You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய ஓராண்டில் பாகிஸ்தான் சந்தித்த இழப்பு எவ்வளவு?
- எழுதியவர், அசாத் சுஹைப்
- பதவி, பிபிசி உருது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் 'ஒருதலைப்பட்சமான முடிவை' கவனத்தில் கொள்ளுமாறு பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தெற்காசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இஃப்திகார், பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் சார்பில் இந்தக் கடிதத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவரிடம் சமர்ப்பித்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்தியாவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான தூதரகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தியதோடு, நதி நீர் பகிர்வு தொடர்பான 1960-ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்திருந்தது.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்தியாவின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஓராண்டுக்கு இந்தியா நிறுத்தி வைத்திருப்பது அமைதி, பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானப் பிரச்னைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதரகம் வியாழக்கிழமை சமூக ஊடகத் தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த 'ஆபத்தான சூழ்நிலையை' கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியாவைக் கேட்டுக்கொள்ளுமாறும் அந்தக் கடிதம் பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தியுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஓராண்டு நிறுத்தி வைக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது?
இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படுவது எதிர்காலத்தில் பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்குமா ?
இது விவசாயிகளையும் விவசாயத்தையும் எவ்வாறு பாதிக்கும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய, பிபிசி உருது நீர் மேலாண்மை நிபுணர்களிடம் பேசியது.
நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதால் பாகிஸ்தானுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், பீஸ், ரவி மற்றும் சட்லஜ் ஆகிய நதிகளின் நீர் உரிமைகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன. சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகிய மூன்று மேற்கு நதிகளின் நீர் உரிமைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.
இந்த மூன்று நதிகளின் (சிந்து, செனாப் மற்றும் ஜீலம்) நீரிலும் 20 சதவீத உரிமையை இந்தியா கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் சில அடிப்படைப் பொறுப்புகள் உள்ளன. இரு நாடுகளின் நீர் ஆணையர்களும் ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்திப்பது, நதிகளின் நீர் ஓட்டம் குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் இரு நாடுகளிலும் நதித் திட்டங்களுக்கு மற்ற நாட்டு ஆய்வு குழுக்கள் சென்று பார்வையிடுவது ஆகியவை இதில் அடங்கும் என்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பாகிஸ்தான் தரப்பின் முன்னாள் கூடுதல் ஆணையர் ஷிராஸ் மேமன் கூறுகிறார்.
இரு நாடுகளின் சிந்து நதி நீர் ஆணையர்களும் பொதுவாக மே மாதத்தில் சந்திப்பார்கள் என்றும், ஜூன் 1 அன்று அவர்களின் ஆண்டு அறிக்கை இரு அரசாங்கங்களிடமும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த ஒப்பந்தம் செயல்படுவதை நிறுத்தி வைப்பதால், இனி சந்திப்புகள், ஆய்வுக் குழுக்களின் வருகை அல்லது நீர் ஓட்டம் குறித்த தரவுப் பகிர்வு ஆகியவை நடைபெறாது என்கிறார் ஷிராஸ் மேமன்.
ஏதேனும் ஒரு ஒப்பந்தத்திலிருந்து ஒரு தரப்பு பின்வாங்கினால், அது பொறுப்பின்மையைக் காட்டுகிறது என்று முன்னாள் சிந்து நதி நீர் ஆணையர் ஜமாத் அலி ஷா கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய ஜமாத் அலி ஷா, கடந்த ஓராண்டில் பாகிஸ்தானுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.
பல ஆண்டுகால பழமையான ஒரு ஒப்பந்தத்தை ஒரு தரப்பு நிறுத்தி வைத்து அதை முடிவுக்குக் கொண்டுவர முயன்றால், மறுதரப்பு அதிக கவலையடையும் என்பது வெளிப்படையானது என்று அவர் கூறினார்.
மேலும், ''இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கான சலுகை அல்ல, மாறாக இதில் நாங்கள் மூன்று நதிகளை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்திருந்தோம். ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் ஒரு புனிதத்தன்மை உண்டு, அது பேணப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான விஷயம் இந்த ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மைதான்" என்றும் ஷா குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தானின் தண்ணீரை நிறுத்தும் திறனோ அல்லது அதிகாரமோ இந்தியாவிற்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய முயன்றால், அது நிச்சயமாகப் பாகிஸ்தானுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்றார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், அங்கு பாயும் நீரில் இந்தியா சேமிப்பு வசதிகளை உருவாக்க முடியும் என்று பாகிஸ்தான் தேசிய சபையின் முன்னாள் உறுப்பினரும் நீர் விவகார நிபுணருமான மொஹ்சின் லெகாரி கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "உதாரணமாக, செனாப் நதியில் உள்ள தனது அணைகளை இந்தியா திடீரென நிரப்பத் தொடங்கினால், அது பாகிஸ்தானை நோக்கிய நீர் ஓட்டத்தைக் குறைக்கிறது" என்றார்.
இதேபோல் இந்தியத் தரப்பிலிருந்து இந்த அணைகள் திடீரெனத் திறக்கப்பட்டால் பாகிஸ்தானை நோக்கி அதிகளவு நீர் வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் மூலம், நீர் ஓட்டம் தொடர்பான விஷயங்களில் இரு நாட்டு அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர், ஆனால் கடந்த ஒரு வருடமாகத் தொடர்பு இல்லாததால் இரு நாடுகளும் இந்தத் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்று லெகாரி கூறுகிறார்.
பயிர்களுக்குக் காலம் மிகவும் முக்கியமானது, குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று லெகாரி கூறுகிறார்.
'உடனடி அச்சுறுத்தல் இல்லை, ஆனால்...'
இந்தியா இந்த ஒப்பந்தத்தை மீறி எதிர்காலத்தில் தண்ணீரைத் தடுக்கும் திட்டங்களை உருவாக்கினால், அது பாகிஸ்தானை நோக்கிய நீர் ஓட்டத்தைப் பாதிக்கும் என்று ஜமாத் அலி ஷா கூறுகிறார்.
மேலும், "நமக்குத் தண்ணீர் தேவைப்படும்போது அது கிடைக்காமலும், தண்ணீருக்கான தேவை குறைவாக இருக்கும்போது தேவைக்கு அதிகமான தண்ணீர் நமக்குக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தற்போது பாகிஸ்தானின் விவசாயத்தைப் பாதிக்கவில்லை என்று ஜமாத் அலி ஷா கூறுகிறார்.
இந்தியா ஏதேனும் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கினால், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் பாகிஸ்தான் இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் கூறுகிறார்.
நீர் ஓட்டம் குறித்த தகவல்களை இந்தியா வழங்காவிட்டால், அது திட்டமிடுதலைப் பாதிக்கும் என்பதுதான் பாகிஸ்தானுக்கான சிக்கல் என்று கூறிய அவர்,"சில நேரங்களில் தேவைப்படுவதை விடக் குறைவான நீரே இருக்கும், சில நேரங்களில் மிக அதிகமான நீர் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும்" என்றார்.
பாதுகாப்பு கவுன்சிலால் இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முடியுமா?
பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் எழுதிய கடிதம் குறித்து ஜமாத் அலி ஷா கூறுகையில், இது பாகிஸ்தானின் ஓர் அடையாளப்பூர்வமான நடவடிக்கை மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியும்.
மேலும் ஐரோப்பிய ஆணையம் மற்றும் அமெரிக்கா போன்ற தளங்களும் பாகிஸ்தானிடம் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?
சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதற்காக, உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் ஒன்பது ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செப்டம்பர் 1960-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் ஆகியோர் கராச்சியில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இரு நாட்டு விவசாயிகளுக்கும் செழிப்பைக் கொண்டுவரும் என்றும் அமைதி, நல்லெண்ணம் மற்றும் நட்புறவுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும் நம்பப்பட்டது.
நதி நீர் பகிர்வு குறித்த இந்த ஒப்பந்தம் பல போர்கள், சர்ச்சைகள் மற்றும் சண்டைகள் இருந்தபோதிலும் 65 ஆண்டுகளாகச் சிதையாமல் இருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பீஸ், ரவி மற்றும் சட்லஜ் ஆகிய நதிகளின் நீரின் மீது இந்தியாவிற்கு முழு உரிமை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகிய மூன்று மேற்கு நதிகளின் நீர் உரிமைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.
ஒப்பந்தத்தின்படி, இந்த நதிகளின் நீரில் 80 சதவீத உரிமை பாகிஸ்தானுக்கு உண்டு.
மேற்கு நதிகளில் பாயும் நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய இந்தியாவிற்கு உரிமை உண்டு, ஆனால் ஒப்பந்தத்தின்படி, நீரைச் சேமிக்கும் அல்லது அதன் ஓட்டத்தைக் குறைக்கும் திட்டங்களை இந்தியாவால் உருவாக்க முடியாது.
மாறாக, பீஸ், ரவி மற்றும் சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது எந்த வகையான திட்டத்தையும் உருவாக்கும் உரிமை இந்தியாவிற்கு உண்டு, மேலும் இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
ஏதேனும் ஒரு திட்டம் தொடர்பாக சர்ச்சை ஏற்படும் பட்சத்தில், தீர்வு காண்பதற்காக நிரந்தர சிந்து ஆணையத்தையும் இந்த ஒப்பந்தம் நிறுவியது. இருப்பினும், இந்த ஆணையம் ஒரு தீர்வைக் காணத் தவறினால், அரசாங்கங்கள் இப்பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
இது தவிர, சர்ச்சைகளைத் தீர்க்க நிபுணர்களின் உதவியைப் பெறுவது அல்லது 'மத்தியஸ்த நீதிமன்றத்திற்கு' செல்வது போன்ற முறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு