திமுக தனது முடிவை மாற்ற மறுப்பு: சோனியா, ராகுலை சந்தித்த பிறகு தொகுதி மறுவரையறை பற்றி ஸ்டாலின் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வந்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிறகும் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்ற மறுத்துள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'மசோதாவை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. வந்திருந்த தலைவர்களிடம் வேறு மாற்று திட்டம் இல்லை." என்றார். என்ன நடந்தது?
தொகுதி மறுவரையறை விஷயத்தில் மக்களவையில் 22 எம்பிக்களை கொண்டுள்ள திமுகவின் முடிவு தேசிய அரசியலின் ஒட்டுமொத்த கவனத்தையும் சென்னையை நோக்கி திருப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக இன்று சென்னை வந்தனர். அவர்கள் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தனர். சோனியா உள்ளிட்ட தலைவர்களை வாசல் வரை வந்து வரவேற்ற ஸ்டாலின், ராகுல் காந்தியை ஆரத்தழுவினார்.
ஒருமணிநேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு நிறைவடைந்து சுமார் 6 மணியளவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஸ்டாலின் இல்லத்திலிருந்து புறப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?
தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மமதா பானர்ஜி, எம்.ஏ.பேபி, மூன்று மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இன்று என்னை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகளை என்னிடம் எடுத்து சொன்னார்கள். திமுகவின் கோரிக்கைகள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர்களிடம் சொன்னேன். அவர்களும் வேறு சில விஷயங்களை பேசினார்கள். நாங்கள் அவற்றை கேட்டுக்கொண்டோம். இப்போது இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்தின் அரசியல் வலிமைக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை கூட இழந்துவிடுவோம். இதை தடுக்கவோ, தவிர்க்கவோ இரண்டில் மூன்று பங்கு நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை.
1971ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தாலும் தமிழகம் பாதிக்கப்படும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். தென் மாநில கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். எனவே, மசோதாவை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. வந்திருந்த தலைவர்களிடம் வேறு மாற்று திட்டம் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வலிமையை காக்க வேண்டும். இதில் ஆபத்தான முடிவை எடுக்க முடியாது." என்றார்.
இந்த சந்திப்பையடுத்து கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, "அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் எங்களின் ஒரே நிலைப்பாடு தமிழ்நாட்டுக்கே முன்னுரிமை என்பதுதான்" என தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதற்கு ஆதரவை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாட்டின் நலனையும் தமிழ்மக்களின் நலனையும் முதன்மையாகக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு முடிவையும் திமுக எடுத்துள்ளதாக கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த பாதையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
ராகுல் கூறியது என்ன?
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "தொகுதி மறுவரையறை மசோதா பற்றிய எங்களின் பார்வையை மு.க.ஸ்டாலினிடம் கூறினோம். இந்த மசோதா நிறைவேறின ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்லாமல், தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு பாதிக்கப்படும். பாஜக நினைப்பதுபோன்று 850 தொகுதிகளாக நாடாளுமன்றத்தை மறுவடிவமைத்தால் இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அதனால், பாஜக நினைப்பதை செய்வதற்கு திமுக அனுமதிக்கக் கூடாது. மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை காக்க வேண்டும்." என்றார்.

பட மூலாதாரம், ANI
அண்ணாமலை
'வீ த லீடர்ஸ்' அமைப்பின் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"திமுக தலைவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்கூட்டியே வந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக எப்படி அரசியல் செய்ய வேண்டும் என தெரியாமல் காங்கிரஸ் செய்கிறது. இந்திய அரசியல் நேற்றிலிருந்து மாறிவிட்டது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பாஜகவின் திட்டம் அல்லது மசோதாவை ஆதரிக்கிறது என்றால் தமிழகம், இந்திய அரசியல் மாறிவிட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதை திமுக தான் முடிவு செய்கிறது. முன்னாள் திமுக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை உள்ளிட்ட வழக்குகள் இனி இருக்காது என்ற நிலை வரும், இவற்றையெல்லாம் நாம் பார்ப்போம். அதற்கான விலையை திமுக வாங்கிவிட்டது." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































