திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றம்

காணொளிக் குறிப்பு, பிரம்மாண்ட கொப்பரையில் ஏற்றப்பட்ட திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றம்
பிரசுரிக்கப்பட்டது

இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நவம்பர் 24ஆம் தேதி காலை 4 மணி அளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை 6 மணியளவில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது

5.75 அடி உயரமும் 310 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 4500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு 1500 மீட்டர் காடாத் துணியாலான திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகாதீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு எரியும்.

தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் இந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலும் ஒன்று.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 9 கோபுரங்களையும், 6 பிரகாரங்களையும், 142 சந்நிதிகளையும், 306 மண்டபங்களையும் உள்ளடக்கிய திருக்கோவில் இது.

சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோவிலின் உள்ளேயே அமைந்துள்ளன.

இந்தக் கோவில் சோழர் காலம் துவங்கி நாயக்கர் காலம் வரை தொடர்ச்சியாக பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்ட கோவில்.

கி.பி.1565-ல் தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ந்த பிறகு தமிழ்நாட்டை ஆண்டு வந்த நாயக்கர்கள் சுதந்திர மன்னர்கள் ஆனார்கள்.

அந்தக் காலகட்டத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பெருமளவில் மேம்படுத்தப்பட்டது.

நீண்ட மதில்கள், ராஜகோபுரம், அழகு மிகுந்த சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.

திருவண்ணாமலையின் மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபம் குறித்து எழுதப்பட்ட வரலாறு ஏதும் கிடையாது.

இருந்தபோதும் திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாள் என்பது மிக முக்கியமான நாளாக இருந்ததை சில கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு