அதிரடி ரன் குவிப்பால் கவனம் ஈர்க்கும் 'ஆர்யவீர் சேவாக்': பேட்டிங்கில் தந்தையின் சாயலும் மாறுபடும் அணுகுமுறையும்

ஆர்யவீர் சேவாக், விரேந்தர் சேவாக், இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட், ஆசிய கோப்பை
படக்குறிப்பு, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் ஐந்து போட்டிகளில் 90.25 சராசரியுடன் 361 ரன்களை குவித்த ஆர்யவீர்
    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்தியா ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்குவகித்தவர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக்.

ஐந்து போட்டிகளில் 90.25 சராசரியுடன் 361 ரன்களை குவித்த ஆர்யவீர், தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். இதன் மூலம் அவருடைய பெயர் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

யார் இந்த ஆர்யவீர் சேவாக்?

2007 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி பிறந்த ஆர்யவீர், 2024 ஆம் ஆண்டு கூச் பெஹார் கோப்பை தொடரில் மேகாலாயாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கி இரட்டை சதம் விளாசி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் போட்டியில் 309 பந்துகளை எதிர்கொண்ட அவர், 51 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 297 ரன்களைக் குவித்தார்.

அதே ஆண்டு வினூ மன்கட் கோப்பையில் அறிமுகமான ஆர்யவீர், 2026 ஆம் ஆண்டு டெல்லி பிரீமியர் லீக்கில் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிக்காக களமிறங்கினார்.

2026 ஆகஸ்ட் மாதம் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது ஆர்யவீரின் கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமானதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆர்யவீர் காலடி எடுத்துவைத்தார்.

கடந்த அக்டோபரில் வினூ மன்கட் கோப்பையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு படியை ஆர்யவீர் சேவாக் எடுத்துவைத்தார்.

தற்போது, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் அவருடைய செயல்பாடு, ஆர்யவீர் சேவாக் பெயரை பேசுபொருளாக மாற்றியுள்ளது.

பேட்டிங் ஸ்டைலில் தந்தையிடம் இருந்து மாறுபடும் ஆர்யவீர்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆர்யவீரின் ஆட்டத்தை, நாட்வெஸ்ட் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான சேவாக்கின் இன்னிங்ஸுடன் கிரிக்கெட் விமர்சகர்கள் ஒப்பிடுகின்றனர்.

லார்ட்ஸில் நடந்த போட்டியில் 326 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு 43 பந்துகளில் 60 ரன்கள் குவித்து சேவாக் அதிரடி தொடக்கம் கொடுத்தார்.

அதேபோல ஆர்யவீரும், அல் அமீரட்டில் நடைபெற்ற U19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 61 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இந்திய அணி 338 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸ் செய்வதற்கு வலுவான அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஆர்யவீர் சேவாக், விரேந்தர் சேவாக், இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட், ஆசிய கோப்பை
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சேவாக்கை போலவே ஆர்யவீரும் வலக்கை தொடக்க பேட்டர் என்றாலும், இருவருடைய பேட்டிங் டெக்னிக்கும் வேறுபட்டது என்கிறார் தேவேந்தர் சர்மா. டெல்லியில் உள்ள சோனட் கிரிக்கெட் கிளப்பில் 2018ஆம் ஆண்டு 11 வயதில் சேர்ந்த ஆர்யவீருக்கு, மறைந்த தாராக் சின்ஹாவுடன் இணைந்து தேவேந்தர் சர்மா பயிற்சி அளித்துள்ளார்.

"தனது தந்தையைப் போல விளையாட வேண்டும் என ஆர்யவீர் முயற்சிப்பதில்லை. தொடக்கத்தில் நிதானமாக விளையாடுவது; செட்டில் ஆனவுடன் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்வது என்று தனக்கென ஒரு பாணியை அவர் வரித்துக்கொண்டார்," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தேவேந்தர் சர்மா கூறியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான சேவாக்கின் மகனாக இருந்தாலும், ஆர்யவீரின் மனம் கவர்ந்த வீரர் என்னவோ விராட் கோலிதான்.

சிறு வயதில் ரிஷப் பந்த் பேட்டிங் மீதும் ஆர்யவீர் ஆர்வமாக இருந்தார் என்கிறார் அவருடைய தேவேந்தர் சர்மா.

"சோனட் கிளப்புக்கு ரிஷப் பந்த் வலைப்பயிற்சிக்கு வரும் போதெல்லாம், ஆர்யவீர் அவரது பேட்டிங்கை உன்னிப்பாக கவனிப்பார். வீட்டுக்குச் சென்ற பிறகும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்," என்கிறார் அவர்.

அதேநேரம், எதிரணியை தாக்கி விளையாட முற்படுவதிலும் தயக்கமின்றி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாக தேவேந்தர் சர்மா தெரிவித்துள்ளார்.

வலியை பொருட்படுத்தாமல் போராடிய ஆர்யவீர்

ஆர்யவீர் சேவாக், விரேந்தர் சேவாக், இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட், ஆசிய கோப்பை
படக்குறிப்பு, மகன் ஆர்யவீருடன் சேவாக் (கோப்புப் படம்)

"சேவாக் தனது அபாரமான கண்-கை ஒருங்கிணைப்பை (hand eye coordination) நம்பி, கால்களை அதிகம் நகர்த்தாமலேயே பந்துகளை எதிர்கொள்வார். ஆனால், ஆர்யவீர் பந்தைச் சந்திப்பதற்கு முன்பு, ஸ்டம்புகளுக்குக் குறுக்கே மெதுவாக நகர்ந்து தனது பேட்டிங் ஸ்டேன்ஸை அமைத்துக் கொள்கிறார்." என்று தந்தை-மகன் பேட்டிங் டெக்னிக்கை ஆய்வுக்குட்படுத்துகிறார் தி ஹிந்து நாளிதழின் விளையாட்டுச் செய்தியாளர் விவேக் கிருஷ்ணன்.

எந்தவொரு நெருக்கடியான சூழலிலும் தனது அதிரடி பேட்டிங் பாணியை மாற்றிக்கொள்ளாதவர் விரேந்தர் சேவாக். ஆனால், ஆர்யவீர், சூழலுக்கு ஏற்ப விளையாடும் வகையில் தன்னைத் தகவமைத்து வருகிறார். U19 ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் அவர் எடுத்த 160 ரன்கள் இதற்கு ஓர் உதாரணம்.

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் தனது முதல் ரன்னை எடுப்பதற்கு 14 பந்துகளை ஆர்யவீர் எடுத்துக்கொண்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டிய அவர், 69 பந்துகளில் அரைசதத்தையும், 131 பந்துகளில் சதத்தையும் எட்டினார். சதத்தை எட்டிய பிறகு 37 பந்துகளில் 60 ரன்களை குவித்த அவர் இந்திய அணி 309 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரைப் பதிவுசெய்ய உதவினார்.

லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் 160 ரன்கள் எடுத்த ஆர்யவீர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 51 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு போட்டிகளுமே இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்த போட்டிகள்.

இறுதிப்போட்டியில் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே ஆர்யவீரின் கையில் பலத்த அடி ஏற்பட்டது. ஆனால், வலியைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடி அரைசதம் அடித்தார்.

"பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய போட்டியில் விரைவில் ஆட்டமிழந்ததால், இறுதிப்போட்டியில் ரன்கள் குவிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால், எனது கையில் அடிபட்டிருந்தபோதும் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் தொடர்ந்து களத்தில் நின்றால் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்பது எனக்குத் தெரியும்," என்று போட்டி முடிந்தபிறகு பேசினார் ஆர்யவீர் சேவாக்.

ஆர்யவீருக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் ரசிகர்கள்

ஆர்யவீர் சேவாக், விரேந்தர் சேவாக், இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட், ஆசிய கோப்பை

U19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் எட்டு ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 1 விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், இன்னிங்ஸின் கடைசி பந்தில் பவுண்டரி விளாசிய மொஹித் உல்வா ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார்.

ஆட்டம் முடிந்த பிறகு, ஆர்யவீர் தனது தந்தை விரேந்திர சேவாக்குடன் வீடியோ காலில் பேசினார். அப்போது போட்டியின் கடைசிக் கட்டத்தில் நிலவிய பதற்றம் குறித்து இருவரும் உரையாடினர்.

"கடைசி ஓவரில் எங்களுக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டன. ’ஒரு பவுண்டரியாவது அடித்தால் ஏதாவது ஒன்று நடக்கும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அது நடந்துவிட்டது" என்று தனது தந்தை சேவாக்கிடம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் ஆர்யவீர் சேவாக்.

"நான் பேட்டிங் செய்தபோது பாகிஸ்தான் ரசிகர்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர். அது அற்புதமான அனுபவம்" என்றும் கூறினார் அவர்.

ஆர்யவீர் சேவாக், விரேந்தர் சேவாக், இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட், ஆசிய கோப்பை
படக்குறிப்பு, U19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 61 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த ஆர்யவீர் சேவாக்

இந்த உரையாடலை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சேவாக், விருதுகள், ரன்கள், கோப்பைகளைவிட இதுபோன்ற தருணங்களே ஒரு தந்தையாக தனக்கு முக்கியமான நினைவுகளாக எஞ்சியிருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.

ஆர்யவீர் சேவாக், ஒரு கவனிக்கப்பட வேண்டிய திறமையாளர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

”U19 ஆசியக் கோப்பையின் தொடர் நாயகன் விருதுக்கு ஆர்யவீர் சேவாக் தகுதியானவர். இறுதிப் போட்டியில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் தொடர்ந்து ரன் குவித்துவருகிறார். தொடர் முழுவதும் தனது அணிக்காக அவரது பங்களிப்பு மகத்தானதாக இருந்தது. அவரது பேட்டிங்கில் வீரேந்தர் சேவாக்கின் சாயல் தெரிகிறது. அவருடைய அடுத்தக்கட்ட வளர்ச்சியைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்." என்று தனது யூடியூபில் பேசியுள்ளார்.

பிராட்மேன் மகன் முதல் சச்சின் மகன் வரை

'லிட்டில் மாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் நிலையான இடம்பிடிக்க போராடி வருகிறார்.
படக்குறிப்பு, அர்ஜுன் டெண்டுல்கர்

கிரிக்கெட் ஜாம்பவான்களின் வாரிசுகள் தமது பெற்றோரின் பாரம்பரியத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை கடந்தகால வரலாறு உணர்த்துகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடியுள்ள நவாப் இஃப்திகார் அலி பட்டோடியின் மகன் மன்சூர் அலி கான் பட்டோடி, இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் லாலா அமர்நாத்தின் மகன்கள் மொஹிந்தர் அமர்நாத், சுரேந்தர் அமர்நாத் இருவரும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர்.

இந்தியாவின் தலைசிறந்த தொடக்க பேட்டர்களில் ஒருவரான கவாஸ்கரின் மகன் ரோஹன் கவாஸ்கர் 11 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

'லிட்டில் மாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் நிலையான இடம்பிடிக்கவே இன்னும் போராடி வருகிறார்.

தந்தையின் துறையில் மகன் நுழைவது ஒரே நேரத்தில் சாபமும் வரமும் என்கிறார் மூத்த கிரிக்கெட் எழுத்தாளர் சுரேஷ் மேனன்.

"டான் பிராட்மேனின் மகன் ஒரு கிரிக்கெட் வீரர் அல்லர். ஆனாலும், தன் பெயரை 'பிராட்சென்' என மாற்றிக்கொண்டார். கிரிக்கெட் வீரரின் வாரிசு என்ற அடையாளம் ஆரம்பத்தில் பல கதவுகளைத் திறந்துவிடும். ஆனால், ஒருகட்டத்துக்கு மேல், அந்த இளைஞர் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்," என்கிறார் அவர்.

"ஒவ்வொரு தந்தையும் தனது மகன் தன்னைவிட உயர்ந்த இடத்தை அடைய வேண்டும், தன்னைவிடச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று வெளிப்படையாகவோ அல்லது மனதுக்குள்ளோ விரும்புவார். ஆனால் விளையாட்டில் மிகச் சிலரே அப்படிச் சாதிக்கிறார்கள்." என்கிறார் சுரேஷ் மேனன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு