ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் வழங்க முடியுமா?டிரம்ப் அறிவிப்பால் எழும் கேள்விகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெக்சாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்காலத் தேர்தல் தேசிய மாநாட்டின் முதல் நாளில் உரையாற்றுகிறார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
    • எழுதியவர், அலெக்ஸ் பாய்ட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாத தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்தும், இந்தத் திட்டம் சட்டப்பூர்வமானதா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை.

புதன்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் டிரம்பின் இந்தக் கருத்தை அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர். ஆனால், ஜனநாயகக் கட்சியினர் இதனை "வெற்று வாக்குறுதி" என்று விமர்சித்தனர். அதே நேரத்தில், சிலர் இதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இந்தத் திட்டத்துக்கு எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பது குறித்து டிரம்ப் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. எனினும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், இதற்கான தொகை வரி வருவாய் மூலம் வழங்கப்படலாம் என்றும், இதுபோன்ற காசோலைகள் பணக்கார அமெரிக்கர்களுக்கு வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.

டிரம்பின் வாக்குறுதி சட்டப்பூர்வமானதா?

அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டத்தின் படி, ஒருவர் எந்த விதத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதைப் பாதிக்கும் நோக்கத்துடன் பணம் வழங்குவது சட்டவிரோதமாகும்.

எனினும், புதன்கிழமை டெக்சாஸில் டிரம்ப் வெளியிட்ட இந்த அறிவிப்பு, வரிகளைக் குறைப்பதற்கான உறுதிமொழியாகக் கருதப்படலாம் என்றும், அது சட்டப்பூர்வமானது என்றும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் முனைவர் ஜோன் மஹோனி, இந்த அறிவிப்பு சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்று தான் கருதுவதாக பிபிசி-யிடம் தெரிவித்தார். இது தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்படும் வாக்குறுதியைப் போன்றதாக இருக்கும் என்றும், அரசியல்வாதிகள் "பொதுவாக இதை இவ்வளவு வெளிப்படையாகச் செய்வதில்லை" என்றும் அவர் கூறினார்.

"ஒருபுறம் பார்த்தால், இது லஞ்சம் போலத் தெரிகிறது. குடியரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள், உங்களுக்கு பணம் கிடைக்கும் என்பது திட்டவட்டமாக சட்டவிரோதமானதாக இருக்கும்.

"ஆனால், மறுபுறம், ஒருவர் எப்படி வாக்களித்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் இது வழங்கப்படும். எனவே, அந்த வகையில் இது லஞ்சம் அல்ல.

"இது சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். 'எனது கட்சி வெற்றி பெற்றால், நாங்கள் வரிகளைக் குறைப்போம்' என்று கூறுவதைப் போன்ற அதே வகையான தேர்தல் வாக்குறுதிதான் இது. ஒவ்வொரு கட்சியும் இதை எப்போதும் செய்கின்றன... இது வெளிப்படையாகவே சட்டப்பூர்வமானது"என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், சாத்தம் ஹவுஸின் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா திட்டத்தின் இயக்குநர் லாரல் ராப், தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் வழக்கமாக அளிக்கும் வாக்குறுதிகளிலிருந்து டிரம்பின் அறிவிப்பு "முற்றிலும் மாறுபட்ட, மிகவும் நேரடி பரிவர்த்தனை போன்ற ஒப்பந்தமாக" தோன்றுகிறது என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2026ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாளில் உரையாற்றுவதற்காக மேடைக்கு நடந்து வந்தபோது, பங்கேற்பாளர்களை வரவேற்கிறார். இந்த நிகழ்வு 2026 செப்டம்பர் 9ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சென்ட்டரில் நடைபெற்றது.
நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தனது நிர்வாகத்தின் சாதனைகளை முன்னிறுத்துவதுடன், குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவைத் திரட்டும் நோக்கில், ரிபப்லிக்கன் நேஷனல் கமிட்டியின் முதல் இடைக்காலத் தேர்தல் மாநாட்டில் டொனால்டு டிரம்ப் முக்கிய உரையாற்ற உள்ளார்.

பட மூலாதாரம், Justin Sullivan/Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இதற்கு எவ்வளவு செலவாகும்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சட்டப்பூர்வ தன்மை குறித்த கேள்வியைத் தவிர, அமெரிக்காவின் அதிகரித்து வரும் கடன் சூழலில், குறிப்பாக இரானில் நடைபெற்று வரும் போரின் காரணமாக கடன் ஓரளவு அதிகரித்துள்ள நிலையில், டிரம்பின் அறிவிப்பு பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருக்குமா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 27 கோடி பேர் உள்ளனர். எனவே, ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் வழங்கினால், அமெரிக்க அரசுக்கு சுமார் 1.3 டிரில்லியன் டாலர் செலவாகும்.

டிரம்ப் தனது உரையின்போது, இதுபோன்ற காசோலைகளுக்கான நிதி எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவில் செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது. ஆனால், இந்தத் தொகையை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரத் திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து அதிபர் தெரிவிக்கவில்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு அதிபரின் நிர்வாக உத்தரவு மூலம் அவர் ஒப்புதல் அளிப்பது சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட வரி அறக்கட்டளையின் மூத்த பொருளாதார நிபுணர் எரிக்கா யார்க், இந்த முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் தான் "மிகவும் ஆச்சரியப்படுவேன்" என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"1.3 டிரில்லியன் டாலரைப் பயன்படுத்துவதற்கான மிக மோசமான வழிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

"நாம் மிகவும் நிலையற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். பட்ஜெட் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது" என்று யார்க் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க அரசால் அதற்கு நிதியளிக்க முடியுமா?

டிரம்பின் உரைக்குப் பிறகு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், அதிபர் விதித்துள்ள வரிகள் மூலம் திரட்டப்படும் பணத்தில் இருந்து இந்தத் தொகைகள் வழங்கப்படலாம் என்று வேன்ஸ் தெரிவித்தார்.

எனினும், இதுவரை கிடைத்துள்ள இத்தகைய வருவாய், டிரம்ப் முன்வைத்துள்ள 5,000 டாலர் காசோலைகளுக்குத் தேவையான தொகையை ஈடுகட்டுவதற்குத் தேவைப்படும் பணத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது.

அமெரிக்காவுக்குள் தான் இந்தப் பணம் செலவிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க குடியரசுக் கட்சியின் மாநாட்டில் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், இது எவ்வாறு கண்காணிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை.

இருகட்சி கொள்கை மையத்தின் தகவல்படி, 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா வரிகள் மற்றும் கலால் வருவாய் மூலம் சுமார் 475 பில்லியன் டாலர் (203 பில்லியன் பவுண்டுகள்) திரட்டியுள்ளது.

எனினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் பல வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை (74 பில்லியன் பவுண்டுகள்) திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

5,000 டாலர் பணம் எவ்வாறு வழங்கப்படும் என்று கேட்கப்பட்டபோது, ​​வெள்ளை மாளிகை பிபிசிக்கு அளித்த அறிக்கையில், "எப்போதும் மோசமான நிலைமைகளைப் பற்றிப் பேசுபவர்களும் எதிர்மறையாகக் கருத்து தெரிவிப்பவர்களும் அதிபர் டிரம்பை தொடர்ந்து சந்தேகித்து வந்துள்ளனர்" என்று தெரிவித்தது.

"அமெரிக்க மக்களின் தொடர்ச்சியான ஆதரவுடன், அதிபர் டிரம்ப் தொடர்ந்து உண்மையான முடிவுகளை வழங்குவார்" என்று செய்தித் தொடர்பாளர் டேவிஸ் இங்கிள் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாளில், “கீப் அமெரிக்கா ரெட்” என்று எழுதப்பட்டிருந்த ஜாக்கெட்டை ஒருவர் கையில் வைத்திருக்கிறார். இந்த நிகழ்வு 2026 செப்டம்பர் 9ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சென்டரில் நடைபெற்றது.
நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தனது நிர்வாகத்தின் சாதனைகளை முன்னிறுத்துவதுடன், குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவைத் திரட்டும் நோக்கில், ரிபப்லிக்கன் நேஷனல் கமிட்டியின் முதல் இடைக்காலத் தேர்தல் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உரையாற்ற உள்ளார்.

பட மூலாதாரம், Kevin Dietsch / Getty Images

டிரம்ப் இந்தச் சலுகையை அறிவித்தது ஏன்?

முன்னாள் குடியரசுக் கட்சியின் தேர்தல் வியூக நிபுணரும் கருத்துக்கணிப்பாளருமான ஒருவர், டிரம்பின் சமீபத்திய அறிவிப்பை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நடைபெற உள்ள தேர்தலின் பின்னணியிலேயே உறுதியாகப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

"இது ஒரு அசாதாரணமான வாக்குறுதி. இந்தப் பணம் எங்கிருந்து வரப்போகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது தேர்தல் பிரசார காலம்" என்று ராபர்ட் மோரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

டிரம்ப் தனது பதவிக்காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில் நுழையும் நிலையில், நாடாளுமன்றத்தின் மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக குறுகிய கால நோக்கில் சிந்தித்து வருவதாக சாத்தம் ஹவுஸின் ராப் கூறினார்.

"குடியரசுக் கட்சியினருக்கும் அவருக்கும் கருத்துக் கணிப்புகள் சாதகமாக இல்லாததால், தற்போது அவர் பணத்தை ஒரு வழியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு இதுபோன்று ஏதேனும் நடந்திருக்கிறதா?

இதுபோன்ற தொகைகளை வழங்குவதாக டிரம்ப் ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளார். வரி வருவாய் மூலம் நிதி திரட்டப்பட்டு, 2,000 டாலர் காசோலைகள் வழங்கப்படும் என்றும் அவர் முன்பு முன்மொழிந்திருந்தார். ஆனால், அந்தத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஜார்ஜியாவில் போட்டியிட்ட இரண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்கர்களுக்கு 2,000 டாலர் கொரோனா நிவாரண காசோலைகள் வழங்கப்படும் என்று முன்னாள் அதிபர் ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தார். இதன் மூலம் வாக்குகளை விலைக்கு வாங்க முயன்றதாக அவர் குற்றம்சாட்டப்பட்டார்.

2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பாகவும் இதேபோன்ற சட்டப்பூர்வமான கேள்வி எழுந்தது. அப்போது, டிரம்பின் ஆதரவாளரான கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க், கடும் போட்டி நிலவிய 7 மாகாணங்களில் குறிப்பிட்ட மனுவில் கையெழுத்திட்ட, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பண ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

கூடுதல் தகவல்கள்: பெர்ன்ட் டெபுஸ்மான் ஜுனியர், வெள்ளை மாளிகை செய்தியாளர்