ஒபெக் மற்றும் ஒபெக்+ அமைப்புகளிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விலகுவது அவற்றின் 'முடிவைக்' குறிக்கிறதா?

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வரலாற்று ரீதியாக ஒரு பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி, உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள இரான் போர்ச்சூழலில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவு தனது "நீண்ட கால உத்தி, பொருளாதார தொலைநோக்கு பார்வை மற்றும் மாறிவரும் எரிசக்திப் போக்கு" ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டமைப்புகளின் கீழ் உள்ள எந்தவொரு கடமைகளிலிருந்தும் விடுபடுவது நாட்டுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எரிசக்தி அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூய் கூறியுள்ளார்.

ஒபெக் எப்போது நிறுவப்பட்டது?

எண்ணெய் ஏற்றுமதியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், உறுப்பு நாடுகளுக்கு நிலையான வருவாயை உறுதி செய்வதற்கும், உற்பத்தியை ஒருங்கிணைக்கும் நோக்கில் 1960 ஆம் ஆண்டில் இரான், இராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுவேலா ஆகிய ஐந்து நாடுகளால் ஒபெக் (OPEC) நிறுவப்பட்டது.

இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை காலப்போக்கில் மாறுபட்டுள்ளது, ஆனால் ஐந்து உறுப்பு நாடுகளுடன் கூடுதலாக, இதில் அல்ஜீரியா, ஈக்வடோரியல் கினியா, காபோன், லிபியா, நைஜீரியா மற்றும் காங்கோ குடியரசு ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1967 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இணைந்தது, தற்போது அந்நாடு வெளியேறுவதன் மூலம் இந்த அமைப்பில் 11 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். ஒபெக் பிளஸ் (OPEC Plus) கூட்டணியில் ரஷ்யா உட்பட ஒபெக் அல்லாத 10 உறுப்பு நாடுகளும் அடங்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியேறுவதால் ஏற்படும் தாக்கம் என்னவாக இருக்கும்?

இந்த முடிவு இந்தக் கூட்டமைப்புக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஒரு ஆய்வாளர் இந்த வெளியேற்றத்தை "ஒபெக்கின் முடிவின் ஆரம்பம்" என்று விவரிக்கிறார்.

எம்எஸ்டி ஃபைனான்சியல் நிறுவனத்தின் எரிசக்தி ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் சவுல் கவோனிக், இந்தக் கூட்டணிக்கு இது "முடிவின் ஆரம்பமாக" இருக்கலாம் என்று கூறினார்.

"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியேறுவதால், ஒபெக் தனது உற்பத்தித் திறனில் சுமார் 15% இழக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு ஒபெக் அமைப்புக்கும், அக்குழுவின் முதன்மைத் தலைவராகக் கருதப்படும் சௌதி அரேபியாவுக்கும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் செய்தித்தாளான 'தி கார்டியன்' கருத்துப்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நீண்டகாலமாக இருக்கும் ஒரு உறுப்பினர் வெளியேறுவது குழப்பத்தை உருவாக்கக்கூடும்.

உலக அரசியல் முதல் உற்பத்தி ஒதுக்கீடு வரையிலான பல்வேறு விவகாரங்களில் உள் முரண்பாடுகள் இருந்தபோதிலும், பொதுவாக ஒற்றுமையைக் காட்ட முயன்றுவரும் ஒபெக் அமைப்பை இது பலவீனப்படுத்தக்கூடும்.

பிளாக் கோல்ட் இன்வெஸ்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஒபெக் அமைப்பை நீண்டகாலமாகக் கவனித்து வருபவருமான கேரி ரோஸ், ராய்ட்டர்ஸிடம் இவ்வாறு கூறினார்.

"அவர்கள் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி ஒதுக்கீடுகளைப் புறக்கணித்துவிட்டு, அதிகபட்ச உற்பத்திக்கு நெருக்கமான கொள்கையைக் கடைபிடித்தனர். இறுதியில், சௌதி அரேபியா தான் நடைமுறையில் ஒபெக் அமைப்பாக இருந்தது."

"உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வசதியைக் கொண்ட ஒரே நாடு அதுதான். ரஷ்யா இதில் இணைந்திருப்பது நல்லது, இது விநியோகத்தை அதிகரிக்கும் திறனில் ஒபெக் அமைப்புக்கு ஓரளவுக் கட்டுப்பாட்டை வழங்குகிறது."

ஒபெக்கின் சமீபத்திய தரவுகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆண்டுக்கு 2.9 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்கிறது. ஒபெக்கின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சௌதி அரேபியா ஆண்டுக்கு 9 மில்லியன் பேரல் எண்ணெயை எடுக்கிறது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, சர்வதேச எரிசக்தி முகமை பிப்ரவரியில் உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் ஒபெக் பிளஸ் (OPEC+) அமைப்பின் பங்கு சுமார் 48% ஆக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் அது 44% ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

உற்பத்தி குறைப்புகள் இன்னும் தெளிவாகத் தெரியத் தொடங்கும்போது, ஏப்ரல் மாதத்தில் இது மேலும் குறையக்கூடும்.

"போர் ஓய்ந்து நிலைமை சீரடைந்தவுடன், உலகச் சந்தையில் தனது பங்கை அதிகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இது வழிவகுக்கும்" என்று ஏடிசிபி வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் மோனிகா மாலிக் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கை நுகர்வோருக்கும் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார்.

டிரம்ப் மகிழ்ச்சியடையக் காரணம் என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியேறுவது, முன்னதாக ஒபெக் அமைப்பு "உலகைச் சுரண்டுகிறது" என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம், அவர் சௌதி அரேபியா மற்றும் பிற ஒபெக் நாடுகளை "எண்ணெய் விலையைக் குறைக்க" வலியுறுத்தியதுடன், வரிகளை விதிப்பேன் என்ற தனது அச்சுறுத்தலையும் மீண்டும் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் நடக்கும் போரினால், எண்ணெய் விநியோகத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சரிவுக்கு வழிவகுத்துள்ளது என்று உலக வங்கி எச்சரித்துள்ள நேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன் விளைவாக இந்த ஆண்டு எரிசக்தி விலைகள் சராசரியாக கால் பங்கு உயரும் என்றும், அதே சமயம் மிக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அது கூறுகிறது.

"தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை உணவு மற்றும் எரிபொருளுக்காகச் செலவிடும் ஏழை மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்" என்று உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்தர்மீத் கில் தெரிவித்தார்.

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக, ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியேறுவது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், நீண்ட காலத்தில் இது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தக்கூடும்.

தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்றும், நீண்ட காலமாக அதிக எண்ணெயை உற்பத்தி செய்ய விரும்புவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கேபிடல் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை காலநிலை மற்றும் பண்டப் பொருளாதார நிபுணர் டேவிட் ஆக்ஸ்லி கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியேறுவது, வரும் காலங்களில் எண்ணெய் விலையைக் குறைக்கக்கூடும், ஆனால் சந்தையின் ஏற்ற இறக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், மற்ற உறுப்பு நாடுகளும் வெளியேறினாலோ அல்லது இதன் விளைவாக ரஷ்யா மற்றும் சௌதி அரேபியா போன்ற நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்தாலோ அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

கிறிஸ்டல் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், அரபு எனர்ஜி கிளப்பின் பொதுச் செயலாளருமான கரோல் நக்லே பிபிசியிடம் பேசுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த முடிவு "நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட ஒன்று" என்று கூறினார்.

"அபுதாபி தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான லட்சிய இலக்குகளைத் தொடர்ந்தது. ஆனால், குழுவின் ஒதுக்கீடுகளால் அடிக்கடி கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்தது, குறிப்பாக சில உறுப்பினர்கள் இந்த விதிகளைச் சரியாகப் பின்பற்றாதபோது இந்த நிலை ஏற்பட்டது" என்றும் அவர் கூறினார்.

ஒபெக் உறுப்பினராக இரானின் செயல்பாடுகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முடிவை மேலும் வலுப்படுத்தியிருக்கலாம் என்றும் நக்லே தெரிவித்தார்.

"மீதமுள்ள ஒபெக் நாடுகளை ஒற்றுமையாக வைத்திருப்பது சௌதி அரேபியாவுக்கு கடினமாக இருக்கும். மேலும் உள்நாட்டு இணக்கம் மற்றும் சந்தை நிர்வாகத்தின் பெரும்பகுதியை அது தனியாகவே சுமக்க வேண்டியிருக்கும்" என்று கவோனிக் கூறினார்.

மேலும், மற்ற ஒபெக் உறுப்பினர்களும் இதேபோன்ற நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "இது மத்திய கிழக்கு மற்றும் எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஒரு அடிப்படை உலக அரசியல் மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு