இந்திய அரச குடும்ப வசமிருந்த 17ஆம் நூற்றாண்டு 'சூப்பர் கம்ப்யூட்டர்' - என்னவெல்லாம் செய்யும்?

    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி,
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு காலத்தில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் அரச சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்த, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கண்கவர் பித்தளை வானியல் கருவி - அல்லது கையடக்க வானியல் கணினி - லண்டனில் நடந்த ஏல விற்பனையில் 2.75 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக ஏலம் போயுள்ளது.

இஸ்லாமிய உலகைச் சேர்ந்த ஒரு வானியல் கருவி மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல்முறை என்று ஏலத்தை நடத்திய சோத்பீஸ் (Sotheby's) நிறுவனத்தின் பிரதிநிதி பிபிசியிடம் தெரிவித்தார். இந்தத் தனித்துவமான கருவி இந்த வாரம் லண்டனில் உள்ள சோத்பிஸ் கலைக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

"இது தற்போது புழக்கத்தில் இருக்கும் அஸ்ட்ரோலேப்களிலேயே மிகப் பெரிதாக இருக்கலாம். இதற்கு முன்பு இது பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்டதே இல்லை," என்று சோத்பிஸ் நிறுவனத்தின் இஸ்லாமிய மற்றும் இந்திய கலைப் பிரிவின் தலைவர் பெனடிக்ட் கார்ட்டர் பிபிசியிடம் கூறினார்.

இந்தக் கருவி ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாம் சவாய் மான் சிங்கின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு, அக்காலத்தின் மிகவும் புகழ்பெற்ற அழகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட அவரது மனைவி மகாராணி காயத்ரி தேவியிடம் இது ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஒரு கட்டத்தில் இது ஒரு தனியார் சேகரிப்பாளரின் கைக்கு மாறியது.

'ஆஸ்ட்ரோலேப்கள்' என்பவை, பல அடுக்குகளைக் கொண்ட, ஒன்றோடு ஒன்று பிணைந்த பாகங்களைக் கொண்ட உலோகத் தட்டுகளாகும்; இவை நேரத்தைக் கணிக்கவும், விண்மீன்களைப் பட்டியலிடவும், மெக்காவின் திசையைக் கண்டறியவும், வானியல் இயக்கங்களை அறியவும் பயன்படுத்தப்பட்டன.

"இவை அடிப்படையில், முப்பரிமாணப் பிரபஞ்சத்தின் இரு பரிமாணப் பிரதிபலிப்புகளாகும். இவற்றை நவீனகால ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடலாம். ஏனெனில், இவற்றைக் கொண்டு பல காரியங்களைச் செய்ய முடியும்," என்று ஆக்ஸ்ஃபோர்ட் அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வரலாற்று மையத்தைச் சேர்ந்த முனைவர் ஃபெடரிகா ஜிகாண்டே கூறுகிறார்.

"சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய நேரம், ஒரு கட்டடத்தின் உயரம், ஒரு கிணற்றின் ஆழம் மற்றும் தூரம் எனப் பலவற்றையும் இவற்றைக் கொண்டு கணக்கிட முடியும்; எதிர்காலத்தைக் கணிக்கக்கூட இதைப் பயன்படுத்தலாம். பஞ்சாங்கத்துடன் சேர்த்து இவை ஜாதகத்தை கணிக்கவும் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டன" என்று அவர் விளக்கினார்.

கிமு இரண்டாம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்கத்தில் ஆஸ்ட்ரோலேப்கள் முதன்முதலில் உருவாக்கப்பட்டன. பின்னர், எட்டாம் நூற்றாண்டில் இவை இஸ்லாமிய உலகுக்குப் பரவின. அதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், இராக், இரான், வட ஆப்பிரிக்கா மற்றும் அல்-ஆண்டலஸ் எனப்பட்ட தற்போதைய ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் இவற்றைத் தயாரிக்கும் மையங்கள் செழித்து வளர்ந்தன.

இந்தக் குறிப்பிட்ட கருவி, 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் தயாரிக்கப்பட்டது. அக்காலத்தில், முகலாய பேரரசின் கீழ் ஆஸ்ட்ரோலேப் தயாரிப்பில் லாகூர் முன்னணி மையமாகத் திகழ்ந்தது. இக்கருவி முகலாய பிரபு ஒருவருக்காக கைம் முகமது, முகமது முகிம் என்ற இரு சகோதரர்களால் உருவாக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் "லாகூர் ஸ்கூல்" (Lahore School) என்று அழைக்கப்படும் அக்காலத்தின் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோலேப் தயாரிப்பு மையத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கைவினைக்கலை ஒரு குடும்பத்திற்கு உள்ளேயே பேணப்பட்டு, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டது.

இந்த சகோதரர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியதாக இரண்டு வானியல் கருவிகள் மட்டுமே அறியப்படுகின்றன. இது தவிர மற்றொன்று மிகவும் சிறியது, அது இராக்கில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி, அக்காலத்தில் லாகூரை நிர்வகித்து வந்த அகா அஃப்சல் என்ற பிரபுவின் ஆணைக்கிணங்க உருவாக்கப்பட்டது.

இரானின் இஸ்பஹான் நகரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், முகலாய பேரரசர்களான ஜஹாங்கீர், ஷாஜகான் ஆகியோரின் கீழ் பல உயர் பதவிகளை வகித்தவர். இந்த ஆஸ்ட்ரோலேப் கருவியின் அளவும், அதன் வேலைப்பாடுகளும் அந்தப் பிரபுவின் செல்வாக்கையும் அந்தஸ்தையும் பறைசாற்றுகின்றன.

"மொத்தம் 8.2 கிலோ எடை கொண்ட இதன் விட்டம் சுமார் 30 செ.மீ, உயரம் 46 செ.மீ. இது 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் காணப்பட்ட சாதாரண ஆஸ்ட்ரோலேப்பைவிட நான்கு மடங்கு பெரியது," என பெனடிக்ட் கார்ட்டர் தெரிவித்தார்.

"இதில் ஒரு குறிப்பிடத்தக்க பன்முக கலாசார அம்சமும் உள்ளது. இதிலுள்ள நட்சத்திர குறிப்பான்களின் வழக்கமான பெயர்கள் பாரசீக மொழியிலும், அதற்கேற்ற சமஸ்கிருத பெயர்கள் தேவநாகரி எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன."

சோத்பிஸ் நிறுவனத்தின் தகவல்கள்படி, இந்தக் கருவியில் 94 நகரங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் தீர்க்கரேகை, அட்சரேகை விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மிகவும் நுணுக்கமான மலர் வேலைப்பாடுகளுடன் கூடிய 38 நட்சத்திர குறிகாட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது ஐந்து துல்லியமாக அளவிடப்பட்ட தட்டுகளையும், "ஒரு பாகையின் மூன்றில் ஒரு பங்கு வரை மிகத் துல்லியமாகப் பிரிக்கப்பட்ட" பாகைப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

"இந்த அளவிலான நுணுக்கம், அக்காலத்தில் 'அதன் உச்சகட்ட நேர்த்தியில்' இருந்த லாகூர் பள்ளியின் அசாதாரண கைவினைத் திறனைப் பிரதிபலிக்கிறது," என கார்ட்டர் கூறுகிறார்.

இங்கே, தொழில்நுட்ப துல்லியம், செயல்பாடு, கலைநயம் ஆகியவை ஒன்றிணைந்த விதம், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் தயாரிக்கப்பட்ட, பயன்பாட்டுக்கு மட்டுமே உரியதாக இருந்திருக்கக் கூடிய முந்தைய வானியல் கருவிகளில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டியது.

இந்தக் கருவியானது முகலாய அரசவையின் பரந்த அறிவியல் ஆர்வத்தைப் பறைசாற்றுகிறது. அங்கு ஆட்சியாளர்களும் உயர்குடி மக்களும் வானியல் மற்றும் ஜோதிடம் சார்ந்த முன்னேற்றங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியதை இது உணர்த்துகிறது.

"இது பெரிதாகவும், அழகாகவும், கனமாகவும் இருப்பது மட்டுமின்றி, வியக்கத்தக்க வகையில் மிகவும் துல்லியமானது. இது விண்வெளியில் உள்ள ஒரு பொருளை மிகச் சரியான பாகையில் காட்டும்" என்று ஜிகாண்டே கூறினார்.

இதற்கு ஒப்பான ஒரே கருவி, பாரசீகத்தின் இரண்டாம் அப்பாஸுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கருவி மிகவும் பழைமையானதாக இருந்தாலும், பழுதற்ற நிலையில் அதன் தரம் குறையாமல் இருப்பதாலும், இது அரச குடும்பத்திற்குச் சொந்தமானது என்பதாலும், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாசார பொருட்களைச் சேகரிப்பவர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என ஏலத்திற்கு முன்பே சோத்பிஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்பு, சுல்தான் இரண்டாம் பயேசித்திற்காக தயாரிக்கப்பட்ட ஒட்டோமான் ஆஸ்ட்ரோலேப், ஏல விற்பனையில் படைத்திருந்த சாதனையை இது முறியடித்தது. அந்தச் சிறிய கருவி 2014-ஆம் ஆண்டில் சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் சற்று குறைவான விலைக்கு விற்பனையாகி இருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு