ஐ.நா.வில் உலக வரைபட தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இப்போது ஆட்சேபனை ஏன்?

பட மூலாதாரம், Getty Images
ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை துல்லியமாகக் காட்டும் வகையில் தற்போதைய உலக வரைபடத்தை மாற்றும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு அமெரிக்கா. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட 164 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
ஆனால், புதிய வரைபடம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "புதிய வரைபடத்தில் ஜம்மு - காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பகுதிகளாகக் காட்டப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.
புதிய வரைபடம் தொடர்பான இந்த சர்ச்சை குறித்து இந்திய வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. முன்மொழிந்துள்ள உலக வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படி காட்டப்பட வேண்டும் என்றும், தவறான அல்லது தவறாக வழிநடத்தும் வகையிலான எந்தச் சித்தரிப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
வெளியுறவுத்துறை என்ன கூறியது?
புதிய உலக வரைபடம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை தனது நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "செப்டம்பர் 4 அன்று, சமபரப்பளவு கொண்ட உலக வரைபடம் தொடர்பான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியது. கண்டங்களின் நிலப்பரப்புகளின் உண்மையான அளவைப் பாதுகாக்கும் வகையிலான வரைபடங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்தத் தீர்மானம் எந்தவொரு குறிப்பிட்ட உலக வரைபடத்தையும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை. சர்வதேச எல்லைகள், சர்ச்சைக்குரிய பகுதிகள் அல்லது இடப்பெயர்கள் போன்ற அரசியல் வரைபடம் தொடர்பான விவகாரங்களையும் இது கையாளவில்லை" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்ததாகவும், தனது வாக்குக்கான விளக்கத்தை அளித்தபோது, சமபரப்பளவை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், "இந்தத் தீர்மானம் எந்தவொரு குறிப்பிட்ட வரைபடத்தையோ, வரைபடக் கணிப்புமுறையையோ அல்லது தேசிய எல்லைகளின் சித்தரிப்பையோ அங்கீகரிக்கவில்லை என்பதையும் நாங்கள் வலியுறுத்தினோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உட்பட இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே சித்தரிக்கப்பட வேண்டும்" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், "தவறான அல்லது தவறாக வழிநடத்தும் வகையிலான எந்தச் சித்தரிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாடு குறித்த எங்கள் நிலைப்பாடு தெளிவானதும், பேச்சுவார்த்தைக்கு உட்படாததும் ஆகும்" என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
முழுப் பின்னணி என்ன?
தற்போதுள்ள உலக வரைபடத்தை மாற்றி, உலகின் நிலப்பரப்புகளை மிகவும் துல்லியமாகக் காட்டுவது தொடர்பான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது.
அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை எதிர்த்த நிலையில், 164 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. மேலும், ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் கட்டுப்படுத்தக்கூடியது அல்ல என்றாலும், உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் பயன்படுத்தும் உலக வரைபடங்களில் மாற்றங்கள் ஏற்பட இது வழிவகுக்கும்.
16-ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உலக வரைபடம், ஆப்பிரிக்காவையும் கிரீன்லாந்தையும் ஒரே அளவிலான பகுதிகளாகக் காட்டுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், கிரீன்லாந்தைவிட ஆப்பிரிக்கா 14 மடங்கு பெரியது.
இந்த வரைபடம் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளின் வளர்ச்சித் தேவைகளையும் சாத்தியக்கூறுகளையும் குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மெர்கேட்டர் வரைபடம் 1569ஆம் ஆண்டு ஜெரார்டஸ் மெர்கேட்டரால் உருவாக்கப்பட்டது. இதில் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகள் அவற்றின் உண்மையான அளவைவிடச் சிறியதாகவும், துருவங்களுக்கு அருகில் உள்ள நாடுகள் உண்மையான அளவைவிடப் பெரியதாகவும் தோன்றுகின்றன.
இந்தப் பிரச்னையைச் சரிசெய்யும் முயற்சியாக, வரைபடவியல் நிபுணர்கள் குழு 2018-ஆம் ஆண்டு சமபரப்பளவு கொண்ட புதிய வரைபடத்தை உருவாக்கியது.
பிப்ரவரி மாதம், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 54 உறுப்பு நாடுகளும் இந்த வரைபடத்தை ஏற்றுக்கொண்டன. இது "அனைத்து கண்டங்களின் வடிவத்தையும், குறிப்பாக ஆப்பிரிக்காவின் வடிவத்தையும் மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது" என்று அவை தெரிவித்தன.
"அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை ஆப்பிரிக்காவுக்குள் வைத்தாலும், இன்னும் சிறிதளவு நிலப்பரப்பு மீதமிருக்கும்" என்று '#கரெக்ட்திமேப்' என்ற இணையவழிப் பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































