விஜய் தொடங்கிய 'சிங்கப்பெண்' படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்

பட மூலாதாரம், X/DIPR

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

தவெக ஆட்சி அமைந்ததும், முதலமைச்சர் விஜய் முதலில் கையெழுத்திட்ட மூன்று கோப்புகளில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்' என்ற அறிவிப்பும் அடங்கும்.

இந்த திட்டத்தை முதலமைச்சர் மே 29ம் தேதி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நிகழ்ச்சி தள்ளிப்போனது, இது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தநிலையில் இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தபிறகு பேசிய முதலமைச்சர், "இந்த நிகழ்வு தன் மனதிற்கு நெருக்கமான ஒன்று" என்று தெரிவித்தார்

காணொளிக் குறிப்பு,

முதலமைச்சர் பேசியது என்ன?

ஆட்சிக்கு வந்த குறைந்த நாட்களிலேயே இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதாக பேசிய விஜய், ''தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். அதற்கான முதல் படிதான் இந்த திட்டம்" என்று கூறினார்.

அதேநேரத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சில நிகழ்வுகளை பார்க்கும்போது கண்கள் கலங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

"இந்த பிரச்னைகள் நடப்பதற்கு முக்கியக் காரணம் போதைப்பொருள் கலாசாரம். அதனை வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்" அவர் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றம், போதைப்பொருள், சட்டம் ஒழுங்கு இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று பேசிய முதலமைச்சர், ''இதனை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்பதையே நாம் முன்னெடுத்து செல்ல வேண்டியது" என்று குறிப்பிட்டார்.

''இது சமூக ஒழுங்கு, தனி மனித ஒழுங்கு உள்ளிட்டவை சம்மந்தப்பட்டது. தினசரி வாழ்வில் பெண்கள் பயமின்றி தைரியமாக வாழ வேண்டும். இதுதான் நமது முதல் இலக்காக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பெண்களை தொந்தரவு செய்துவிட்டு சென்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அவர் கூறினார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்காக வழங்கப்பட்ட ரோந்து வாகனத்தை இயக்கிய முதலமைச்சர்.

பட மூலாதாரம், X/CMOTamilnadu

படக்குறிப்பு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்காக வழங்கப்பட்ட ரோந்து வாகனத்தை இயக்கிய முதலமைச்சர்.

354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 2545 புதிய பணியிடங்களை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் இந்த விழாவில் தெரிவித்தார்.

மேலும், ''இந்த சிறப்புப்படையின் பயன்பாட்டிற்காக 319 நான்கு சக்கர வாகனங்கள், 101 இரு சக்கர வாகனங்கள் , நிகழ் நேரக் காணொளி ஒளிப்பரப்புத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்திய உடுப்புகள், கடினமான இடங்களை கண்காணிக்க டிரோன்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும்'' என்று தெரிவித்த முதலமைச்சர் இந்த திட்டத்திற்காக 354 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர்

பட மூலாதாரம், X/CMOTamilnadu

தமிழ்நாடு காவல்துறை கூறியது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பெண் காவலர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.

''இதுவரை அனைத்துத் திட்டங்களிலும் இணைந்து பணியாற்றுவதுபோல இருந்தது. தற்போது சிங்கப் பெண் திட்டம் பெண்களுக்கான பிரத்யேக திட்டம். இதனால் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கும். முதலமைச்சரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்வகையில் நாங்கள் பணியாற்றி, பெண்களுக்கு எவ்வித இடையூறும் வராமல் தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.'' என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் பேபி கூறினார்.

இது பிற மகளிர் காவல்நிலையங்களுக்கு கீழ் வருமா? அல்லது தனியாக இயங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த உதவி ஆய்வாளர் சசிப்பிரியா,''காவல்நிலையத்திற்கு கீழ்தான் செயல்படும். இதை ஒரு பிரிவாக தொடங்கியுள்ளனர்.எங்களால் முடிந்த ஆதரவை நாங்கள் கொடுப்போம். அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. '' என கூறினார்.

சிங்கப்பெண் சிறப்புப் பணிப்படை தொடக்கம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், ''பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்த அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பெண்களின் பாதுகாப்புக்காக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாகவே சிங்கப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படையினர் பெண்கள் அதிகம் கூடும் பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள பிற இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.மேலும், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக பிற துறைகளுடனும் இணைந்து செயல்படுவார்கள்," என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் "

பட மூலாதாரம், X/DIPR

எதிர்வினைகள் என்ன?

''கஷ்டபட்டு தளம் அமைத்து அஸ்திவாரம் போட்டு வீட்டைக் கட்டி எழுப்புவது ஒன்று. அடுத்தவர் கட்டி முடித்த வீட்டிற்கு பால் காய்ச்சுவது மற்றொன்று. ஆனால், அடுத்தவர் வீட்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டு, அதை சொந்த வீடு போல ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது இன்னும் புதுமையானது. இதைத் தான் இன்று சிங்கப்பெண் சிறப்புப்படை என்ற பெயரில் முதல்வர் செய்துள்ளார்'' என அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

''அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா பேட்ரோல் என அதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது இன்றைய அரசு'' எனவும் அது கூறியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறையின் வாத்தியக் குழு விஜய் நடித்த படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே பாடலை' வாசித்ததை திமுக விமர்சித்துள்ளது.

''அரசு விழாவில், காவல்துறையின் வாத்தியக் குழுவை வைத்து தன்னுடைய சினிமா படப் பாடல்களை வாசிக்கச் செய்து ரசிக்கிறார் முதலமைச்சர் விஜய். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு இயந்திரத்தையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையையும் தனது தனிப்பட்ட புகழுக்காக பயன்படுத்துவது தான் மக்கள் கேட்ட மாற்றமா? உங்களின் சொந்த புகழ்ச்சிக்காக காவல்துறையை இப்படி தாழ்த்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.'' என திமுகவின் அயலக பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவை திமுக ஐடி விங் ரீபோஸ்ட் செய்துள்ளது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்து விளக்கப்பட்ட ஏ.ஐ காணொளியில் உள்ள எழுத்துப்பிழைகள் குறித்தும் சமூக ஊடங்களில் விவாதிக்கப்பட்டது.

''சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.'' என பாஜக நிர்வாகி வானதி சினிவாசன் விமர்சித்துள்ளார்.

''பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?'' எனவும் அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு