'கடற்கரை அருகே இடுகாடு'; யாருக்கு சொந்தம் என்பதில் பட்டியலின - மீனவ மக்களுக்கு இடையே பிரச்னை

- எழுதியவர், விவேக்குமார் விஜயவீரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டக்குப்பம் பகுதியில் கடற்கரை அருகே சுமார் 43 சென்ட் பரப்பளவில் உள்ள நிலத்தை தங்களது பாரம்பரிய இடுகாடாக பயன்படுத்தி வருவதாக பட்டியலின மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், சமீப ஆண்டுகளில் அங்கு மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டதால் அடக்கம் செய்யும் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அக்கிராமத்தில் சமீபத்தில் இறந்தவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டபோது, மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள பெரிய கோட்டக்குப்பம் மற்றும் நடுக்குப்பம் கிராமங்கள் பல ஆண்டுகளாக ஒன்றோடொன்று தொடர்புடைய சமூக வாழ்வை கொண்ட பகுதிகளாக இருந்து வருகின்றன. இருப்பினும், கடற்கரை அருகே உள்ள ஒரு இடுகாடு நிலம் தொடர்பான உரிமை விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக இரு சமூகங்களுக்கிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி வந்துள்ளது.
இந்த விவகாரம் சமீபத்தில் உயிரிழந்த ஒருவரின் அடக்க நிகழ்வைத் தொடர்ந்து வெளிப்படையான மோதலாக மாறியதுடன், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் அரசின் நேரடி தலையீட்டையும் அவசியமாக்கியுள்ளது.
பெரிய கோட்டக்குப்பம் பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள், கடற்கரை அருகே சுமார் 43 சென்ட் பரப்பளவில் உள்ள நிலத்தை தங்களது பாரம்பரிய இடுகாடாக பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
இந்த நிலத்தில் பல தலைமுறைகளாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சமீப ஆண்டுகளில் அங்கு மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டதால் அடக்கம் செய்யும் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுகளின் பின்னணி
இடுகாடு நிலம் தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தை எட்டிய நிலையில், அந்த நிலத்தின் பயன்பாடு மற்றும் ஆக்கிரமிப்பு குறித்த விவாதங்கள் சட்ட ரீதியாக பரிசீலிக்கப்பட்டன.
இதையடுத்து, இடுகாடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக உள்ளூர் தரப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடமும் வெவ்வேறு நீதிமன்ற உத்தரவுகள் இருப்பதாகவும், அதனாலேயே குழப்பமான சூழல் உருவாகியுள்ளதாகவும் சில சமூக பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு ஒன்றில் இடுகாட்டில் இருந்து மீனவர்கள் தரப்பை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மற்றொரு வழக்கில் அந்த இடம் மீனவர்களுக்கு சொந்தமானது என்றும் இருவேறு உத்தரவுகள் இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
முன்னதாக, இதுதொடர்பாக மீனவர்களின் மனுவுக்கு கடந்தாண்டு மே மாதம் நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டதன்படி அவர் தரப்பில், "மயானத்துக்கு செல்லும் பாதையில் கடற்கரையிலிருந்து உயர் அலை மட்டம் 300 மீட்டர் உட்பட்ட பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதை இருப்பதால், பாதையில் எவ்வித சடலங்களையும் புதைக்க அனுமதி தர வேண்டாம் என கோரியுள்ளீர்கள்.
அதைத் தொடர்ந்து இந்நகராட்சியில் சடலங்கள் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற விபரத்தினை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 6 ஆம் தேதி பெரிய கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த 76 வயதான பூமிலிங்கம் உயிரிழந்தார்.
அவரது உடலை அந்த இடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டபோது, மீனவர் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது மோதலாக மாறியதாகவும், கற்கள் மற்றும் கம்புகளால் தாக்குதல் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிதிராவிடர் சமூகத்தினர் உயிரிழந்தவரின் உடலுடன் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார், வருவாய்த் துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரச முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதன்பிறகே பூமிலிங்கத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அரசின் தலையீடு
இச்சம்பவம் சமூக ரீதியான பதற்றத்தை உருவாக்கியதால் மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சமூகநீதி மற்றும் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், இடுகாடு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க கோட்டக்குப்பம் மற்றும் நடுக்குப்பம் பகுதிகளில் சுமார் 900 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. ரூபன் குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடுகாடு பகுதியில் இருந்த படகுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோது, நடுக்குப்பம் மீனவப் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
200-க்கும் மேற்பட்ட பெண்கள் கழுத்தில் கயிறு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் எல்லைக் கற்கள் நட முயன்றபோதும், பெண்கள் அதை தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
சில பெண்கள், போலீசார் தங்களை தள்ளுமுள்ளு செய்து தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய மோதலைத் தொடர்ந்து 30 மீனவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் இடுகாடு பகுதியில் இருந்த 21 படகுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முன்னிலையில் படகுகள் அகற்றப்பட்டன.
"சுமூக தீர்வு வேண்டும்"
நடுக்குப்பம் மீனவர் சுபாஷ் கூறுகையில், "நாங்கள் சாதி, மத வேறுபாடின்றி சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். இந்த விவகாரம் சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாறாமல் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும்" என்றார்.
மேலும், அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இரு தரப்புக்கும் தொடர்பில்லாத நீதியரசர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

"இது எங்கள் பாரம்பரிய இடுகாடு"
கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் மக்கள் தரப்பிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளர் எழில் பேசுகையில், "இந்த இடம் பாரம்பரியமாக எங்கள் சமூகத்தினரின் இடுகாடாக இருந்து வருகிறது. எங்கள் மக்களின் இறுதி சடங்குகளை அமைதியாக நடத்தும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.
மேலும், உயிரிழந்தவர்களை நிம்மதியாக புதைக்க வழிவகை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலம் தொடர்பாக தற்போது உருவாகியுள்ள சர்ச்சைக்கு பின்னால் வணிக நோக்கங்கள் மற்றும் பொருளாதார நலன்கள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
"சாதி மோதலாக மாறக் கூடாது" – ஷேக் அப்துல் ரஹ்மான்
மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறுகையில், "இந்த விவகாரம் எந்த சூழலிலும் சாதி மோதலாக மாறக்கூடாது" என்றார்.
இரு தரப்பினரிடமும் நீதிமன்ற உத்தரவுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்படுவதாக தெரிவித்தார். இருதரப்பினரிடமும் கருத்துகளை கேட்டிருப்பதாக கூறியுள்ள ஆட்சியர், "மீனவர்கள் இடுகாட்டை எங்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம் என்கின்றனர். ஆனால், பட்டியலின மக்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தை மாற்றக் கூடாது என கூறுகின்றனர்." என்றார்.
"தற்போது பதற்றத்தை குறைப்பதும், மோதலை தணிப்பதும், நிலைமையை அமைதிப்படுத்துவதும் முக்கியமான பணியாக உள்ளது. தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ பஞ்சாயத்து மற்றும் பல்வேறு மீனவர் அமைப்புகள் நடுக்குப்பம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நிரந்தர தீர்வு காண மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் – நடுக்குப்பம் விவகாரம் தற்போது ஒரு சாதாரண நிலத் தகராறாக மட்டுமல்லாமல், அடக்க உரிமை, வாழ்வாதார உரிமை, பாரம்பரிய பயன்பாட்டு உரிமை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட பிரச்னையாக மாறியுள்ளது.
நிர்வாகம் மற்றும் சட்ட அமைப்புகள் மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளே இந்த விவகாரத்தின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.
இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நிலத்தின் உரிமை மற்றும் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























