சென்னை பட்டினம்பாக்கத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்ய மக்கள் மறுப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, குடியிருப்புகளை காலி செய்ய சென்னை சீனிவாசபுரம் மக்கள் மறுப்பது ஏன்?
சென்னை பட்டினம்பாக்கத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்ய மக்கள் மறுப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

சென்னைப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 1970 ஆம் ஆண்டு 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

68 தொகுப்புகளைக் கொண்ட இவை ஒவ்வொன்றும் நான்கு தளங்களைக் கொண்டதாக உள்ளன. சுமார் நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது இந்தக் குடியிருப்புகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

வீடுகளில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுவது அன்றாட நிகழ்வாகவே இப்பகுதி மக்களுக்கு மாறிவிட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் உயிரிழப்புகளையும் உடல்ரீதியான பாதிப்புகளையும் இப்பகுதி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

குடியிருப்புகளைக் காலி செய்யுமாறு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் எச்சரித்தாலும் தங்களின் வாழ்விடத்தைவிட்டு இப்பகுதி மக்கள் வெளியேற மறுப்பது ஏன் என்பதை அறிந்து கொள்வதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

சீனிவாசபுரத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஆதிலட்சுமி, கடந்த வாரம் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டார்.

குடியிருப்பின் முதல் மாடியில் வீட்டு வாசலில் நின்றபடி இவரது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேல் சுவற்றின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவரது பேரனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால், அந்தச் சம்பவம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீள முடியவில்லை.

இந்தக் குடியிருப்பில் சுமார் 25 ஆண்டுகளாக அவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். மழைக்காலம் வந்துவிட்டாலே பல்வேறு சிரமங்களை தாங்கள் எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார்.

இதேபோன்ற துயரத்தை இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் எதிர்கொண்டு வருகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி இப்பகுதியில் குடியிருந்த சையது குலாப் என்ற இளைஞர், கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

அந்த சம்பவம் பற்றி, நம்மிடம் அவரது உறவினரான யாகூப் பாட்ஷா விவரித்தார்.

தனது வீட்டில் நடக்கும் இரண்டாவது துயர சம்பவம் இது எனவும் அவர் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சில குடியிருப்புகளில் நான்காவது மாடியில் உள்ள வீடுகளில் மேல்தளமே இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

கடந்த ஆண்டு இடி, மின்னல் காரணமாக தனது உறவினருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார் ராஜம்.

இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவரும் எதாவது ஒருவகையில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதைக் கேட்க முடிந்தது. ஆனால், இப்பகுதியை விட்டு வெளியேறினால் வாடகை உள்பட பல்வேறு வாழ்வதார சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் அச்சப்படுகின்றனர்.

சீனிவாசபுரத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து மறுகட்டுமானப் பணி தொடங்குவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால் மாற்று இடங்களுக்குச் செல்லுமாறு வாரியத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மாற்று குடியிருப்பைக் கட்டித் தருவது தொடர்பாக உறுதியான உத்தரவாதத்தை அரசு தர மறுப்பதாகக் கூறுகிறார், முள்ளிக்குப்பம் மீனவர் சங்க நிர்வாகி பாபு.

வீட்டைக் காலி செய்யும் மக்களுக்கு 24 ஆயிரம் ரூபாயை அரசு இழப்பீடாக தருகிறது. வீட்டைக் காலி செய்துவிட்டால் மீண்டும் இதே இடத்தில் வீடு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இப்பகுதி மக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

சீனிவாசபுரம் மட்டுமல்லாமல் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நம்பிக்கை நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளும் இதேபோல் சிதிலமடைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

1970 ஆம் ஆண்டு இங்குள்ள குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் எட்டு வீடுகளைக் கொண்டதாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் முதல் தளத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் முழுதாக பெயர்ந்து விழுந்துவிட்டன.

இந்தச் சம்பவத்தில் இளைஞர் ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் குடியிருப்பில் வசிக்கும் வர்ஜின்.

குடியிருப்பில் இருந்து வெளியேறி வெளியில் வாழ முடியாத அளவு வறுமையான சூழலில் வசிப்பதாகக் கூறுகிறார் வர்ஜின்.

தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த வீடுகளை மறுசீரமைப்பதற்காக சேதமடைந்த 70 குடியிருப்புகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளதாக, வாரியத்தின் தலைவர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் பழுதடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதே இடங்களில் புதிய வீடுகள் கட்டப்படும் எனவும் பணிகள் முடிந்த பிறகு குடியிருப்புதாரர்கள் மீண்டும் அங்கு குடியேறலாம் எனவும் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

குறிப்பாக, சீனிவாசபுரம் பகுதியில் மறுகட்டுமான திட்டத்தில் புதிய வீடுகளைக் கட்டுவது தொடர்பாக கடந்த அக்டோபர் 8 ஆம் தேதியன்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் ஆலோசனை ஒன்றை மேற்கொண்டதாக, செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிபுணர் குழு ஆய்வு செய்து மறுகட்டுமானத்துக்குப் பரிந்துரை செய்துள்ளதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதலே குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு வாரியத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டாலும் குடியிருப்புதாரர்கள் வெளியேறாததால் மறுகட்டுமானம் செய்ய முடியவில்லை எனவும் அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசைப் பொறுத்தவரை மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் முக்கியம் எனக் கூறியுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மூன்று பாகமாக பிரித்து குடியிருப்புதாரர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளது.

குடியிருப்புதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதியிடம் பிபிசி தமிழ் பேசியது.

மறுகட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். ஆனால், அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். அங்குள்ள காலி இடத்தில் தங்கும் இடங்களை அமைத்துத் தருமாறு கேட்பதாக அவர் தெரிவித்தார்.

அரசிடம் இருந்து சிலர் இழப்பீட்டுத் தொகையைப் பெற்ற பின்னரும் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளதாகக் கூறும் ரமண சரஸ்வதி, 'பருவநிலையைக் கருத்தில் கொண்டு, தற்காலிகத் தங்குமிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன' எனக் கூறுகிறார்.

குடியிருப்புகளில் இருந்து வெளியேறுவது குறித்து குடியிருப்புதாரர்களே முடிவெடுக்க வேண்டும் எனவும் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர்களுக்கு அறிவிப்புகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுகட்டுமானம் தொடர்பான அரசின் உத்தரவை ஏற்று வெளியேறுமாறு வாரியத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், தங்களின் வாழ்வாதாரத்தைவிட்டு வெளியேறுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதைக் களத்தில் பார்க்க முடிகிறது.

மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி ஒருமித்த முடிவை அரசு எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு