'கால் மேல் கால் போட்ட அம்பேத்கர் சிலை' - 5 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிலையால் சேலத்தில் பதற்றம் ஏன்?

சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. அம்பேத்கர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற அந்த சிலையை அகற்ற வேண்டுமென்று ஒரு தரப்பினரும், அதே இடத்தில் அதைத் திறக்க வேண்டுமென்று பட்டியலின சமுதாயத்தினரும் போராடி வருகின்றனர்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட தகரங்களை அகற்றியதைக் கண்டித்து ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பட்டியல் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் வரை அங்கு காவல்துறை பாதுகாப்பு தொடருமென்றும், தற்போது அங்கு எந்த பிரச்னையுமில்லை என்றும் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி பிபிசியிடம் தெரிவித்தார்.

அம்பேத்கர் சிலையின் வடிவமைப்பால் மோதலா?
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் ஒதியத்தூர். அங்குள்ள பிரதான பேருந்து நிறுத்தப்பகுதியில் காமராசர், ராஜிவ் காந்தி ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டில் அங்கு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது நாற்காலியின் மீது கால் மேல் கால் போட்டபடி அம்பேத்கர் அமர்ந்து இருப்பது போன்றும், அதற்கிடையில் ஒரு சட்டப்புத்தகம் இருப்பது போன்றும் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பட்டியல் பிரிவு மக்கள் தரப்பில் சிலர் பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, அதற்கு முன்பே அங்கிருந்த அம்பேத்கரின் மார்பளவு சிலையை அகற்றிவிட்டு 2021 ஆம் ஆண்டில் இந்த முழுவடிவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
பிபிசியிடம் பேசிய கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கக்கன் செல்வகுமார், ''ஊர் மக்கள் சேர்ந்து இந்த சிலை வைத்த சில மாதங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. அப்போது இந்தப் பகுதியில் வருவாய் வட்டாட்சியர் ஒருவர் ஆய்வுக்கு வந்த பிறகே பிரச்னை தொடங்கியது'' என்றார்.
அவர் வந்து சென்ற பின்பே, பிற சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியைப் பார்த்து அம்பேத்கர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு இருக்கும் சிலையை அகற்ற வேண்டுமென்று ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்கிறார் கக்கன் செல்வகுமார். அதற்குப் பின் அதே அதிகாரியே இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, அந்த சிலையை தகரம் வைத்து மூட ஏற்பாடு செய்தார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
''பேச்சுவார்த்தையின்போது, அந்த வட்டாட்சியரே கால் மேல் கால் போட்டுள்ள சிலைக்குப் பதிலாக வேறு அம்பேத்கர் சிலை வைக்கலாம் என்று சொன்னார். நாங்கள் ஏற்கவில்லை. ராஜிவ் காந்தி, காமராசர் போன்றோருக்கு சாலையோரத்திலேயே சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அம்பேத்கர் சிலை, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலேயே இருக்கிறது. தகரத்தை அகற்றி, சிலையைத் திறக்க வேண்டுமென்று வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையில் உள்ளது. '' என்றார் கக்கன் செல்வகுமார்.
கால் மேல் கால் போடும் சிலையை வைக்கக்கூடாது என்பதுதான் பிற சமுதாய மக்களின் கோரிக்கையாக இருப்பதாகவும், அதை தங்கள் தரப்பு மக்கள் ஏற்பதில்லை என்பதே தற்போதைய மோதலுக்குக் காரணம் என்று கூறினார் அவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் கெங்கவல்லி வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் துணை ஆட்சியராகப் பணி புரிந்து வருகிறார்.
அவரிடம் பட்டியலின மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழ் சில கேள்விகளை முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், ''நான் வட்டாட்சியராக இருந்தபோதுதான் அந்த சிலை அங்கே வைக்கப்பட்டது. அப்போது அதை எதிர்த்து சிலர் போராடியதால், நான்தான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்தப் பேச்சுவார்த்தையில் சிலை வைத்த மக்களே முன் வந்து அங்கு தகரத்தை வைத்து மறைத்துக் கொண்டனர். இதில் நான் யாரையும் தூண்டவுமில்லை. யாருக்கும் ஆதரவாகவும் செயல்படவில்லை. இப்போது நடப்பது போல அப்போது மறியலும் நடக்கவில்லை. '' என்றார்.
காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, 2021 ஆம் ஆண்டில் தகரத்தால் மூடப்பட்ட அம்பேத்கர் சிலை, அதே நிலையிலேயே கடந்த ஐந்தாண்டுகளாக இருந்துள்ளது. சென்ற வாரத்தில் ஜூலை 10 இரவில், அம்பேத்கர் சிலையை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த தகரங்களை சிலர் அகற்றியுள்ளனர். இந்த விஷயம் வெளியே தெரியவந்ததும், மறுநாள் காலையில் பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பின்பு, மீண்டும் சாலை மறியல் நடந்தபோது காவல்துறையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து மறியல் நடந்த இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை நோக்கி கற்கள் வீசப்பட்டுள்ளன.
இதில் ஒரு பெண் காவலர் மற்றும் காவல்துறையினர் சிலர் காயமடைந்தனர். அதன் காரணமாக காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். அதில் பெண்கள் உள்ளிட்ட சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில மாணவரணி துணைத்தலைவர் கவியரசன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது கெங்கவல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை அவர்களில் 15 பேரை கைது செய்திருப்பதாக பிபிசியிடம் சேலம் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தெரிவித்தார். மேலும் பலரைத் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவங்களுக்குப் பின், பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் ஒதியத்துாருக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரம் அமைத்து அதிகாரிகள் மூடியுள்ளனர்.மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, ஒதியத்தூர் பகுதிக்கு வந்து பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்டுச் சென்றார்.

முறைப்படி அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டதாக புகார்!
அம்பேத்கர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டிருப்பதே, அதை அகற்ற வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்த காரணம் என்று பட்டியல் பிரிவினர் கூறுகின்றனர். ஊர்ப் பொதுமக்கள் சார்பில் அந்த சிலை வைக்கப்பட்டாலும் அதை முன்னெடுத்தது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் என்கிறார் கக்கன் செல்வகுமார்.
இதே கருத்தை பிபிசியிடம் தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் நாவரசன், ''அந்த வடிவமைப்புதான் பிரச்னை. அம்பேத்கர் சாதாரணமாக நிற்பது போன்று சிலையை வைத்தால் பிரச்னையில்லை . தேசத்துக்கே சட்டத்தை வடிவமைத்துத் தந்த ஒரு தலைவர் கால் மேல் கால் போட்டிருப்பது போன்று ஒரு சிலையை அமைப்பதில் யாருக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது என்பதே நம் கேள்வி.'' என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ''ஒன்றுமில்லாத இந்த பிரச்னையை பெரிதாக்கியதே சில அதிகாரிகள்தான். காவல் துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பேசியிருந்தால் இந்த சிலையை வைப்பதற்கு மற்றவர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அதிகாரிகள் சொன்ன விஷயத்தை வைத்தே இப்போதும் அதே பிரச்னையை கையில் எடுக்கிறார்கள். இப்போதுள்ள அரசு மட்டுமில்லை. எந்த அரசு வந்தாலும் இத்தகைய விஷயத்துக்கெல்லாம் எதிர்ப்புச்சூழல் வராமல் காப்பதுதான் அரசின் பொறுப்பு.'' என்றார்.
இந்த கருத்துகளை மறுக்கும் எதிர் தரப்பினர், அந்த சிலை வைக்கப்பட்டபோதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுகின்றனர்.
அம்பேத்கர் சிலை வைப்பதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்பது அவர்கள் தரப்பு வாதமாகவுள்ளது. இதுகுறித்து யாரும் வெளிப்படையாகப் பேசுவதற்கு முன் வரவில்லை. பெருமுயற்சிக்குப் பின் ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் பிபிசியிடம் பேசினார்.

''முதலில் அந்த சிலை அமைக்கப்பட்டு இருப்பது ஒரு நீர்நிலை புறம்போக்கு. முன்பு பஞ்சாயத்து கிணறாக இருந்தது. ஒரு சிலை அமைப்பதென்றால் அதற்கு முறைப்படி அரசாணை பெறவேண்டும். எதுவும் பெறவில்லை. அதனால்தான் இந்த சிலை வைத்ததுமே மக்கள் சார்பில் சிலை அமைக்க தடையுத்தரவு பெறப்பட்டது. முறைப்படி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி இதைச் செய்திருந்தால் யாரும் இதைத் தடுத்திருக்க முடியாது.'' என்றார் செல்வம்.
மேலும் தொடர்ந்த அவர், ''அதே பகுதியில் வேறு சில காலியிடமும் உள்ளது. அங்கே வைக்க முறைப்படி அனுமதி பெற்று வைக்கலாம். இப்போதும் அம்பேத்கர் நிற்பது போன்று வைத்தால் மக்கள் எதிர்க்க மாட்டார்கள். மீண்டும் அதே சிலையை வைக்க முயன்றால் மறுபடியும் எதிர்ப்புத் தெரிவிக்கவே வாய்ப்புள்ளது. ஒதியத்தூரில் எந்த சிலையுமே வைக்க வேண்டாமென்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.'' என்றார்.
பட்டியல் பிரிவினர் நடத்திய திருவிழாவில் பங்கேற்ற பிற சாதியினர்
''சிலையை மறைத்து வைத்திருந்த தகரத்தை யார் அகற்றினார்கள் என்று தெரியவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எட்ட வேண்டுமெனில் சிலையை மாற்ற வேண்டும் அல்லது இடத்தை மாற்ற வேண்டும். அரசே இதில் ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும்.'' என்றார் செல்வம்.
இந்தத் தகவலை மறுக்கும் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள், அங்கு ஏற்கெனவே இருந்த அம்பேத்கர் சிலையை அகற்றிவிட்டு வேறு சிலையை வைத்ததால்தான் தனியாக அனுமதி பெறவில்லை என்கின்றனர்.

இதுகுறித்து கருத்துக் கேட்பதற்காக, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, தமிழக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோரை தொடர்பு கொண்டபோது, யாரிடமும் பதில் பெறமுடியவில்லை.
இந்த பிரச்னை தொடர்பாக எந்த பதிலையும் தர விரும்பவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்.
காவல்துறை நடவடிக்கைகள் குறித்து பிபிசியிடம் விளக்கிய மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, ''2021 ஆம் ஆண்டில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்போதே பொதுமக்களில் ஒரு தரப்பினர் அதை எதிர்த்ததால் தகரம் வைத்து மூடியுள்ளனர். கடந்த ஜூலை 10 இரவில் யாரோ அதை அகற்றியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தடையுத்தரவு உள்ள நிலையில், அதை அகற்றுவது கூடாது. இதுதொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி நடந்தது.'' என்றார்.

''ஆனால் பழைய நிலை தொடர வேண்டுமென்ற கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அகற்றப்பட்ட தகரத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது பட்டியல் பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது கல் வீசப்பட்டது. அதனால் வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்துள்ளோம்.'' என்றார் ரம்யா பாரதி
''இந்த விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தை போன்ற முயற்சிகள் நடக்கின்றன. சுமூகமான முடிவு எட்டப்படும்வரை, அங்கு காவல்துறை பாதுகாப்பு தொடரும். தற்போது ஒதியத்தூரில் அமைதியான சூழ்நிலை உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை.'' என்றார் அவர்.
சிலை வைக்கப்பட்டுள்ள இடம் நீர் நிலை புறம்போக்கு என்பதையும், அங்கே ஏற்கெனவே அம்பேத்கரின் மார்பளவு சிலை இருந்ததாகவும் கூறப்படும் தகவல்கள் குறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் காத்தமுத்துவிடம் பிபிசி கேட்டபோது, ''வருவாய்த்துறை ஆவணங்களின்படி கிராம நத்தம் அரசு புறம்போக்கு என்றும், குறிப்பு பகுதியில் கிணறு என்றும் உள்ளது. அங்கு முன்பு கிணறு இருந்துள்ளது. ஆனால் அது பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுள்ளது. அதற்கு மேல்தான் இந்த சிலையை வைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.'' என்றார்.
''நான் இங்கு பணிக்கு வந்ததிலிருந்து அந்த சிலை மூடப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் அதை மூடி வைத்திருப்பதாகத் தெரிவித்தனர். தற்போது அங்கு பிரச்னை எதுவுமில்லை. ஆனால் அனுமதி இல்லாத காரணத்தால் வேறு பிரச்னை எதுவும் வரவேண்டாமென்பதற்காக இரு தரப்பிலும் பேசி, அந்த சிலையை ஏற்கெனவே இருந்தது போல தகரத்தால் மூடி வைத்துள்ளோம். கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன்பாக அங்கு சிலை இருந்ததா என்பது குறித்து விசாரித்தால்தான் தெரியும்.'' என்றார் வட்டாட்சியர் காத்தமுத்து.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































