You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறுமுகையில் தாயை பிரிந்த குட்டி யானையை பிற மந்தைகள் ஏற்காமல் விரட்டுவது ஏன்?
கோயம்புத்தூரின் சிறுமுகை வனச்சரகத்தில் தாயை விட்டுப் பிரிந்த யானைக் குட்டி ஒன்றை காட்டு யானைக் கூட்டத்துடன் மீண்டும் சேர்ப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், யானை மந்தையில் அந்தக் குட்டியைச் சேர்க்கும் முயற்சிகளுக்குப் போதிய பலன் கிடைக்காத நிலையில், நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.
"அந்தக் குறிப்பிட்ட குட்டி யானை பிறந்து மூன்று மாதங்களே ஆகிறது. அந்த குட்டி யானை வாழ்வதற்குத் தேவையான சூழல் காடுதான் என்பதால் அதனை ஏதேனும் ஒரு யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை மிகத் தீவிரமாக அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறது. அந்த முயற்சிகளுக்கு எத்தகைய பலன் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தக்கட்ட திட்டங்களை வகுக்க வேண்டும்," என்று கூறுகிறார் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ.
குட்டியை விரட்டிய ஆண் யானை
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, காந்தவயலில் உள்ள சாலையோர சோதனைச் சாவடி அருகே, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்து அலைந்து கொண்டிருந்த குட்டி யானையை வனத்துறை கண்டது.
வனத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர். டிரோன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் காட்டுக்குள் ஒரு யானை மந்தை இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தக் குட்டி வழிநடத்தப்பட்டு, அந்த மந்தைக்கு அருகில் விடப்பட்டது. அதே நேரத்தில், இரவு முழுவதும் டிரோன்கள் மற்றும் வெப்ப கண்காணிப்பு மூலம் குழுவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தனர்.
இருப்பினும், ஏப்ரல் 26-ஆம் தேதி, டிரோன் கண்காணிப்பு மூலம் குட்டியைக் கண்டுபிடிக்க அதிகாரிகளால் முடியவில்லை. மீண்டும் தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஒரு நீர்நிலைக்கு அருகே, யானை மந்தையைப் பின்தொடர்ந்து சென்ற குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு அருகில் இருந்தபோதிலும், அந்த மந்தை குட்டியை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆண் யானை ஒன்று குட்டியை விரட்டிவிட்டதாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மீண்டும் குட்டியை மந்தையுடன் சேர்க்கும் மற்றொரு முயற்சிக்கு வனத்துறை தயாரானது.
வனத்துறையின் செய்திக்குறிப்புப்படி, "ஏப்ரல் 27ஆம் தேதி, யானை மந்தையின் நடமாட்டத்தை எதிர்பார்த்து, அந்தக் குட்டி யானை, யானைகளுக்காக அமைக்கப்பட்ட நீர்த்தொட்டி அருகே காத்திருந்தது.
ஆனால், அதிகாலையில் எந்தக் கூட்டமும் தென்படவில்லை. அன்றைய தினம் பிற்பகலில், டிரோன் கண்காணிப்பு மூலம் மற்றொரு யானை மந்தை அடையாளம் காணப்பட்டது. அந்தக் குட்டி யானை அந்த யானைக் கூட்டத்தின் அருகே விடப்பட்டது. அது சிறிது நேரம் அந்தக் கூட்டத்தை அணுகி அவற்றுடன் இருந்தபோதிலும், மீண்டும் ஒரு ஆண் யானையால் விரட்டியடிக்கப்பட்டது."
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு. "இந்தக் குட்டி யானை விவகாரத்தைப் பொறுத்தவரை, அதுவாக இயற்கையாகவே தனது கூட்டத்தில் இருந்து பிரிந்துள்ளது. அது வனத்துறையால் அடையாளம் காணப்பட்ட பிறகும்கூட, உடனடியாக அதை நெருங்காமல் சிறிது இடைவெளி விட்டுத்தான் நாங்கள் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம்.
அதோடு, மந்தையுடன் சேர்ப்பதற்கான முயற்சிகளின்போது மனித வாசனையால் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அறிவியல்பூர்வ அணுகுமுறையின்படி, மாஸ்கிங் (masking) எனப்படும் முறையைப் பின்பற்றுகிறோம். அதன்படி, குட்டி யானையின் சாணம், சிறுநீர், மண் ஆகியவற்றை எடுத்து வைத்து, அதன் மீது பூசிவிட்டு, மனித வாசனை தெரியாத வகையில் மறைத்துவிடுவோம்." என்று அவர் விளக்கினார்.
குட்டி யானையின் தற்போதைய நிலை என்ன?
சிறுமுகை வனச்சரகத்தில் தாயால் கைவிடப்பட்ட குட்டி யானையின் நிலை குறித்து கவலை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி, அதை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் வகையில், அதை ஒரு யானை மந்தையுடன் சேர்ப்பதற்கான பணிகளைத் துரிதப்படுத்துமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
குட்டி யானை தற்போது கால்நடை மருத்துவர்கள், பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய ஒரு குழுவால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் அதற்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய வெங்கடேஷ் பிரபு கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த விவகாரத்தில், "அந்தக் குட்டியை ஒரு யானை மந்தையுடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வனத்துறை இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும்? உரிய நடைமுறைகளின்படி இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். தொடர்ந்து தனித்திருப்பதும் தற்போது நிலவும் கடும் வெப்பமும் குட்டியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்," என்று தெரிவித்தனர்.
வனத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சீனிவாசன், "அந்தக் குட்டியைப் பல்வேறு யானை மந்தைகளுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பலன் கிடைக்கவில்லை," என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி அந்தக் குட்டி கைவிடப்பட்ட நிலையில் வனத்துறையால் அடையாளம் காணப்பட்டதாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறினார்.
"அந்தக் குட்டியைப் பராமரிக்க தமிழ்நாடு வனத்துறையின் கால்நடை மருத்துவர், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட யானைக் குட்டிகளைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை நாங்கள் மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றி வருகிறோம். அந்தக் குட்டிக்கு வெறும் மூன்று மாதங்களே ஆவதால், அதை பாலூட்டும் நிலையிலுள்ள பெண் யானைகளைக் கொண்ட ஒரு பொருத்தமான கூட்டத்தைக் கண்டறிந்து சேர்க்க முயல வேண்டியது அவசியம்" என்று தெரிவித்தார்.
அந்தக் குட்டியை ஐந்து யானைக் கூட்டங்களுடன் இணைக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் பலன் கிடைக்கவில்லை எனவும் கூறிய அவர், "இதே நிலை தொடரும் பட்சத்தில், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சுப்ரியா சாஹூ, "வனத்துறை அதிகாரிகள் தற்பொது அந்தக் குட்டியை கால்நடை மருத்துவப் பராமரிப்பில் வைத்துள்ளனர். வனத்துறை குழுக்கள் நிலைமையைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றன. குட்டி யானையின் பாதுகாப்பான மறுவாழ்வை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.
அதேவேளையில், "கடந்த காலங்களில் இத்தகைய சில முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அது யானை மந்தையைப் பொறுத்து இருக்கிறது. இது மிகவும் இளம் குட்டி என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். யானை மந்தையில் பாலூட்டும் தாய் யானைகள் இருந்தால், இந்த முயற்சி சற்று எளிமையாகும். ஆனால் அதை உறுதியாகக் கூறுவது சவாலானது.
இருப்பினும், குட்டியை ஏதேனும் ஒரு யானை மந்தையுடன் சேர்த்து விட்டு, இயற்கையாகக் கிடைக்க வேண்டிய காட்டு வாழ்க்கையை அது வாழ்வதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை அது முடியாமல் போகும் பட்சத்தில், குட்டியை முகாமில் சேர்த்துப் பராமரிப்பதற்கான வேலைகளை வனத்துறை மேற்கொள்ளும்," என்று கூறினார் சுப்ரியா சாஹு.
தாயை விட்டு குட்டி யானை பிரிவது எப்படி?
"பொதுவாக பருவகாலங்களைப் போலன்றி கோடைக்காலங்களில் வறட்சி காரணமாக உணவு மிகவும் குறைவாகவே கிடைக்கும். அதனால், யானை மந்தைகள் ஒட்டுமொத்தமாகக் கூட்டமாக நகராமல் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து உணவு தேடுவதுண்டு.
அப்படிப் பிரிந்து செல்லும் சூழ்நிலைகளிலும் அவை தத்தம் மந்தை உறுப்பினர்களுடன் தொடர்பில்தான் இருக்கும். இருந்தாலும், இத்தகைய சூழ்நிலைகளில் ஒரு தாய் யானையும் குட்டியும் தனியாகப் பிரிந்து செல்ல நேரிட்டால், இப்படியான பிரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்கிறார் யானைகள் குறித்து 23 ஆண்டுகளாக ஆராய்ந்து வரும் காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ராமகிருஷ்ணன்.
ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறையில் பேராசிரியராக இருக்கும் முனைவர் ராமகிருஷ்ணன், சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் ஆசிய யானை நிபுணர்கள் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.
"கோடையில் உணவு அனைத்து நேரங்களிலும் மொத்தமாக ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. எனவே உணவு கிடைக்கும் இடங்களைத் தேடி யானை மந்தைகள் சிறு குழுக்களாகப் பிரிந்து செல்வதுண்டு. அப்படிப் பிரிந்து செல்கையில், ஒருவேளை தாய் யானை தனது குட்டியுடன் சென்றிருக்க வாய்ப்புள்ளது.
இப்படியான சூழலில், தாய் யானை மிகவும் வயதானதாக இருந்து, வெயில் தாளாமல் எங்கேனும் ஓய்வெடுக்கப் படுத்திருந்த போது, துடிப்புடன் இருந்த இளம் குட்டி அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டிருக்கையில், வழிதவறியிருக்கலாம். இது இயற்கையாக நடக்கும் நிகழ்வுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரியநாயக்கன்பாளையத்திலும் இதேபோல ஒரு குட்டி தனது மந்தையை விட்டுப் பிரிந்து வந்தது," என்று விவரித்தார் ராமகிருஷ்ணன்.
அதோடு, "எந்தவொரு உயிரினமும், குறிப்பாக யானைகளைப் பொறுத்தவரை, தாமாகக் குட்டிகளைக் கைவிடுவதில்லை. தவறுதலாக பிரிந்து போன குட்டி யானைகளை, பிற மந்தைகள் சேர்த்துக் கொள்வது உண்டு. அதுவும் நடக்காத பட்சத்தில்தான் மனிதர்கள் தலையிடும் நிலை ஏற்படுகிறது," என்றும் விளக்கினார் அவர்.
ஆனால், வனத்துறை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளிலும், பிற யானை மந்தைகள் இந்தக் குட்டியைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதிலும், ஒரு சந்தர்ப்பத்தில் மந்தையில் இணைவதற்கு குட்டி முயன்றபோது, அதிலிருந்த ஆண் யானை ஒன்று அதை விரட்டி விட்டதாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதுகுறித்து முனைவர் ராமகிருஷ்ணனிடம் வினவியபோது, "இந்தக் குட்டி மிகமிக இளம் வயதுடையது என்பதால், பாலூட்டும் தாய் யானைகளின் இருப்பு அவசியமாகிறது. ஒருவேளை அப்படிப்பட்ட யானைகள் ஏதும் மந்தையில் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால்கூட தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென அந்த குட்டி யானையை அவை தவிர்த்திருக்கலாம்.
அப்படியே பாலூட்டும் தாய் இருந்தாலும், அதற்கென இருக்கும் குட்டியைப் பராமரித்தாக வேண்டும். யானை குடும்பங்களைப் பொறுத்தவரை, வழக்கமாக தனித்துவிடப்பட்ட குட்டிகளைத் தங்களுடன் சேர்த்துக்கொள்வதுண்டு. இருந்தாலும், அது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடக்கும் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது," என்று விளக்கினார்.
இந்த யானைக் குட்டியைப் பொறுத்தவரை, வனத்துறை தம்மால் ஆன அனைத்து வகையிலும் அதைக் காட்டிற்குள் யானை மந்தையுடன் சேர்த்து விடுவதற்கு முயன்று பார்க்கும் எனவும், முடியாதபட்சத்தில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி முகாமில் பராமரிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு