பு குறித்த நமது எதிர்வினையானது நமது அடையாளம், கட்டுப்பாட்டு உணர்வு மற்றும் நம்மை நாமே நோக்கும் விதம் ஆகியவற்றைப் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது.
வரலாற்று ரீதியாக முடியின் குறியீடுகள்
வரலாறு முழுவதும், முடி என்பது வெறும் தலைமுடியாக மட்டும் இருந்ததில்லை.
பண்டைய எகிப்தில், பார்வோன்களும் உயர்குடிப் பெண்களும் தங்களின் அதிகாரத்தைக் காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்ட பின்னல் கொண்ட விக்-களை அணிந்தனர். இடைக்காலத்தில் , பெண்களின் நீளமான முடி என்பது பெண்மை மற்றும் நற்பண்புகளுடன் தொடர்புடையதாக மாறியது. 17-ஆம் நூற்றாண்டில், ஆண்கள் தங்களின் செல்வம் மற்றும் உயர்ந்த சமூக அந்தஸ்தைக் குறிக்க "பெரிவிக்" அதாவது நீளமான, அடர்த்தியான செயற்கைச் சுருள் முடிகளை — அணிந்தனர். 1920-களின் வாக்கில், 'பாப்' செய்யப்பட்ட குட்டையான முடியைக் கொண்ட பெண்கள், பெண்களின் சுதந்திரம் மற்றும் புரட்சியின் அடையாளமாகப் பார்க்கப்பட்டனர்.
"தலைமுடி நமது அடையாளத்தை வடிவமைக்கிறது," என்று மனநல மருத்துவர் சில்வியா கராசு கூறுகிறார். "இது நமது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைக் காட்டும் ஒரு உயிரியல், உடலியல் மற்றும் சமூகக் குறியீடாகும்."
நிச்சயமாக, மற்றவர்களிடம் நாம் முதலில் கவனிக்கும் விஷயமும் இதுவாகவே இருக்கலாம். "பாலினம், இனம் மற்றும் மதம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள தலைமுடி மூலம் பெரும்பாலும் அறிந்துக் கொள்ளமுடியும். இது அடையாளத்தோடு மிகவும் பிணைக்கப்பட்டுள்ளதால், மக்களை நாம் வகைப்படுத்துவதில் மிக முக்கியமான ஒன்றாக முடிந்துவிடுகிறது," என்று அவர் கூறுகிறார்.
முடி என்பது நமது கண்ணியத்தோடும் தொடர்புடையது. ஒருவருடைய அடையாளத்தையும் மனிதத்தன்மையையும் பறிப்பதற்காக, வலுக்கட்டாயமாக முடியை மொட்டையடிப்பது வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனி சித்திரவதை முகாம்களில், யூத மக்களின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு, அவர்களின் ஆடைகளுக்குப் பதிலாக சிறை உடைகள் வழங்கப்பட்டன. 1944-ல் பிரான்ஸ் நாடு விடுவிக்கப்பட்ட பிறகு, ஜெர்மனி ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு தண்டனை வழன்குவதற்காகவும் அவமதிக்கவும் அவர்களின் தலைகள் பொதுவெளியில் மொட்டையடிக்கப்பட்டன.
ராபர்ட் கப்பாவின் 'சார்ட்ரஸின் மழிக்கப்பட்ட தலை கொண்ட பெண்' (The Shaved Woman of Chartres) என்ற புகழ்பெற்ற புகைப்படம், நெற்றியில் ஸ்வஸ்திகா சின்னம் வரையப்பட்ட ஒரு இளம் தாய் ஒருவர், ஏளனம் செய்யும் கூட்டத்திற்கு நடுவே நடந்து செல்வதைக் காட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images
முடி இவ்வளவு ஆழமான சமூக மற்றும் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், அதை இழப்பது ஏன் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்பதையும், ஒருநாள் அதை மீண்டும் வளரச் செய்ய முடியுமா என்பதையும் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக முயன்று வருவது ஆச்சரியத்திற்குரியதல்ல.
இது வெறும் பகட்டுக்கான விஷயம் அல்ல
'பியூச்சர் ட்ரீம்ஸ்' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நான் நடத்தும் 'அண்ட் தென் கேம் பிரெஸ்ட் கேன்சர்' என்ற போட்காஸ்ட்டிற்காக, பல பெண்களிடம் அவர்களின் முடிக்கும் அவர்களுக்குமான உறவைப் பற்றி நேர்காணல் செய்துள்ளேன். மீண்டும் மீண்டும், அந்தப் பெண்கள் அனைவரும், 'தலைமுடிக்கும், தற்பெருமை அல்லது அழகுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்று ஒரே விஷயத்தைத்தான் கூறினார்கள்.
நிக்கி எல்கிங்டன் என்ற சிகையலங்கார நிபுணர், தனக்கு கீமோதெரபி சிகிச்சை நடக்கும் போது தனது முடியை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக என்னிடம் கூறினார். "இது வெறும் அழகு சார்ந்த விஷயம் அல்ல… மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன், ஆனால் தலைமுடி என்பது உங்கள் அடையாளம். எனக்கு புற்றுநோய் இருப்பதை நான் பொதுவெளியில் தெரியப்படுத்த விரும்பவில்லை" என்று அவர் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, யாராவது அவரிடம் சொல்லக்கூடிய மிக மோசமான வார்த்தை எதுவென்றால், "இது வெறும் தலைமுடிதானே, இதைப் பற்றிக் கவலைப்படாதே" என்பதுதான்.
பள்ளி செவிலியரும், இரண்டு குழந்தைகளின் தாயுமான நடாஷா ஆண்டர்சன், தான் வளரும் போது தனது முடியை வைத்து விதவிதமாகப் பரிசோதனை செய்ய விரும்புவதாகக் கூறினார். "ஒரு வாரம் பெரிய ஆஃப்ரோ ஸ்டைல், அடுத்த வாரம் ஹேர் எக்ஸ்டென்ஷன்ஸ்" என்று அவர் நினைவு கூர்கிறார்.
"அது வெறும் முடி மட்டுமல்ல, அது எனது கலாசாரம்."
கீமோதெரபி மூலம் முடி கொட்டக்கூடும் என்ற நிலை வந்தபோது, தன் சகோதரனை அழைத்து தலையை மொட்டையடித்து விடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
"மொட்டையடிக்கும் போது எனக்கு விடுதலை பெற்ற உணர்வு ஏற்பட்டது போல் உணர்ந்தேன்" என்று அவர் கூறுகிறார். "சூழ்நிலையை என்னுடையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தேன்… அது தானாக உதிர்வதைப் பார்ப்பது எனக்கு அதிக வலியையும் மன உளைச்சலையும் தந்திருக்கும்."
புற்றுநோயின் மிகக் கடினமான பகுதிகளில் ஒன்று, அதில் எதன் மீதும் நமக்குக் கட்டுப்பாடு இருக்காது என்பதுதான். நோய் கண்டறிதல், சிகிச்சை, அல்லது அதன் பக்கவிளைவுகள் என எதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. சில பெண்களுக்கு, முடி தானாக உதிர்வதற்கு முன்பே தாங்களாகவே அதை மழித்துக்கொள்வது, தங்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய அளவிலான கட்டுப்பாட்டையாவது மீண்டும் கையில் எடுப்பதற்கான ஒரு வழியாக மாறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
எனது சிகிச்சையின் போது என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், முடி கொட்டுவது குறித்த கவலைகள் பெரும்பாலும் 'மேலோட்டமானவை' என்று ஒதுக்கித் தள்ளப்பட்டதுதான்.
"உயிர் பிழைத்திருக்கிறாயே, அப்புறம் ஏன் முடியைப் பற்றிக் கவலைப்படுகிறாய்?" என்பது ஒரு நியாயமான கேள்விதான். ஆம், நான் உயிர் பிழைத்தது என் அதிர்ஷ்டம்தான். ஆனால், ஒரு நோயிலிருந்து உயிர் பிழைப்பதும், அதே நேரத்தில் உங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியை இழந்ததற்காக துக்கப்படுவதும் ஒன்றையொன்று விலக்கும் விஷயங்கள் அல்ல; அவை இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கக்கூடியவைதான்.
சில்வியா கராசு என்னிடம் கூறியது போல, நம்மில் பலருக்கு முடி கொட்டுவது என்பது "ஒரு நோயாளி என்பதற்கான அடையாளம்" ஆகும்.
செயற்கை முடி அலங்காரம் 'விக்'
கீமோதெரபி சிகிச்சையின் போது எனது முடியில் 50% முதல் 75% வரை கொட்டிவிட்டது. அது நம்ப முடியாத அளவுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது. ரிச்மண்டில் உள்ள ஒரு செயற்கை முடி அலங்கார கடையில் நான் அமர்ந்திருந்ததை இப்போதும் நினைவுகூர்கிறேன்; அப்போது கடையின் உரிமையாளர் ஏமி ஹோல்ட், கொத்து கொத்தாக உதிர்ந்து கொண்டிருந்த எனது சிக்கலான முடியை மென்மையாக வாரிக்கொண்டிருந்தார்.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளரான டயான் ட்ரஸனின் கருத்துப்படி, நோய் கண்டறியப்பட்ட அதிர்ச்சியோடு முடி கொட்டுவதும் சேர்வது என்பது "இரட்டைத் தாக்குதல்" போன்றது.
"ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது, பிறகு சிகிச்சை தொடங்கப்படுகிறது, அதன் பின் முடி உதிர்தல் என்ற கொடூரமான விஷயம் நடக்கிறது; இது மக்கள் உங்களைப் பார்க்கும் விதத்தையே மாற்றிவிடுகிறது. அறுவை சிகிச்சை மற்றும் மிகக் கொடூரமான சிகிச்சைகளை எதிர்கொள்வதோடு சேர்த்து, நீங்கள் கூடுதலாகக் கையாள வேண்டிய ஒரு விஷயமாக முடி உதிரும் விஷயமும் மாறிவிடுகிறது."

பட மூலாதாரம், Victoria Derbyshire
என்னைப் பொறுத்தவரை, ஒரு விக் வாங்குவது முக்கியமானதாக இருந்தது. அதன் மூலம் என்னால் தினசரி தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொகுத்து வழங்க முடிந்தது. நான் மொட்டைத் தலையுடனோ அல்லது தலையில் ஸ்கார்ஃப் அணிந்தோ வருவதைப் பார்த்து, நாங்கள் வழங்கும் செய்திகளிலிருந்து பார்வையாளர்களின் கவனம் சிதறுவதை நான் விரும்பவில்லை. அதற்கு விக் மட்டுமே சிறந்த தேர்வாக இருந்தது.
முடியை தானமாக வழங்கிய அல்லது விற்ற பெண்களிடமிருந்து பெறப்பட்ட உண்மையான முடியைக் கொண்டு ஏமி எனக்காக விக்-ஐ உருவாக்கினார். அந்த விக்கை முதன்முதலில் பார்த்தபோது, அது ஒரு கனவு போல இருந்தது.
அது என் சொந்த முடியைப் போலவே இருந்தது: நிறம், வெட்டு, நீளம் என அனைத்தும் அப்படியே இருந்தன. என் மனதிற்குள் ஒரு பக்கம் நம்ப முடியாத அதிர்ச்சியும், மற்றொரு பக்கம் உணர்ச்சிப் போராட்டமும் அலைகழித்தன. ஒரு நிமிடம் கண்ணீர் வரும், அடுத்த நிமிடம் அது என் தினசரி வாழ்க்கையை வழக்கம் போல் தொடர அனுமதிக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி வரும்.
அறிவியல் இன்னும் போராடுவது ஏன்?
விஞ்ஞானிகளால் இன்னும் முடி உதிர்வின் உயிரியலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் திசு பொறியியல் துறை பேராசிரியரான கிளேர் ஹிக்கின்ஸ் கருத்துப்படி, முடி உதிர்தல் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி பெறுவதிலும் கவனம் ஈர்ப்பதிலும் பல ஆண்டுகளாகப் பெரும் போராட்டமே நிலவி வருகிறது. முடி உதிர்வு பற்றிய மருத்துவ ஆராய்ச்சிகள் பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே நடந்துள்ளன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிரும் விதம் மற்றும் அதற்கான மரபணு காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம் என்றாலும், பெண்களுக்கான பிரத்யேக ஆராய்ச்சிகள் இன்னும் போதிய அளவில் இல்லை என்பதை பேராசிரியர் கிளேர் ஹிக்கின்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
பெரும்பாலான ஆராய்ச்சிகள் ஆண்களின் முடி உதிர்வை நோக்கியே இருந்துள்ளன என்று அவர் கூறுகிறார். இதற்கு ஒரு காரணம், ஆண்கள் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிக்கான உச்சந்தலை மாதிரிகள் எளிதாகக் கிடைத்தன.
"ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரே மாதிரியானதுதான் என்று மக்கள் நினைப்பதால், இரண்டுமே பெரும்பாலும் ஒன்றாகவே கையாளப்படுகின்றன. ஆனால், அவை அவ்வாறு இருக்கக் கூடாது என நினைக்கிறேன்" என்கிறார் அவர்.
பொதுவாக முன் நெற்றியில் முடி பின்வாங்குதல் மற்றும் உச்சந்தலையில் முடி மெலிதல் குறித்த பெரிய மரபணு ஆய்வுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். மரபணு முழுமை சங்கம ஆய்வுகள் என அறியப்படும் இந்த ஆய்வுகள், இப்பிரச்னையுடன் தொடர்புடைய பல மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளன. ஆனால், இந்த ஆய்வுகள் அனைத்தும் ஆண்களிடம் மட்டுமே செய்யப்பட்டன.

சமீபத்தில், ஜெர்மனியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், பொதுவாக தலையின் மேற்பகுதியில் ஏற்படும் முடி உதிர்தலை உள்ளடக்கிய, பெண்களின் முடி உதிர்தல் முறையின் மரபணுக்களை ஆய்வு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மரபணுக்களில் சிலவற்றையாவது ஆண்களின் மரபணுக்களோடு ஒத்துப் போகும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர்.
"ஆனால், அப்படி எந்தவொரு ஒற்றுமையும் இருக்கவில்லை," என்கிறார் ஹிக்கின்ஸ். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் முடி உதிர்வு வெவ்வேறான காரணங்களால் ஏற்படலாம் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன; இருப்பினும் அந்த காரணங்கள் என்னவென்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
"மயிர்க்கால்களில் உள்ள செல்கள் குறைகின்றன என்பது நமக்குத் தெரியும், ஆனால் அவை இறக்கின்றனவா அல்லது வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விடுகின்றனவா என்று நமக்குத் தெரியாது. முடி உதிர்வு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான செயல்முறை பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும்."
முடி உதிர்வு விஷயத்தில் ஒரு புதிய நம்பிக்கை
அதனால்தான் ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் சுஜியின் ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. அவரும் அவரது குழுவும் இந்த புதிரின் விடுபட்ட ஒரு பகுதியை கண்டுபிடித்துள்ளதாகக் கருதுகின்றனர்.
நீண்ட காலமாக, முடி வளர்வதற்கு இரண்டு முக்கிய வகையான செல்கள் மட்டுமே காரணம் என்று விஞ்ஞானிகள் நம்பினர்: முதலாவதாக, மயிர்க்கால்களை உருவாக்கும் எபிதீலியல் தண்டு செல்கள்; இரண்டாவதாக, முடி எப்போது வளர வேண்டும் என்று கட்டளையிடும் டெர்மல் பாபிலா செல்கள்.
இந்த செல்களை மட்டும் வைத்து ஒரு ஆய்வகத்தில் முடியை வளர்க்க முடியாது, அவற்றை தோலுக்குள் மாற்று அறுவை சிகிச்சை செய்து, அதன் கீழே உள்ள திசுக்களுடன் இணைக்கும்போது மட்டுமே முடியை வளர்க்க முடியும்.
ஆனால், தனது ஆய்வு "ஒரு புதிய மூன்றாவது வகை செல்லை" கண்டறிந்துள்ளதாக சுஜி கூறுகிறார். அதற்கு 'ஹேர் ஃபாலிக்கிள் ரீஜெனரேட்டிவ்-சப்போர்ட்டிங் செல்' (மயிர்க்கால் மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் செல்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, இந்த புதிய செல், ஆய்வகத்திலேயே முடியை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை நோக்கி விஞ்ஞானிகளை ஒரு படி நெருக்கமாகக் கொண்டு செல்லக்கூடும்.
"எளிமையான சொற்களில் கூறுவதானால், எங்கள் ஆய்வு மயிர்க்கால்களின் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் ஒரு செல்லைக் கண்டறிந்துள்ளது" என்கிறார் சுஜி.
இந்த கண்டுபிடிப்புகள் ஒரு "முக்கியமான திருப்புமுனை" என்றும், அலோபீசியா எனப்படும் முடி உதிர்வு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் சுஜி கூறுகிறார்.

பட மூலாதாரம், Takashi Tsuji
இந்த ஆய்வில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்பதை கிளேர் ஹிக்கின்ஸ் ஒப்புக்கொள்கிறார். ஆய்வகச் சூழலில் இதுவரை முழுமையற்ற முடி மயிர்க்கால்களை மட்டுமே உருவாக்க முடிந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
"இதுவரை யாரும் இதுபோன்று இயல்பான சுழற்சி முறையில் செயல்படும் மயிர்க்கால்களை உருவாக்கியதில்லை" என்று அவர் கூறுகிறார். "இது ஒரு மிகப்பெரிய மைல்கல்." அதாவது, இயற்கையான முடியைப் போலவே இந்த மயிர்க்கால்களாலும் முடியை மீண்டும் மீண்டும் வளர்க்கவும், உதிர்க்கவும், மீண்டும் வளரச் செய்யவும் முடிந்தது.
இந்த ஆய்வு எலிகள் மீது மட்டுமே நடத்தப்பட்டது; அதிலும் குறிப்பாக அவற்றின் மீசைப் பகுதியிலிருந்து பெறப்பட்ட செல்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. மனிதர்களின் முடி வளர்ச்சி மிகவும் சிக்கலானது என்பதால், இந்த ஆய்வு முடிவுகளை மனிதர்களுக்குப் பயன்படுத்தும் வகையில் மாற்றுவது சவாலானதாகவே உள்ளது.
இருப்பினும், நம்பிக்கையுடன் இருக்கும் சுஜி, "முன்பை விட இப்போது நாம் இலக்கை மிக நெருங்கியுள்ளோம் என்று நம்புகிறோம்" என்கிறார். கடந்த ஆண்டு, சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பார்த்தேன்; அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேல்ஸ் இளவரசி கேத்தரினுக்கு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதில், "அது ஒரு மோசமான விக்" என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது எனக்கு மிகவும் கொடூரமானதாகவும் மனவேதனை அளிப்பதாகவும் தோன்றியது.
அவர் என்ன வகையான புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டார், அவருக்கு முடி கொட்டியதா, அல்லது அவர் விக் அணிந்திருந்தாரா என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கீமோதெரபி சிகிச்சையின் போது என்னைப் பற்றி யாராவது அப்படிச் சொல்லியிருந்தால், நான் வீட்டிற்குள்ளேயே ஒளிந்துகொள்ள விரும்பியிருப்பேன்.
உண்மையில், நோயின் காரணமாக முடி கொட்டுவதை யாரும் விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை. அது நம் மீது திணிக்கப்படும் ஒன்று; அதனால்தான் அதை ஏற்றுக்கொள்வது - குறைந்தது எனக்காவது - மிகவும் கடினமாக இருந்தது.
இது முக்கியமான விஷயம், ஏனென்றால் முடி என்பது வெறும் முடி மட்டுமல்ல. நம்மில் பலருக்கு, முடி என்பது நமது அடையாளம், நமது தனிப்பட்ட விஷயம், மேலும் நாம் தன்னம்பிக்கையாக உணர்வதற்கான ஒரு வழியாகும். எனவே, முடி ஏன் இவ்வளவு முக்கியமானது என்று நான் கூறுவதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்.
கூடுதல் தகவல் சேகரிப்பு: ஃப்ளோரன்ஸ் ஃப்ரீமேன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































