இந்தியா கூட்டணி நடத்திய மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தில் நேஹா போரா பேசியது என்ன?
இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை குறித்து நேஹா போரா தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் பேசுகையில், "நாங்கள் உங்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். முஸ்லிம்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள் உள்ளிட்ட 13.3 கோடி மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை நீங்கள் பார்த்தீர்கள். பி.எல்.ஓக்கள், வாக்காளர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்து, இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டதற்கான சாட்சியங்களையும் கேட்டறிந்தீர்கள். இருப்பினும், உங்களுக்கே முழுமையாக புரியாத மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தச் செயல்முறை தொடர அனுமதித்தீர்கள்.
இது அறியாமையோ, தொழில்நுட்பக் கோளாறோ அல்லது சில ஊழல்வாதிகளின் தவறான நடத்தையோ அல்ல. இந்த நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் இது.
வாக்காளர் பட்டியலை பராமரிக்கவும் திருத்தவும் சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட தேர்தல் பதிவு அதிகாரிகளின் அதிகாரத்தையும் நீங்கள் மீறியுள்ளீர்கள். மென்பொருளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சாதாரண மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கையைத் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளீர்கள்." என்றார்.
மேலும் தொடர்ந்த நேஹா போரா, "குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுவதற்காக, உங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் ஜனநாயகத்தையே அவமதித்துள்ளீர்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட போராட்டத்தையும், ஜனநாயகத்தை பாதுகாக்கத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களையும் அவமதித்துள்ளீர்கள். இந்த நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்காதவர்களுடன் கைகோர்த்துச் செயல்பட்டதன் விளைவே இது.
எனவே, உங்களைப் பதவியிலிருந்து நீக்குவது மட்டுமே போதாது; நீங்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள். இந்தத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



