ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் அமளி - 'நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது' என பாஜக எதிர்ப்பு

பட மூலாதாரம், ANI
வினாத்தாள் கசிவு தொடர்பான 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026' குறித்த விவாதம் புதன்கிழமையும் மக்களவையில் தொடர்ந்தது.
செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கருத்தைச் சுற்றி கடும் அமளி ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து விவாதம் எழுந்துள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, புதன்கிழமை வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பேசினார். தனது உரையின் தொடக்கத்தில், சில இளம் மாணவர்களைக் குறிப்பிட்டு அவர் பயன்படுத்திய சொல் 'நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது' என பாஜக கூறியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார்.
ராகுல் காந்தி பேசியது என்ன?

பட மூலாதாரம், ANI
மக்களவையில் தனது உரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, "நமது நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் தெருக்களில் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. அது கோபமோ, வன்முறையோ, வெறுப்போ அல்ல. அது இந்த நாட்டின் இளைஞர்கள், எதிர்கால தலைமுறையினர் வெளிப்படுத்திய ஆழமான உணர்வு. பாஜகவில் உள்ள என் நண்பர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த உணர்வை மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
"பாஜகவில் உள்ள என் நண்பர்கள் தங்கள் குழந்தைகளிடம், அவர்களின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களுடைய குழந்தைகளும் அதற்கு உடன்படுவதைக் காண்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதில் எந்தத் தவறும் இல்லை. நடந்தவற்றை ஒவ்வொரு இந்தியரும் பெருமையாகக் கருத வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "இந்த உரையை அடுத்த தலைமுறையினருக்காகப் பேசப் போகிறேன் என்று நினைத்தேன். எனவே, என் உரையை எங்கிருந்து தொடங்குவது என்று யோசித்தேன்," என்றார்.
"இளம் மாணவர்களுடன் நான் நடத்திய உரையாடல்களில் இருந்து தொடங்குவது நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நினைத்தேன்," என்றும் அவர் தெரிவித்தார்.
"நான் ஒரு இளம் பெண்ணிடம், 'நீங்கள் ஒரு மாணவி என்று சொன்னீர்கள். மாணவர் என்பதற்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டேன். அதற்கு அவர் மிக அழகான பதில் அளித்தார். 'மாணவர் என்பவர் திறந்த மனம் கொண்டவர். தனக்கு எல்லாம் தெரியாது என்பதை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொள்பவர். இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை நம்புபவர். அறிவும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதை மாணவர்கள் புரிந்துகொள்கிறார்கள்' என்று அந்த மாணவி கூறினார்.
அடுத்து நான் அவரிடம், 'மாணவர் என்பதற்கு மிகச் சிறப்பாக விளக்கம் அளித்துள்ளீர்கள்' என்றேன். பின்னர், 'வேறு சிலர் இருக்கிறார்கள்' என்று அந்த மாணவி கூறினார். அதற்கு நான், 'அவர்கள் யார்?' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'அவர்கள் எல்லாம் தங்களுக்கே அனைத்தும் தெரியும் என்று நினைப்பவர்கள். பிரபஞ்சம் மாறாதது என்று நம்புபவர்கள். அறிவு தங்களுக்குள் இருந்தே வருகிறது என்று கருதுபவர்கள். தங்களையே கடவுளாக நினைப்பவர்கள். அவர்கள் ஆணவம் கொண்டவர்கள். யாருடைய கருத்தையும் கேட்க மாட்டார்கள். மற்றவர்களின் உண்மையையும் மதிக்க மாட்டார்கள்' என்று கூறினார். 'அப்படிப்பட்டவர்களிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?' என்று நான் கேட்டேன்," என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, ஆளுங்கட்சியினர் நாடாளுமன்ற மரபுக்கு ஏற்றதாக இல்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்த சொல்லை ராகுல் காந்தி பயன்படுத்தினார். பின்னர் அதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.

பட மூலாதாரம், ANI
பாஜக எதிர்ப்பு
இந்த நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. உங்கள் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை. ஆனால், நீங்கள் பயன்படுத்திய அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள்," என்றார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தி தனது கருத்தைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், தனது இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி, முதலில் அவையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கூறி பேச மறுத்தார்.
இதையடுத்து எழுந்து நின்ற ராகுல் காந்தி, "நான் பேசத் தொடங்கியவுடன் ஆளுங்கட்சியினர் அனைவரும் கூச்சல் எழுப்பத் தொடங்கிவிட்டனர்," என்றார்.
அதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, "ராகுல் காந்தி, நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். நாடாளுமன்ற மரபுக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்பதைத்தான் நாங்கள் கூறுகிறோம்," என்றார்.
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "நான் அந்த வார்த்தையை ஏதேனும் ஒரு எம்.பி.யை குறிப்பிட்டு கூறியிருந்தால் மட்டுமே அது நாடாளுமன்ற மரபுக்கு எதிரானதாக இருக்கும். நான் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் ரிஜிஜு எழுந்து நிற்கிறார்," என்று கூறினார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அந்தச் சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதை மக்களவை குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், "அனைவரும் அமைதியாக இருந்து அவருடைய பேச்சைக் கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
மேலும், "இன்று உள்துறை அமைச்சர் ஏன் அவையில் இல்லை? என கூறிய ராகுல் காந்தி, அமித் ஷா குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து மக்களவை சபாநாயகர் தலையிட்டு, தற்போது விவாதிக்கப்பட்டுவரும் மசோதாவுடன் தொடர்புடைய அமைச்சர்கள் அவையில் இருப்பதாகவும், உள்துறை அமைச்சகத்துக்கு அந்த விவாதத்துடன் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு கிரண் ரிஜிஜுவும் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல் காந்தி தவறான தகவல்களை கூறுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவராக அவர் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் கருத்து குறித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ''எதிர்க்கட்சித் தலைவர் அவையில் ஆதாரமற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இதை நான் கண்டிக்கிறேன். மசோதா மற்றும் விவாதம் குறித்து கூறுவதற்கு எதுவும் இல்லாததால் ராகுல் காந்தி இவ்வாறு பேசியுள்ளார்," என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராகுல் காந்தி அவையிலேயே நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































