இரான் மோதலுக்கு மத்தியில் அமெரிக்கா - செளதி அணுசக்தி ஒப்பந்தம்: மத்திய கிழக்கை எப்படி மாற்றும்?

 சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் மற்றும் மேக்ஸ் மாட்ஸா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவும் சௌதி அரேபியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வளைகுடா நாடான சௌதி அரேபியா பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்க எரிசக்தித் துறையின் தகவலின்படி, இந்த ஒப்பந்தம் "அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சௌதி அரேபியாவின் அணுசக்தி ஆற்றல் திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் பெரிய அளவில் பங்கேற்கும் வாய்ப்பை இந்த ஒப்பந்தம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. ஆனால் வருங்காலத்தில் சௌதி அரேபியா யுரேனியத்தைச் செறிவூட்ட இந்த ஒப்பந்தம் அனுமதிக்கக்கூடும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மின் நிலையங்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடியும், அதே வேளையில் அணு குண்டுகளைத் தயாரிக்கவும் பயன்படுத்த முடியும்.

அமெரிக்காவின் வரலாற்றில் இந்த அணுசக்தி ஒத்துழைப்பு ஒரு புதிய முன்னுதாரணமாக இருக்கும் என்றும், ஏற்கனவே நிலையற்ற சூழ்நிலையில் இருக்கும் மேற்கு ஆசியப் பகுதியில் அணு ஆயுதப் பரவல் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்துடன் சேர்த்து, ஒரு "இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமும்" கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க எரிசக்தித் துறை குறிப்பிட்டுள்ளது.

"இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இணைந்து, பல தசாப்தங்கள் நீடிக்கும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான கூட்டாண்மைக்கான சட்ட அடித்தளத்தை அமைக்கின்றன. அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது உள்ளிட்ட பல பொருளாதார மற்றும் உத்தி இலக்குகளை இது முன்னெடுக்கிறது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சௌதி அரசும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், இந்த ஒப்பந்தம் "எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே இருக்கும் ஒத்துழைப்பின் நீட்டிப்பாகும்" என்று தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு நவம்பரில் சௌதி தலைவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்ததைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா - செளதி இடையே திடீர் அணுசக்தி ஒப்பந்தம் ஏன்? இஸ்ரேல் கவலை ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இரான் உடனான மோதலுக்கு மத்தியில்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான சௌதி அரேபியா, பல அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தளங்கள் மீது இரானிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ஏமனில் உள்ள இரானின் கூட்டாளிகளான ஹூதிகள், சௌதி அரசுக்கு எதிராக "கடல்சார் முற்றுகை" அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், முன்பு வெளியான தகவல்களின்படி, அமெரிக்காவுடன் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்ட பிறகு, சௌதி அரேபியாவுக்கு தனது சொந்த நாட்டிலேயே யுரேனியத்தைச் செறிவூட்ட அனுமதி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி, அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ஒரு செறிவூட்டும் நிலையத்தில் அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை சௌதி அரேபியா தயாரிக்க முடியும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அணு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான தேவையும் குறையலாம்.

இந்தத் திட்டம் அமெரிக்காவுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக வாய்ப்பை உருவாக்கக்கூடும். ஏனெனில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைப்பதில் அமெரிக்க நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம், அணுமின் நிலையங்களுக்கான எரிபொருளாக பயன்படுத்தப்படுவதோடு, அணு ஆயுதங்களை உருவாக்கவும் பயன்படக்கூடியது.

அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஒப்பந்தங்கள் அணு பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு தொடர்பான மிக உயர்ந்த தரநிலைகளைப் பின்பற்றுகின்றன என்பதை உறுதியாக நம்பலாம். உலகின் சிறந்த அணுசக்தி தொழில்நுட்பமும் விஞ்ஞானிகளும் இதில் பயன்படுத்தப்படுகின்றனர். அவை அனைத்தும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவை,"என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எரிசக்தித் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தம் "அமெரிக்கா மற்றும் பிராந்திய பாதுகாப்பை" மேம்படுத்தும் என்றும், அணு பாதுகாப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு தொடர்பான உயர்ந்த தரநிலைகளைப் பேணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்களுக்கான அணுசக்தி தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவின் போட்டித் திறனை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா - செளதி இடையே திடீர் அணுசக்தி ஒப்பந்தம் ஏன்? இஸ்ரேல் கவலை ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான சௌதி அரேபியா, பல அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது

இஸ்ரேலின் கவலை

இந்நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான இஸ்ரேலைச் சேர்ந்த அணுசக்தி நிபுணர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள், இந்தத் திட்டம் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் கருத்துப்படி, இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் சௌதி அரேபியா அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனைப் பெறுவதற்கான வழியைத் திறக்கக்கூடும்.

எனினும், பல நிபுணர்கள், அந்த நிலையை அடைவதற்கு பல தசாப்தங்கள் ஆகக்கூடும் என்றும், அத்தகைய முயற்சி சர்வதேச சமூகத்தின் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்கும் என்றும் கூறுகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த டிஃபென்ஸ் பிரையாரிட்டீஸ் என்ற ஆய்வு நிறுவனத்தின் மத்திய கிழக்கு திட்ட இயக்குநர் ரோஸ்மேரி கெலானிக், " சௌதி அரேபியாவுக்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் வசதிகளை அமைக்க அமெரிக்கா அனுமதி வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இருந்தால், அது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கா இதற்கு முன்பு ஒருபோதும் இப்படிச் செய்ததில்லை. வேறு எந்த நாட்டுக்கும் அதன் சொந்த மண்ணில் யுரேனியத்தைச் செறிவூட்ட உதவியதில்லை," என்று ரோஸ்மேரி கெலானிக் கூறினார்.

மேலும்,"ஒரு நாடு தனது சொந்த அணு எரிபொருளைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுவிட்டால், அது அணு ஆயுதங்களை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் எதிர்ப்பு ஏன்?

இந்த ஒப்பந்தம் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட உள்ளது.

டிரம்பின் குடியரசுக் கட்சி தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்படுத்தியபோதிலும், அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளையும் சேர்ந்த சில உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் சௌதி அரேபியா அணுஆயுதத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு குறித்து கவலைப்படக்கூடிய விமர்சகர்களின் கருத்துக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மறுத்துள்ளார்.

பிலிப்பின்ஸ் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அணு ஆயுதப் பரவலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் எந்த ஒப்பந்தத்தையும் அமெரிக்கா உலகின் எந்த நாட்டுடனும் மேற்கொள்ளாது," என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், ரூபியோ முன்பு அமெரிக்க செனட்டராக இருந்தபோது "செளதி அரேபியாவுக்கு அணு ஆயுதங்கள் இல்லை" என்ற மசோதாவை ஆதரித்ததை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த மசோதா, செளதி அரேபியாவுடன் மேற்கொள்ளப்படும் எந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என வலியுறுத்தியது.

மாசாசூசெட்ஸ் மாகாண ஜனநாயகக் கட்சி செனட்டர் எட்வர்ட் மார்க்கி, ரூபியோ மற்றும் டிரம்பைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"அவர்களின் இரட்டை நிலைப்பாட்டுக்கு இணையானது அவர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகள்தான்" என்று அவர் கூறியுள்ளார்.

"இரானிய அணு குண்டை தடுப்பது என்ற போர்வையில் இரானுடன் போரைத் தொடங்கும் அதே வேளையில், போர் மனப்பான்மை கொண்ட மற்றும் சர்வாதிகார நாடான சௌதி அரேபியா அணு ஆயுதத் தொழில்நுட்பங்களை உருவாக்க இவர்கள் அனுமதிக்கிறார்கள்" என்று மார்க்கி கூறினார்.


அமெரிக்கா - செளதி இடையே திடீர் அணுசக்தி ஒப்பந்தம் ஏன்? இஸ்ரேல் கவலை ஏன்?

பட மூலாதாரம், Getty Images

யுரேனியம் செறிவூட்டல் செய்வதற்கான அம்சம் இதில் சேர்க்கப்பட்டிருந்தால், சௌதி அரேபியாவின் அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் 2009இல் அமெரிக்கா செய்துகொண்ட மற்றொரு ஒப்பந்தத்தில் இருந்து இது வேறுபடும்.

அந்த ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறது.

இதன் காரணமாக, உலகளவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க முயலும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஆதரவாளர்களின் கவலையையும் செளதி உடனான ஒப்பந்தம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல அமெரிக்க அதிபர்களின் ஆட்சிக் காலத்தில் சௌதி அரேபியா பல ஆண்டுகளாக இத்தகைய ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து, அதனுடன் ராஜ்ஜிய மற்றும் பொருளாதார உறவுகளைச் சீராக்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை அமெரிக்கா முன்வைத்து வந்தது.

ஆனால், அமெரிக்க ஊடகங்களின் செய்திகளின்படி, இந்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனையிலிருந்து அந்த கோரிக்கை கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.

டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தில் செளதி அரேபியாவுடன் நெருக்கமான உறவை உருவாக்க முயற்சி செய்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய உத்தி மற்றும் வணிக நன்மைகளுடன் சேர்த்து, தற்போது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கான ஒரு காரணமாக, ரஷ்யாவும் சீனாவும் இதுபோன்ற ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுவது இருக்கலாம். அந்த வாய்ப்பை அமெரிக்கா இழக்க விரும்பவில்லை என்றும் கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியாவுக்கு ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

இது உடனடியாக நிகழாவிட்டாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அதற்கு அதிக காலம் ஆகும் என்றாலும், மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை மாற்றும் திறன் கொண்டதாக இருக்கலாம்.

பல மாதங்களாக நடைபெறும் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான மோதலின் மையப்புள்ளியாக இந்த அணுசக்தி விவகாரம் இருந்து வருகிறது.

பிப்ரவரியில் இரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஒரு காரணம், அந்நாடு அணுஆயுதத்தை உருவாக்குவதைத் தடுப்பதே என்று இவ்விரு நாடுகளும் கூறுகின்றன. ஆனால் அத்தகைய திட்டம் எதுவுமில்லை என இரான் மறுக்கிறது.

சௌதி அரேபியாவின் நடைமுறை ஆட்சியாளரான இளவரசர் முகமது பின் சல்மான் 2018-இல் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தனது சொந்த நாடு அணுஆயுதத்தைப் பெறத் திட்டமிடவில்லை என்றும், ஆனால் "சந்தேகத்திற்கு இடமின்றி இரான் அணு குண்டை உருவாக்கினால், நாங்களும் கூடிய விரைவில் அதைப் பின்பற்றுவோம்" என்றும் கூறியிருந்தார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு