ஒடிசா: வங்கியிலிருந்து பணம் எடுக்க இறந்த சகோதரியின் எலும்புகூட்டை எடுத்துச் சென்ற நபர் - ஏன்?

    • எழுதியவர், ராகி கோஷ்
    • பதவி, பிபிசி இந்தி
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் திங்கள்கிழமை (ஏப்ரல் 27) மதியம், 52 வயதான ஜித்து முண்டா தனது தோளில் ஒரு எலும்புக்கூட்டைச் சுமந்தபடி ஒரு வங்கிக்குள் நுழைந்தார். இது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அது பாட்னா பிளாக்கின் மல்லிபோஷி கிராமத்தில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியின் கிளை ஆகும்.

பாட்னா பிளாக்கில் உள்ள தியானாலி கிராமத்தைச் சேர்ந்த ஜித்து முண்டா, தனது சகோதரியின் கிராமின் வங்கி கணக்கிலிருந்து 19,300 ரூபாயை எடுக்க விரும்பினார்.

அவரது 56 வயது சகோதரி கல்ரா முண்டா, அண்டை மாவட்டமான ஜாஜ்பூரைச் சேர்ந்த சுக்ரு முண்டாவை மணந்தவர்.

கல்ரா முண்டா மற்றும் சுக்ரு முண்டாவுக்கு ஒரு மகன் இருந்தார். ஆனால், தனது கணவர் மற்றும் மகனின் மறைவுக்குப் பிறகு, கல்ரா முண்டா தியானாலியில் உள்ள தனது தாய் வீட்டுக்குத் திரும்பி, பிழைப்புக்காக ஒரு தினசரி கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, கல்ரா தனது கன்றுக்குட்டிகளில் ஒன்றை விற்று, அதிலிருந்து கிடைத்த 19,300 ரூபாயைத் தனது கணக்கில் டெபாசிட் செய்திருந்தார்.

எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்றது ஏன்?

இரண்டு மாதங்களுக்கு முன்பு, கல்ரா முண்டா இறந்துவிட்டதால், அவரது சகோதரர் ஜித்து பணத்தை எடுக்க வங்கிக்குச் சென்றார்.

"எனது சகோதரி இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்று வங்கி மேலாளரிடம் பலமுறை கூறி புரியவைக்க முயன்றேன். ஆனால், வங்கி மேலாளர் நான் சொல்வதைக் கேட்க மறுத்து, கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறோ அல்லது வாரிசு ஆவணங்களை வழங்கி இறப்புக்கான ஆதாரத்தை அளிக்குமாறோ வற்புறுத்தியபோது, நான் விரக்தியடைந்து அவருக்கு ஆதாரத்தைக் காட்டுவதற்காக எலும்புக்கூட்டை எடுத்து வந்தேன்," என்கிறார் ஜித்து.

ஜித்து மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து, கிராமத்தின் இடுகாட்டுக்குச் சென்று, தனது சகோதரியின் உடல் எச்சங்களை எடுத்து, அவற்றை ஒரு சணல் சாக்கில் போட்டு, கொளுத்தும் வெயிலில் தனது தோளில் சுமந்து வங்கிக்குக் கொண்டு வந்தார்.

வங்கி வளாகத்தில் இருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் இதைக் கண்டு திகைத்துப் போயினர். அவர்கள் உடனடியாக காவல்துறையினரையும் பி.டி.ஓ (BDO) அதிகாரியையும் அழைத்தனர்.

ஜித்துவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று காவல்துறையினரும் பி.டி.ஓ-வும் அவரைச் சமாதானப்படுத்தி, எலும்புக்கூட்டை மீண்டும் அதே இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

பின்னர் ஜித்து எலும்புக்கூட்டைத் தனது தோளில் சுமந்து கொண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து இடுகாட்டுக்குச் சென்றார்.

வங்கி மேலாளர் கூறுவது என்ன?

இது குறித்து ஒடிசா கிராமின் வங்கி மேலாளர் சுஷாந்த் குமார் சேதி பேசுகையில், "ஜித்து பணம் எடுக்க வந்தபோது, சம்பந்தப்பட்ட நபர் இங்கு இருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆரம்பத்தில், தனது சகோதரிக்கு முடக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் வர முடியாது என்று கூறினார். வங்கி ஊழியர்கள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள் என்று நான் சொன்னபோது, சகோதரி இறந்துவிட்டார் என்று கூறினார்," என்கிறார்.

'கடந்த இரண்டு மாதங்களில் ஜித்து ஒருமுறை கூட பணம் எடுக்க வங்கிக்கு வரவில்லை' என்று வங்கி மேலாளர் தெரிவித்தார். 'கல்ராவுக்கு இன்னும் இரண்டு சட்டப்பூர்வ வாரிசுகள் இருப்பதாகவும், அவர்களும் பணத்தை எடுக்க வங்கிக்கு வந்ததால், சட்டப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஜித்துவிடம் கேட்டதாகவும்' அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 28-ஆம் தேதி நடந்த விசாரணைக்குப் பிறகு, கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த 19,410 ரூபாய் ஜித்து மற்றும் கல்ராவின் மற்ற இரண்டு சட்டப்பூர்வ வாரிசுகளிடம் (அவரது சகோதரர் மற்றும் சகோதரி) ஒப்படைக்கப்பட்டது.

"இந்தத் தொகையை சமமாகப் பிரித்துக்கொள்ளுமாறு அவர்களிடம் கூறினோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஒடிசா வருவாய்த் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி, "டானா மாஜிக்குப் (2016இல் தன் மனைவியின் உடலைத் தோளில் சுமந்தபடி 10 கி.மீ. நடந்து சென்றவர்) பிறகு ஒடிசாவில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இது" என்று கூறினார்.

மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், வங்கி மேலாளரின் அணுகுமுறைக்காக அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது கியோன்ஜார் மாவட்ட நிர்வாகம் இந்தச் சம்பவம் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதே மாவட்ட நிர்வாகத்தின் அடிப்படை நோக்கம்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்தத் தகவல் கிடைத்ததும், கல்ரா முண்டாவின் சகோதரர் ஜித்து முண்டாவுக்கு மாவட்ட செஞ்சிலுவைச் சங்க நிதியிலிருந்து ரூ. 30,000 நிதியுதவி வழங்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'இது தவிர, அவருக்கு சகோதரியின் இறப்புச் சான்றிதழும் சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன' என்று நிர்வாகம் கூறியுள்ளது.

வருங்காலத்தில் எந்தவொரு அப்பாவி நபரும் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடாது என்பதை உறுதிப்படுத்தத் தாங்கள் முழுமையாகக் கடமைப்பட்டிருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு