'ஓர் அடி அகலம், 2 அடி உயரம்' - இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றுவர யாருக்கெல்லாம் கட்டுப்பாடு?

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மிக குறுகலான இடுக்கு பிள்ளையார் கோவிலின் உள்ளே சென்று வெளிவர முடியாமல் சிக்கிய ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, அக்கோவிலின் உள்ளே சென்று வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்ல கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக பக்தர்கள் வெளியே வருவார்கள்.
இந்த கோவில் பெரும்பாலும் ஒரு ஆள் கூட உள்ளே சென்று வர முடியாத நிலையில் மிகவும் குறுகலாகவே இருக்கும். அதிலும், உடல்பருமன் உள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளே சென்று வெளியே வருவதையும் பார்க்க முடியும்.
குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தியையும், வெளியே உள்ள இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து குறுகிய குகை வழியே உள்ளே சென்று வெளியே வந்து வணங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், ஜூலை 25-ஆம் தேதி ஆந்திராவை சேர்ந்த மணிகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றுள்ளார். இரவு இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த மணிகுமார் குகை வடிவத்தில் உள்ள பகுதியில் படுத்தபடி நுழைந்துள்ளார். அவர் உடல் பருமன் கொண்டவர் என்பதால், குகை பகுதியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.

வெளியே வருவதில் ஏற்பட்ட சிரமத்தால் பதற்றமடைந்த மணிகுமாருக்கு ரத்த அழுத்தம் குறைந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, மணிகுமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மணிக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குகை போன்ற பகுதியில் உள்ளே நுழைந்து வெளியே வந்து வணங்கி செல்லும் இது போன்ற ஆபத்தான செயல்களில், உடல் பருமன், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதய, நுரையீரல் பாதிப்புடைய பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார், மருத்துவர் சுவேதா.
அதிக கூட்டமும், குறுகிய இடங்களில் ஏற்படும் அழுத்தமும் இது போன்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
பக்தர்களின் நம்பிக்கை
கிரிவலப் பாதையில் நூறாண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்து வரும் இடுக்கு பிள்ளையார் கோவில்குபேர லிங்கத்துக்கும், ஈசானிய லிங்கத்துக்கும் இடையில் உள்ள சிறிய கோவிலாகும் என்றார், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பிரதான அர்ச்சகர் பி.டி. ரமேஷ்.
''பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நம்பிக்கை அடிப்படையிலேயே இந்த தரிசனத்தை செய்து வருகின்றனர்'' என்றார் அர்ச்சகர் பி.டி. ரமேஷ்.
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தொடர்ந்து வருகை தரும் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பக்தர் பழனிச்சாமி கூறும்போது, "இந்த இடுக்கு பிள்ளையார் கோவில் கிரிவலப் பாதையில் உள்ள ஒரு சிறிய கோவிலாகும். இங்கு தமிழ்நாட்டு மக்களை விட மிக அதிகமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களே நீண்ட வரிசையில் நின்று தரிசிக்கின்றனர்." என்றார்.

"பல ஆண்டுகளாக திருவண்ணாமலை வந்து செல்லும் நான் ஒரு முறை மட்டுமே இந்த கோவிலில் வணங்கியுள்ளேன். அந்த குகையில் ஒருக்களித்து படுத்தவாறே செல்ல வேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள் இதில் உள்ளே சென்று வெளிவருவது மிகவும் கடினமாக இருக்கும்." என்றார் பழனிச்சாமி
ஒரு அடி அகலம், இரண்டு அடி உயரம்
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் குபேர லிங்கத்தின் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் நுழைவுப் பகுதி ஓர் அடி அகலம், இரண்டு அடி உயரம் கொண்டது என்கிறார் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பரணிதரன்.
மேலும், இந்த குகைப் பாதையில் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பக்தர்கள் உள்ளே சென்று வணங்கி செல்வதாகவும் கூறினார்.
ஆந்திர பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு நலன் கருதி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையும் கோவில் அருகிலேயே வைத்துள்ளதாகவும் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்தார்.

அதன்படி, "பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, இடுக்கு பிள்ளையார் கோவிலின் வாயில் மிகக் குறுகலாக உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை," என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிவல நாட்களில் மட்டுமல்லாது முக்கிய விசேஷ நாட்களிலும் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளதால், இடுக்கு பிள்ளையார் கோவில் பகுதியில் நிரந்தரமாக ஒரு காவலரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்திட வேண்டி காவல் நிலையத்துக்கும் வேண்டுகோள் வைத்து கடிதம் வழங்கியுள்ளதாகவும் காவல் துறை உடனடியாக செய்து தருவதாக கூறியுள்ளதாகவும் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்தார்.
மேலும், ஆந்திர பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் குகையில் சிக்கிக்கொண்டது போலவும் அவரை மீட்பது போலவும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. "அது போலியான காணொளி. பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது, தற்போது அது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது" என்றும் பரணிதரன் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































