இதயநோய்: ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகும் சிலருக்கு புதிதாக அடைப்பு வருவது ஏன்? 4 கேள்வி - பதில்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
- பதவி, பிபிசி மராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
இதய நோய் என்று வரும்போது, நிறைய தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலும், பல தவறான புரிதல்களும் இருக்கின்றன.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் பொருத்திய பிறகு, இதய நோய் முழுதாகக் குணமாகிவிட்டதாக ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், இது உண்மையல்ல. இதய நோயை உண்டாக்கும் செயல்முறையை ஸ்டென்ட் தடுப்பதில்லை, அது அடைபட்ட ரத்த நாளத்தை விரிவுபடுத்தி, ரத்த ஓட்டத்தை மட்டுமே சீராக்குகிறது.
எனவே, நோயாளிகளும் பொது மக்களும், ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகும், உடலின் பிற ரத்த நாளங்களில் கொழுப்பு மற்றும் பிற பொருட்கள் படிவது தொடரக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதைப் பொருத்திவிட்டதாலேயே அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிட்டதாகவோ, ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு மீண்டும் திரும்பலாம் என்றோ அர்த்தமில்லை.
ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகும் நோயாளிகள் தங்கள் உடல்நலத்தைத் தொடர்ந்து கவனமாகப் பராமரிக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
உண்மையில், இதய நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க, ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்கள் மேலதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்ட அல்லது ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு, பிறரை விடவும் மாரடைப்பு, பக்கவாதம், இதயம் தொடர்பான பிற சிக்கல்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்.
இந்த அபாயத்தைக் குறைக்க, அவர்கள் தங்கள் கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உடல் எடை, சிறுநீரக செயல்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுடன், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது, மது மற்றும் புகையிலையைத் தவிர்ப்பது, சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுமுறையைப் பின்பற்றுவது, மனநலத்தைப் பேணுவது மிகவும் அவசியம்.
ஸ்டென்ட் என்றால் என்ன? அதைப் பொருத்தினால் இதய நோய் குணமாகிவிடுமா?
ஸ்டென்ட் (stent) என்பது வலைபோன்ற அமைப்பைக் கொண்ட மிகவும் மெல்லிய, சிறிய உலோகக் குழாய். இது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின்போது ரத்த நாளத்திற்குள் பொருத்தப்படுகிறது.
இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு குறுகியிருக்கும் ரத்த நாளங்களின் பகுதியை விரிவுபடுத்த, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின்போது மருத்துவர்கள் முதலில் ஒரு சிறிய பலூனை பயன்படுத்துகின்றனர். அப்படி விரிவுபடுத்தப்பட்ட பிறகு, ரத்த நாளத்தைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க அங்கு ஒரு ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது.
அது மீண்டும் சுருங்கிவிடுவதைத் தடுப்பதும், இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடையின்றி சீராகச் செல்வதை உறுதி செய்வதும் ஸ்டென்ட் பொருத்துவதன் முக்கிய நோக்கம்.

பட மூலாதாரம், Getty Images
தற்போது, மருத்துவர்கள் பெரும்பாலும் மருந்து பூசப்பட்ட ஸ்டென்ட்களை (drug-eluting stents - DES) பயன்படுத்துகின்றனர். சிறப்பு மருந்துகளால் பூசப்பட்டிருக்கும் இந்த ஸ்டென்ட்கள், ரத்த நாளத்திற்குள் மெதுவாக மருந்துகளை வெளியிட்டு, தேவையற்ற திசுக்கள் வளர்வதைத் தடுக்கவும், அதன் மூலம் மீண்டும் அந்த இடத்தில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கவும் ஸ்டென்டில் பூசப்படும் மருந்துகள் உதவுகின்றன.
இருப்பினும், ஸ்டென்ட் என்பது இதய நோய்க்கான நிரந்தரத் தீர்வு இல்லை. இது ரத்த நாளத்தில் ஏற்கெனவே அடைப்பு ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே சரிசெய்கிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதற்குக் காரணமான நோய், உடலின் பிற பகுதிகளில் தொடர்ந்து இருக்கக்கூடும்.
எனவே, ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகும், நோயாளிகள் தங்கள் கொழுப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவற்றைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அத்துடன், உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைச் சரியாகப் பின்பற்றுவது போன்றவற்றை சீராகக் கடைபிடிக்க வேண்டும்.
ஸ்டென்ட் பொருத்துவது ரத்த நாளத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அடைப்பை மட்டுமே நீக்குகிறது. ஆகையால், எதிர்காலத்தில் புதிய அடைப்புகள் உருவாகலாம், அல்லது ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகும்கூட ரத்த நாளங்களின் பிற பகுதிகளில் இதேபோன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதனால்தான் இதய நோய் மருத்துவர்கள் "இரண்டாம் நிலைத் தடுப்பின்" முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். இதில், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குள் கெட்ட கொழுப்பைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, நோயாளிக்கு நீரிழிவு நோய் இருந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது, ரத்தத்தை மெலிதாக்க மற்றும் கொழுப்பைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோபிளாஸ்டி, ஆஞ்சினா, இதய அறுவை சிகிச்சை என்றால் என்ன?
இதய நோய் குறித்துப் பேசும்போது, ஆஞ்சினா (angina), ஆஞ்சியோகிராபி (angiography), ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty), இதய அறுவை சிகிச்சை (open-heart surgery) போன்ற பதங்களைக் கேள்விப்பட்டிருப்போம். இந்தப் பதங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அர்த்தமும் நோக்கமும் உள்ளன.
ஆஞ்சினா என்பது இதய தசைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் அழுத்தம், கனத்த உணர்வு, வலி அல்லது அசௌகரியம். இது ஒரு தனி நோயல்ல என்றாலும் இதயத்திற்குத் ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தை வழங்கும் நாளங்கள் குறுகிவிட்டன அல்லது அடைபட்டுவிட்டன என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாக இது இருக்கலாம். இதன் அறிகுறிகள், நடக்கும்போது, படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது மோசமடையக்கூடும்.
கரோனரி ஆஞ்சியோகிராபி என்பது அடைப்புகளைக் கண்டறியப் பயன்படும் ஒரு பரிசோதனை முறை. இதில் கை அல்லது தொடைப் பகுதியில் உள்ள ரத்த நாளத்தின் வழியாக கதீட்டர் (catheter) எனப்படும் மெல்லிய குழாய் செலுத்தப்படுகிறது. பின்னர் இதயத்திற்கு ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தைச் செலுத்தும் நாளத்திற்குள் ஒரு சிறப்புச் சாயம் செலுத்தப்பட்டு, எக்ஸ்-ரே எடுக்கப்படுகிறது. இது, இதயத்தில் அடைப்பு எங்குள்ளது, அதன் தீவிரம் எவ்வளவு என்பதை மருத்துவர்கள் கண்டறிய உதவுகிறது.
ஆஞ்சியோபிளாஸ்டி என்பது ஆஞ்சியோகிராபி பரிசோதனையில் அடைப்பு கண்டறியப்பட்டால் செய்யப்படும் சிகிச்சை. அடைப்பு உள்ள இடத்தில் ஒரு சிறிய பலூன் விரிவாக்கப்பட்டு, ரத்த நாளம் விரிவுபடுத்தப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ரத்த நாளத்தைத் திறந்து வைத்து இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த அங்கு ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது.
இதய அறுவை சிகிச்சை அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது பல கடுமையான அடைப்புகள் இருக்கும்போதோ அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு ஏற்ற சூழல் இல்லாதபோதோ பரிசீலிக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையின்போது, அடைபட்ட ரத்த நாளத்தைத் தவிர்த்து ரத்தம் செல்லப் புதிய பாதையை உருவாக்க, உடலின் மற்றொரு பகுதியில் இருந்து எடுக்கப்படும் ரத்த நாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது ஒரு வகையான இதயத்தைத் திறந்து மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையாகும்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய சந்தேகங்கள் குறித்து, மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனையின் ஆலோசகர் மற்றும் இதய நோய் நிபுணரான மருத்துவர் பாரின் சங்கோய் பிபிசி மராத்தியிடம் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
அவரிடம் ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொண்ட நோயாளிகள் என்னென்ன பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும், தங்கள் உடல்நலத்தை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்று கேட்டபோது, "ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை மற்றும் அவர்களுக்கு இருக்கும் அபாயங்களைப் பொறுத்து பரிசோதனைக்கான அட்டவணை மாறுபடும். இருப்பினும், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள் உள்ளன" என்றார்.
மேலும் அவர், "ரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளைத் தொடங்கிய பிறகு அல்லது மாற்றிய பிறகு சில மாதங்கள் கழித்தும், நிலைமை சீரான பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் 'லிப்பிட் ப்ரொஃபைல்' பரிசோதனை செய்யப்பட வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி ரத்த சர்க்கரை மற்றும் HbA1c அளவுகளைத் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
அதோடு அவரது கூற்றுப்படி, "நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் அல்லது ஏற்கெனவே சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகள் மிகவும் முக்கியமானவை. இது தவிர, ஒவ்வொரு தொடர் பரிசோதனையின்போதும் உடல் எடை, இடுப்புச் சுற்றளவு, வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்கள் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பெரும்பாலும், ஆய்வகப் பரிசோதனைகளைப் போலவே இவையும் உடல்நலன் குறித்த நீண்டகால முடிவுகளில் முக்கியப் பங்காற்றுகின்றன."
ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்ட அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொண்ட நோயாளிகளுக்கு, கெட்ட கொழுப்பு அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது மற்றொரு பொதுவான கேள்வி.
பிபிசி மராத்தியிடம் அதுகுறித்து விளக்கிய மருத்துவர் சங்கோய், "மாரடைப்பு ஏற்பட்ட அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொண்ட நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் மிக அதிகம். அத்தகைய நோயாளிகளுக்கு, கெட்ட கொழுப்பு அளவை 55 mg/dL-க்கு குறைவாக வைத்திருப்பதே இலக்காக இருக்க வேண்டும். மேலும், ஆரம்ப அளவுடன் ஒப்பிடும்போது குறைந்தது 50% வரையேனும் குறைக்க முயல வேண்டும்" என்றார்.
இதை உறுதி செய்ய, இதயத்திற்கு உகந்த உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி, கொழுப்பைக் குறைக்க உதவும் மருந்துகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. கெட்ட கொழுப்பின் அளவு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மீண்டும் மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான பிற சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது.
ஆஞ்சியோபிளாஸ்டிக்கு பிறகு ECG, 2D Echo, TMT, CT ஆஞ்சியோகிராபி அல்லது மீண்டும் ஆஞ்சியோகிராபி போன்ற பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டுமா என்றும் நோயாளிகள் அடிக்கடி கேட்கிறார்கள். ஆனால், "தொடர் பரிசோதனைகளின்போது எத்தகைய பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்பது நோயாளியின் அறிகுறிகள், மருத்துவப் பரிசோதனை, ஒட்டுமொத்த ஆபத்து நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அவை வெறுமனே வழக்கமான நடைமுறையாகச் செய்யப்படுவதில்லை," என்கிறார் மருத்துவர் சங்கோய்.
"நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து ECG, 2D எக்கோ கார்டியோகிராபி ஆகிய பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம். இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பரிசோதனை பரிசீலிக்கப்படுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகு பாலுறவில் கவனம் தேவையா?
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு, நோயாளிகள் வழக்கமாக சிடி ஆஞ்சியோகிராபி அல்லது மீண்டும் கரோனரி ஆஞ்சியோகிராபி செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. நெஞ்சு வலி மீண்டும் வந்தால், அறிகுறிகள் மோசமடைந்தால் அல்லது மருத்துவப் பரிசோதனையில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் மட்டுமே மருத்துவர்கள் பொதுவாக இந்தப் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்கள்.
மும்பையில் உள்ள பி.டி. ஹிந்துஜா மற்றும் எம்.ஆர்.சி மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகரும் தலையீட்டு இதய நோய் நிபுணருமான மருத்துவர் ஆனந்த் ராவ் கூற்றுப்படி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு முன்பு இருந்ததைப் போன்ற மார்பு வலியை ஒரு நோயாளி உணர்ந்தால், அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய வலி இதயத்திற்குள் ஒரு பிரச்னை இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம், அதற்கு உடனடி மருத்துவப் பரிசோதனை தேவைப்படலாம்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகான வாழ்க்கை குறித்த நோயாளிகளின் சில பொதுவான கேள்விகளுக்கு பிபிசி மராத்திக்கு அளித்த பேட்டியில் மருத்துவர் ஆனந்த் ராவ் விடையளித்தார்.
கேள்வி: ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகு ஒரு நோயாளி எப்போது தனது இயல்பான அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பலாம்?
மருத்துவர் ஆனந்த் ராவ்: வேலைக்குத் திரும்புதல், பயணம் செய்தல், உடற்பயிற்சி மற்றும் பிற அன்றாட நடவடிக்கைகளை, இதயம் எவ்வளவு நன்றாக ரத்தத்தைச் செலுத்துகிறது என்பதையும், குறிப்பாக இடது வென்ட்ரிக்கிளின் செயல்பாட்டையும் பொறுத்தது.
இதயம் சாதாரணமாகச் செயல்பட்டால், பெரும்பாலான நோயாளிகள் ஏழு முதல் பத்து நாட்களுக்குள் வேலைக்குத் திரும்பலாம். அவர்கள் வழக்கமாக நடைபயிற்சியில் தொடங்கி, படிப்படியாக உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இருப்பினும், இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் கணிசமாகக் குறைந்தாலோ அல்லது இடது வென்ட்ரிக்கிளின் வெளியேற்ற விகிதம் (ejection fraction) குறைவாக இருந்தாலோ, நோயாளிகளுக்கு கவனமான மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது. அவர்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட இதய மறுவாழ்வுத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும். உடற்பயிற்சி, பயணம் அல்லது பிற அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் தங்கள் இதயநோய் நிபுணரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: ஆஞ்சியோபிளாஸ்டிக்கு பிறகு பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானதா?
மருத்துவர் ஆனந்த் ராவ்: இது முக்கியமாக ரத்தத்தை உந்தித் தள்ளும் இதயத்தின் திறனைப் பொறுத்தது. இதயத்தின் செயல்பாடு இயல்பாக இருந்தால், பெரும்பாலான நோயாளிகள் ஆஞ்சியோபிளாஸ்டிக்கு பிறகு சுமார் 10 முதல் 15 நாட்களில் பாலியல் செயல்பாடுகளைப் பாதுகாப்பாக மீண்டும் தொடங்கலாம். இருப்பினும், இதயத்தின் ரத்தத்தை உந்தித் தள்ளும் திறன் குறைந்திருந்தால், நோயாளிகள் முதலில் இதய மறுவாழ்வு அல்லது மேற்பார்வையிடப்பட்ட ஃபிசியோதெரபி மூலம் உடற்தகுதியை மேம்படுத்த வேண்டும். பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் முன்பாகத் தங்கள் இதயநோய் நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்."
"இதயத்தின் ரத்தத்தை உந்தித் தள்ளும் திறன் தொடர்ந்து கணிசமாகக் குறைந்திருந்தால், நிலைமை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பாலியல் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
கேள்வி: மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, மற்றொரு மாரடைப்பு பற்றிய பயம் ஆகியவை விரைந்து குணமடைவதை எவ்வாறு பாதிக்கின்றன?
மருத்துவர் ஆனந்த் ராவ்: மாரடைப்புக்குப் பிறகு மன அழுத்தம், பதற்றம் அல்லது மனச்சோர்வு ஏற்படுவது, குறிப்பாக குணமடையும் போது ஏற்படுவது பொதுவானதுதான். ஒரு மனநல மருத்துவர், இதய இயன்முறை மருத்துவர் மற்றும் மறுவாழ்வு நிபுணரின் ஆதரவை உள்ளடக்கிய, நன்கு திட்டமிடப்பட்ட இதய மறுவாழ்வுத் திட்டம், நோயாளிகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைய உதவும்.
நோயாளிகள் தங்கள் இதய மருத்துவரிடம் வழக்கமான தொடர் பரிசோதனைகளை மேற்கொள்ள, கேள்விகளைக் கேட்க, தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, நிலையை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து, குணமடையும் செயல்முறையை எளிதாக்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்ற ஒவ்வொரு நோயாளியும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆலோசனை என்ன?
மருத்துவர் ஆனந்த் ராவ்: ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொண்ட ஒவ்வொரு நோயாளியும் நீண்ட கால அடிப்படையில் இதய ஆரோக்கியத்தைப் பேணுவதில் உறுதியாக இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தவறாமல் உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, கொழுப்பு அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுமுறைப் பின்பற்றுவது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.
வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் உடல்நலப் பரிசோதனைகளும் முக்கியமானவை. இந்த ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக் கொள்வது, மீண்டும் மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான பிற பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தை வெகுவாகக் குறைப்பதோடு, நீண்ட காலத்திற்கு இதய ஆரோக்கியத்தைச் சிறப்பாகப் பராமரிக்கவும் உதவும்.
'வாழ்க்கை முறையில் திடீர் மாற்றங்களை தவிர்க்க வேண்டும்'
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு குணமடைவதில் உடற்பயிற்சி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், நோயாளிகள் மெதுவாகத் தொடங்க வேண்டும். அவர்களின் உடற்பயிற்சித் திட்டம் அவர்களின் இதயச் செயல்பாடு, அறிகுறிகள் மற்றும் பிற மருத்துவ நிலைகளைப் பொறுத்து அமைய வேண்டும்.
நவி மும்பையில் உள்ள ஃபோர்டிஸ் ஹிரானந்தானி மருத்துவமனையின் தலையீட்டு இதய நோய் ஆலோசகரான மருத்துவர் பிரஷாந்த் பவார், நோயாளிகள் தங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டுமென அறிவுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அவரது கூற்றுப்படி, "பொதுவாக மருத்துவரிடம் அனுமதி பெற்ற பிறகு, வாரத்தில் ஐந்து நாட்கள் சுமார் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சி அல்லது அதுபோன்ற மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சிகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கூடுதலாக, வாரத்திற்கு இரண்டு முறை லேசான தசை வலுவூட்டும் பயிற்சிகளைச் செய்யலாம்."
இருப்பினும், "உடற்பயிற்சி செய்யும்போது மார்பு வலி, வழக்கத்திற்கு மாறான மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் அல்லது சீரற்ற இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆஞ்சியோபிளாஸ்டிக்கு பிறகு சிலர் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக இருக்கையில், மற்றவர்களுக்குப் புதிய அடைப்புகள் ஏற்படுவது ஏன் என்ற கேள்வியும் பொதுவாகக் கேட்கப்படுகிறது.
பிபிசி மராத்தியிடம் பேசிய மருத்துவர் பவார், "ஸ்டென்ட் பொருத்திய பிறகு பல ஆண்டுகளாக ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும், மீண்டும் அடைப்பு ஏற்படுபவர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் நிலைத்தன்மைதான்," என்றார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்றுவதில் நிலையாக இருப்பவர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், மாறாக, மருந்துகளை விரைவில் நிறுத்துவது, ஆபத்துக் காரணிகளைப் புறக்கணிப்பது, எடை அதிகரிப்பது அல்லது எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது போன்றவை ஒருவருக்கு மற்றொரு அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும் அவர் விளக்கினார்.
அதேநேரம், தங்கள் உணவுமுறையை மாற்றுவது, புதிய உடற்பயிற்சி திட்டத்தைத் தொடங்குவது போன்ற பெரிய வாழ்க்கை முறை மாற்றங்களை நோயாளிகள் தாங்களாகவே செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஒருவேளை தேவைப்பட்டால் தகுதிவாய்ந்த நிபுணர்கள் மற்றும் மருத்துவர்ளின் வழிகாட்டுதலைப் பெற்ற பிறகே செய்ய வேண்டும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































