குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெறவைத்த 2 தமிழ்நாட்டு வீரர்கள் - கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 46வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று (மே 3) பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அஹமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டைட்டன்ஸ்.

இது தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் பெறும் மூன்றாவது வெற்றி. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி, 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அதேசமயம், முதல் 7 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத பஞ்சாப் கிங்ஸ், தற்போது அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்திருக்கிறது.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது. அந்த அணியில் ஜேவியர் பார்ட்லெட் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷாரூக் கானுக்குப் பதிலாக நிஷாந்த் சிந்து சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. சூர்யான்ஷ் ஷெட்கே அரைசதம் விளாசினார். குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அந்த இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் 19.5 ஓவர்களில் சேஸ் செய்தது. டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்தார். மற்றொரு தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர் வரை சென்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், இந்த இரண்டு தமிழ்நாட்டு வீரர்களின் ஆட்டமும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தது.

பந்துவீச்சில் மிரட்டிய டைட்டன்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பிரியான்ஷ் ஆர்யா மொஹம்மது சிராஜ் பந்துவீச்சில் டீப் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் கேட்சாகி அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே கூப்பர் கானலியையும் அவுட்டாக்கினார் சிராஜ். மூன்று பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் கிங்ஸ்.

பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், ஆறாவது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் (15 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார் ககிஸோ ரபாடா. அதனால் பவர்பிளேவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.

7வது ஓவரை வீசவந்த ஜேசன் ஹோல்டர் நேஹல் வதேராவை வெளியேற்றி மேலும் பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரையும் ஹோல்டர் விரைவிலேயே வெளியேற்றினார். 21 பந்துகள் சந்தித்த ஷ்ரேயாஸ் 19 ரன்கள் எடுத்தார்.

47/5 என தடுமாறிக்கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை சூர்யான்ஷ் ஷெட்கே, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி ஓரளவு மீட்டது. இந்த இணை ஆறாவது விக்கெட்டுக்கு 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ஷெட்கே 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். மானவ் சூதர் வீசிய ஒரு ஓவரில் 5 பந்துகளை சந்தித்த ஷெட்கே அதில் 26 ரன்கள் விளாசினார். ஓரளவு போராடிய ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மொஹம்மது சிராஜ், ககிஸோ ரபாடா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

போராடி வென்றது குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தொடக்கம் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. இரண்டாவது ஓவரில் அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லர், சாய் சுதர்ஷன் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார். அதனால் பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது டைட்டன்ஸ்.

பட்லர் - சாய் சுதர்ஷன் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்தது. 25 ரன்கள் எடுத்த பட்லர், வைஷாக் விஜயகுமார் வீசிய 'ஸ்லோயர் பால்' ஏமாற்றியதில் தன் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நிஷாந்த் சிந்து 15 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆரம்பம் முதல் நிலைத்து நின்று 15வது ஓவர் வரை ஆடிய தமிழ்நாட்டு பேட்டர் சாய் சுதர்ஷன் 41 போட்டிகளில் 57 ரன்கள் எடுத்தார். ஒரு முணையில் நிலைத்து நின்று விளையாடி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நம்பிக்கை கொடுத்த அவரை வைஷாக் விஜயகுமார் வெளியேற்றினார். மற்றொரு தமிழ்நாட்டு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்து ரன்ரேட் நெருக்கடியைக் குறைத்தார்.

கடைசி 5 ஓவர்களில் டைட்டன்ஸ் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. அதனால் டைட்டன்ஸ் அணி எப்படியும் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிக்கனமாகப் பந்துவீசி போட்டியை பரபரப்பாக்கினார்கள் பஞ்சாப் பௌலர்கள்.

16வது ஓவரில் பார்ட்லர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 17வது ஓவரில் 12 ரன்கள் கொடுத்த மார்கோ யான்சன் ராகுல் திவேதியாவின் விக்கெட்டை (2 ரன்கள்) கைப்பற்றினார். 18வது ஓவரை வீசிய பார்ட்லெட் 7 ரன்கள் மட்டும் கொடுத்தார். கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஜேசன் ஹோல்டர் (5 ரன்கள்) விக்கெட்டைக் கைப்பற்றினார் அர்ஷ்தீப். அதனால், டைட்டன்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்து வைட் ஆனது. மீண்டும் முதல் பந்தை வீசிய ஸ்டாய்னிஸ் அதை யார்க்கராக வீச, அதை பவுண்டரியாக்கினார் அர்ஷத் கான். இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டன. மூன்றாவது பந்தை டாட் பாலாக வீசினார் ஸ்டாய்னிஸ். 4வது பந்தையும் அவர் யார்க்கராக வீச, அர்ஷத் அதில் 1 ரன் எடுத்தார். கடைசி 2 பந்துகளில் டைட்டன்ஸ் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. 5வது பந்தில் ஸ்டாய்னிஸ் யார்க்கரைத் தவரவிட, ஃபுல் டாஸாகக் கிடைத்த பந்தை சிக்ஸராக்கி தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் வாஷிங்டன் சுந்தர். அவர் 23 பந்துகள் சந்தித்து 40 ரன்கள் எடுத்தார்.

டாஸில் நடந்தது என்ன?

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். கடந்த சில போட்டிகளில் நாங்கள் இலக்கை சிறப்பாக விரட்டி வருகிறோம், அதேபோல் எங்கள் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. எனவே அந்த வேகத்தைத் தொடர விரும்புகிறோம். நடுத்தர வரிசை பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது பற்றி நாங்கள் பேசினோம், ராகுல் திவேதியா அதைச் செய்த விதம் அற்புதம். ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் இங்கு உள்ளது. சரியான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே முக்கியம், அதை நாங்கள் செய்து வருகிறோம். எங்களின் மிகச்சிறந்த ஆட்டம் இன்னும் வர வேண்டியிருக்கிறது என்று நான் கருதுகிறேன்." என்று கூறினார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், "இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. ஆடுகளத்தில் சிறிது புற்கள் உள்ளன, மேலும் இது அதிகம் களிமண் கொண்ட ஆடுகளம் என்பதால் பந்து சற்று கூடுதலாக எகிறக்கூடும் என்று நினைக்கிறேன். இது சற்றே வழக்கத்திற்கு மாறானது தான், இருந்தாலும் இதற்கு முன்பும் நாங்கள் இந்த ஆடுகளத்தில் விளையாடியிருக்கிறோம், ஆனால் இது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது." என்று கூறினார்.

பிளேயிங் லெவனில் யார்?

குஜராத் டைட்டன்ஸ்

இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் நிஷாந்த் சிந்து சேர்க்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், அர்ஷத் கான், மானவ் சூதர், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: கிளென் ஃபிலிப்ஸ், ராகுல் திவேதியா, அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, குல்வந்த் கெஜ்ரோலியா.

பஞ்சாப் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் மீண்டும் ஜேவியர் பார்ட்லெட் இடம்பெற்றார். அவர் லாக்கி ஃபெர்குசனுக்குப் பதில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, சூர்யான்ஷ் ஷெட்கே, மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ யான்சன், ஜேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், வைஷாக் விஜயகுமார், மிட்செல் ஓவன், விஷ்ணு வினோத்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு