சீன கப்பல்களை அமெரிக்கா தடுக்குமா? இரான் போரில் சீனாவின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
- பதவி, பாதுகாப்பு செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இரான் போரில் சீனாவின் பங்கு என்ன? அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஒருவேளை ராணுவ ரீதியாகவும் சீனாவுக்கு நிச்சயமாக ஒரு பங்கு இருக்கிறது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனா, வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தியைப் பெருமளவில் இறக்குமதி செய்கிறது. குறிப்பாக இரானிடம் அதிகம் வாங்குகிறது.
உண்மையில், இரான் என்று வரும்போது, அதன் எண்ணெய்க்கு மிகப்பெரிய வாடிக்கையாளர் சீனாதான்.
எனவே, வளைகுடாவில் இருந்து வரும் ஏற்றுமதியில் எந்தவிதமான தடையோ அல்லது குறைபாடோ ஏற்படுவதை சீனா சிறிதும் விரும்பாது.
அரசியல் ரீதியாக, சீனா திரைக்குப் பின்னால் ஒரு முக்கியப் பங்காற்றியிருக்க வாய்ப்புள்ளது.
இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரானுக்கு சீனா உதவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, நிச்சயமாக சீனா இரானின் ஒரு நட்பு நாடாகும்.
ஆனால் ராணுவ ரீதியாக, இங்கு ஒரு மோதல் புள்ளி உருவாக வாய்ப்புள்ளது.
அதை அமெரிக்காவோ அல்லது சீனாவோ விரும்பவில்லை. இருப்பினும், அது ஒரு உண்மையான அபாயம்.
இரான் துறைமுகங்களுக்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து கப்பல்கள் மீதும் அமெரிக்கா ஒரு முற்றுகையை விதித்துள்ளது.
ஆனால், அந்த வர்த்தகத்தில் சில சீன வர்த்தகமாக இருந்தால் என்ன செய்வது? அது ஒரு சீனக் கொடி ஏந்திய கப்பலாக இருந்தால் அல்லது அதற்கு ஒரு சீனப் போர் கப்பல் பாதுகாப்பு அளித்து வந்தால் என்ன நடக்கும்?
ஒரு சீனப் போர் கப்பலையோ அல்லது ஒரு சீனக் கப்பலையோ அமெரிக்கா வலுக்கட்டாயமாகப் பிடிப்பதை நாம் பார்க்கப்போவதில்லை.
அது சீனாவுடன் ராணுவ மோதலை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டது. இவை அனைத்திலும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு சீனா மிகப்பெரியது. அதற்கு வளைகுடாவுக்கு அருகிலேயே ஜிபூட்டியில் ஒரு ராணுவத் தளம் உள்ளது.
இது இதற்கு முன்னரும் வர்த்தக கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளது. ஆனால் இது உண்மையில் ராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியானது. டொனால்ட் டிரம்ப் இதை அறிவார். இங்கு பல்வேறு காரணிகள் செயல்படுகின்றன. சீனா முக்கியமானது. இந்த வளைகுடா மோதலில் அதற்கு ஒரு பங்கு இருக்கிறது.


பட மூலாதாரம், Reuters
அமெரிக்கா - இரான் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கத் தயாரா?
அமெரிக்கா - இரான் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஒரு விருப்பமும் ஆர்வமும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டுமே இதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தேடுகின்றன.
தங்களுக்கு அது அவசியமாகத் தேவை என்று அவர்கள் பகிரங்கமாகச் சொல்லப் போவதில்லை, ஆனால் இருவருமே தங்களால் இயன்றவரை கடுமையானவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
பொருளாதார ரீதியாக இரான் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிக வலியைத் தாங்க முடியும், ஏற்கனவே நிறைய வலிகளைத் தாங்கியும் உள்ளது. ஆனால் அதன் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை, அதன் கடல் வழி வர்த்தகத்தை முடக்குவது இரான் மீதான அழுத்தத்தை உண்மையில் அதிகரிக்கச் செய்கிறது.
ஆனால் டொனால்ட் டிரம்ப் பக்கமும் அழுத்தங்கள் உள்ளன.
இரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா நீக்காவிட்டால், செங்கடலில் கப்பல் போக்குவரத்து இலக்கு வைக்கப்படும் என இரான் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன் கூட்டாளியான ஹூத்தி அமைப்பினர் மூலம் இரான் இதை செய்யலாம்.
வாய்ப்பு கிடைத்தால் அமெரிக்க ராணுவத்தைத் தாக்கும் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் திறனை இரான் தன்னகத்தே வைத்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் மிக அதிகமாக இருப்பதும், அது உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. மேலும் பலர் வெள்ளை மாளிகையைப் பார்த்து, இது உங்கள் தவறு என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
இரான் அதன் அணுசக்தி திட்டங்கள் குறித்து ஒரு பெரிய கேள்விக்குறியைக் கொண்டிருக்கலாம். ஆனால் பிப்ரவரி 28 அன்று இந்தப் போரைத் தொடங்கியது அமெரிக்காவும் இஸ்ரேலும்தான்.
சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் சந்தித்தபோது, அணுசக்தி செறிவூட்டல் தொடர்பான ஓர் ஒப்பந்தத்திற்கு அவர்கள் மிக நெருக்கமாக வந்ததாக நாம் புரிந்துகொள்கிறோம். இது தொடர்ந்து நீடிக்கும் ஒரு பிரச்னை, அவர்களால் இதைத் தீர்க்க முடியும். ஆனால் எந்தத் தரப்பு எவ்வளவு நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கத் தயாராக உள்ளது என்பதுதான் கேள்வி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































