காணொளி: மீண்டும் என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங்

காணொளிக் குறிப்பு, மீண்டும் என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங்
காணொளி: மீண்டும் என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங்
பிரசுரிக்கப்பட்டது

சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் காதல் சர்ச்சையால் தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளன. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வெற்றிக்குத் தானே காரணம் என பொருமை கொள்கிறார்.

சி.என்.பி.சி செய்திக்கு தொலைபேசி மூலமாக பேட்டியளித்த டிரம்ப், “இந்த ஒப்பந்தத்தை நான் தான் செய்து முடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பிறகு, தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை டிரம்ப் வெளியிட்டார்.

2024ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் தன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிக்குப் பிறகு எடுக்கப்பட்ட பிரபலமான புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தப் படத்தில் டிரம்புக்குப் பதிலாக ஹுவாங் இடம்பெற்றிருந்தார். அவரது கையில் சிவப்பு நிற பிரா இருப்பது போல அந்த புகைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இது ஒருபுறம் ஆட்சேபனைக்குரியதாகவும், மறுபுறம் அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது புரியாத வகையிலும் இருந்தது.

சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததன் மூலம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட சர்ச்சைகளில் இருந்து ஹுவாங் தப்பித்ததை, துப்பாக்கிக் குண்டிலிருந்து டிரம்ப் உயிர் தப்பியதுடன் ஒப்பிட்டுக் காட்ட டிரம்ப் முயன்றாரா?

அல்லது, ஹுவாங்குக்குத் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் இருந்ததாக வெளியான தகவல்களைக் கொண்டாடும் விதமாக அந்தப் பிரா இடம்பெற்றதா? இவ்வாறு பல விதமான கேள்விகள் சூழ்கின்றன.

இப்போது ஹுவாங்கின் எதிர்காலம், டிரம்பின் வெற்றி, தோல்விகளைப் பொறுத்தே அமையும் சூழல் உருவாகியுள்ளது.

இதனுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், குடியரசுக் கட்சியினருக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் அடங்குவார். ஹுவாங்கை மீண்டும் பதவிக்குக் கொண்டுவரும் முயற்சியில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

கூட்டாட்சி அரசு அதிகாரிகள் நடத்திய “மிகவும் விரிவான விசாரணையில்” ஹுவாங் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதாகவும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் இதுவே இறுதியான முடிவு என்று கூறிவிட முடியாது.

“அழகான சீனப் பெண் ஒருவர் இருந்தாலே, அவர் உளவாளி என்று கூறுகிறார்கள்” என்று சி.என்.பி.சி-க்கு அளித்த பேட்டியில் டிரம்ப் தெரிவித்தார். மேலும், “ஜென்சன் விஷயத்தில் அது உண்மை என்று நான் நம்பவில்லை” என்றும் அவர் கூறினார்.

ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினர் சிலரும் இந்த விவகாரத்தை வேறுவிதமாகப் பார்க்கின்றனர்.

ஹுவாங் மற்றும் என்விடியா நிறுவனம் தொடர்பாகத் தாங்களாகவே விசாரணை நடத்தப்போவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

சீனாவுக்கு அதிநவீன மைக்ரோசிப் தொழில்நுட்பத்தை அணுக அனுமதித்ததன் மூலம், ஹுவாங்கும் என்விடியாவும் சட்டங்களை மீறியுள்ளனரா என்பதை மதிப்பிடுவதற்காக, ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிடுதல், சாட்சிகளை நேரில் ஆஜராகி கட்டாயமாக வாக்குமூலம் அளிக்கச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

புதிதாக ஏதேனும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் பட்சத்தில், அது என்விடியா நிறுவனத்தின் நற்பெயரை மேலும் பாதிக்கக்கூடும். அதனுடன் தொடர்புடைய வகையில், டிரம்பின் அரசியல் செல்வாக்கும் பாதிக்கப்படலாம்.

இதுபற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசுக் கட்சியின் செனட்டர் டாம் காட்டன், “கள்ளக் கடத்தல் மற்றும் தொலைதூர அணுகல் ஆகிய இரு வழிகளிலும், கம்யூனிஸ்ட் சீனா நமது மிக நவீன சிப் தொழில்நுட்பத்தைப் பெறுவது குறித்து ஆரம்பத்திலிருந்தே இந்த நிர்வாகத்தை நான் எச்சரித்து வந்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்விடியா விவகாரம் டிரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் ஏஐ வளர்ச்சியைத் தீவிரமாக ஆதரிக்கும் வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லட்னிக் ஆகியோர், ஏஐ சிப் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகன விவாதத்தில் உள்ளனர்.

ஹுவாங்கைக் காப்பாற்றிய தனது முடிவை நியாயப்படுத்திய டிரம்ப், “நமது மேதைகளைப் பாதுகாக்க வேண்டும். அவர் நிச்சயமாக ஒரு மேதை” என்று கூறினார்.

டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் தனது பாட்காஸ்டில், “இது நடக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளையே மாற்றியிருப்பது போலத் தெரிகிறது. 2008 பொருளாதார வீழ்ச்சியின்போதுகூட ஒரு நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அரசு தலையிடுவதை நான் பார்த்ததில்லை” என்று விமர்சித்தார்.

மறுபுறம் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியே தனது அரசியல் வெற்றிக்கு அடிப்படை என்றும், ஏஐ தொழில்நுட்பமே அந்தப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தி என்றும் டிரம்ப் கருதுகிறார். எனவே, அமெரிக்க ஏஐ துறையின் மையமாக விளங்கும் என்விடியாவைக் காப்பாற்ற அவர் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தது புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு