நட்சத்திர வீரர்கள் நிறைந்த மும்பை ஹாட்ரிக் தோல்வி ஏன்? கேப்டன்சி பற்றி எழும் கேள்விகள்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
மும்பை இந்தியன்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியைத் தோற்றிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஹர்திக் பாண்டியாவின் அணி.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் தங்களின் மூன்றாவது இடத்தை தக்க வைத்தியிருக்கிறது நடப்பு சாம்பியன் ஆர்சிபி.
மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது. மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 222 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை இந்தியன்ஸின் பேட்டிங் யூனிட் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டது. பொதுவாகவே ஒரு மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்யும் அணிக்கு ஆரம்பம் முதலே நெருக்கடி இருக்கும். இருந்தும் அவர்கள் ஓரளவு போராடினார்கள். திலக் வர்மா, நமன் திர் தவிர்த்து அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்தார்கள்.
ஆனால், பந்துவீச்சில் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அனுபவமிக்க பெரிய பெயர்கள் நிறைய இருந்தும் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர்களது பந்துவீச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது அவர்களின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோற்றதற்கான 5 காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், ANI
காரணம் 1: பவர்பிளே பிரச்னை
வீரர்களின் திறமை மற்றும் அனுபவத்தை வைத்துப் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் தான் சிறந்த பவர்பிளே பௌலர்களைக் கொண்ட அணி. தீபக் சஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா என பவர்பிளேவில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பௌலர்கள் அந்த அணியில் நிறைந்திருக்கிறார்கள். போக மிட்செல் சான்ட்னரும் கூட இருக்கிறார்.
இத்தனை உலகத்தர பௌலர்கள் இருந்தும் இந்த சீசன் மும்பை இந்தியன்ஸால் பவர்பிளேவில் சோபிக்க முடியவில்லை. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி பவர்பிளேவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறது. பவர்பிளேவில் வீசிய 21.2 ஓவர்களில் (ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் பவர்பிளே 3.2 ஓவர்கள் மட்டுமே) மூன்றே மூன்று விக்கெட்டுகள். ஸ்டிரைக் ரேட் - 43.
அதாவது பவர்பிளேவில் ஒவ்வொரு 43 பந்துக்கும் தான் ஒரு விக்கெட் வீழ்த்துகிறது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனில் பவர்பிளேவில் இரண்டாவது மோசமான பௌலிங் ஸ்டிரைக் ரேட் கொண்டிருக்கும் அணி மும்பை இந்தியன்ஸ் தான்.
இந்த அணியின் பவர்பிளே பௌலிங் தடுமாற்றம் கடந்த சீசன் தொடக்கத்திலுமே இருந்தது. இந்த சீசனும் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பிரச்னை இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
ஆர்சிபி ஓப்பனர் ஃபில் சால்ட் கடந்த சில மாதங்களாகவே நல்ல ஃபார்மில் இல்லை. இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளிலும் சேர்த்தே அவர் 51 ரன்கள் தான் அடித்திருந்தார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பவர்பிளே தடுமாற்றம் ஃபில் சால்ட் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கு உதவியது. பவர்பிளே முடிவிலேயே அவர் 213.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 47 ரன்கள் விளாசிவிட்டார்.
சால்ட்டுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும்போது அவர் அதைப் பெரிய் இன்னிங்ஸாக மாற்றிவிடுவார். அதுமட்டுமல்லாமல் எதிரணி பௌலர்களின் நம்பிக்கையையும் ஒட்டுமொத்தமாகக் குலைத்துவிடுவார். வான்கெடேவில் அதை மும்பைக்குச் செய்த அவர், 36 பந்துகளிலேயே 78 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

பட மூலாதாரம், Getty Images
காரணம் 2: ரஜத் பட்டிதார் ஆடிய 20 பந்துகள்
விராட் கோலி, ஃபில் சால்ட் கூட்டணி ராயல் சேலஞ்சர்ஸுக்கு மிகச் சிறந்த தொடக்கம் கொடுத்தாலும், கேப்டன் ரஜத் பட்டிதார் ஆடிய 20 பந்து இன்னிங்ஸ் தான் ஆர்சிபி இன்னிங்ஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.
11வது ஓவரின் கடைசிப் பந்தில் களமிறங்கிய பட்டிதார், முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார். அதன்பிறகு அவர் சந்தித்த ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரி அடிக்கும் நோக்கத்தோடு தான் அவர் விளையாடினார். 17 பந்துகளில் அரைசதத்தை அவர் நிறைவு செய்த அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவர் அதிரடியாக ஆடியது ராயல் சேலஞ்சர்ஸின் இன்னிங்ஸில் ஏற்படுத்திய தாக்கத்தை நன்கு ஆராயவேண்டும். பட்டிதார் களமிறங்கியபோது விராட் கோலி வேகமாக ஆடத் தடுமாறிக் கொண்டிருந்தார். அவர் காலில் பிரச்னை இருந்ததால், அவரால் பெரிதாக அதிரடி காட்ட முடியவில்லை. அது அந்த கட்டத்தில் அணியின் ரன்ரேட் வெகுவாகக் குறைவதற்குக் காரணமாக அமைந்திருக்கும்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக மூன்றாவது பேட்டராகக் களமிறங்கிய பட்டிதார், ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தார். முந்தைய ஓவர்களில் மெல்ல குறைந்துகொண்டிருந்த ரன்ரேட்டை இவர் உடனடியாக அதிகப்படுத்தினார்.
சொல்லப்போனால், பட்டிதார் அவுட் ஆன பிறகு கூட ஆர்சிபி அணியின் ரன்ரேட் சற்று குறைந்தது. கடைசி 4 ஓவர்களில் அந்த அணி 46 ரன்கள் தான் எடுத்தது. அதனால், ஒருகட்டத்தில் 250 - 260 ரன்கள் வரை எடுக்கும் என்று கருதப்பட்ட அந்த அணி 240 ரன்கள் தான் எடுத்தது.
ஆர்சிபி அணியின் இந்த ரன்ரேட் தரவு அதை இன்னும் தெளிவாக உணர்த்தும்
- பட்டிதார் களமிறங்கும் முன் - ஓவர் 10.5 வரை - ரன்ரேட்: 11.07
- பட்டிதார் அவுட் ஆன பிறகு - ஓவர் 16 முதல் 20 வரை - ரன்ரேட்: 11.50
- பட்டிதார் ஆடியபோது - ஓவர் 10.6 முதல் 15.6 வரை - ரன்ரேட்: 14.32
இறுதியில் அந்த அணி 18 ரன்களில் தான் வெற்றி பெற்றிருக்கிறது எனும்போது, அந்த 20 பந்துகள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

பட மூலாதாரம், ANI
காரணம் 3: பின்தங்கிய ஸ்பின்னர்கள்
ஆர்சிபி அணிக்கு அந்த பெரிய ஓவர்கள் வந்தது பெரும்பாலும் ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான். மார்க்கண்டே வீசிய இரண்டு ஓவர்களுமே தலா 20 ரன்களுக்குச் சென்றன. சான்ட்னர் தன் முதல் ஓவரில் 22 ரன்கள் கொடுத்தார். சான்ட்னர் அதன்பிறகு ஓரளவு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலும், அவரால் சவால் கொடுக்க முடியவில்லை.
இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் ஸ்பின்னர்கள் 83 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். எகானமி - 13.83. மிடில் ஓவர்களில் அவர்களால் ஆர்சிபி பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை.
அதேசமயம் ஆர்சிபி ஸ்பின்னர்கள் இந்தப் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தினார்கள். 4 ஓவர்கள் வீசிய குருனால் பாண்டியா 26 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 462 ரன்கள் எடுக்கப்பட்ட இந்தப் போட்டியில் 7க்கும் குறைவான எகானமியில் பந்துவீசிய ஒரே பௌலர் இவர்தான்.
இன்னொரு ஸ்பின்னர் சுயாஷ் ஷர்மா 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்தார். அவர் அதிகம் ரன் கொடுத்திருந்தாலும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார். அவர் தன் முதல் ஓவரிலேயே ரியான் ரிக்கில்டன், திலக் வர்மா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்த, அது அவர்களுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது.

பட மூலாதாரம், ANI
இந்தப் போட்டியின்போது வர்ணனை செய்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆர்சிபி இன்னிங்ஸில் கிடைத்த பெரிய ஓவர்கள் மும்பை இந்தியன்ஸுக்குக் கிடைக்கவில்லை என்றும், மும்பை பின்தங்கியதற்கு அது முக்கியக் காரணமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இதுபோன்ற பெரிய ஸ்கோர் எடுக்கப்படும் போட்டிகளில் எப்படியும் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்துவிடும். ஆனால், 20 ரன்கள் வரை கிடைக்கும் சில பெரிய ஓவர்கள் தான் ஸ்கோர் பெரிய அளவுக்கு செல்வதற்கு முக்கியக் காரணமாக அமையும்.
ராயல் சேலஞ்சர்ஸ் இன்னிங்ஸில் அப்படியான பெரிய ஓவர்கள் நிறையவே கிடைத்தன. சான்ட்னர் வீசிய ஐந்தாவது ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட்டது. மயாங்க் மார்க்கண்டே வீசிய 8வது மற்றும் 12வது ஓவர்களில் தலா 20 ரன்கள் எடுக்கப்பட்டன. ஷார்துல் தாக்கூர் வீசிய 13வது ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 240 என்ற மிகப் பெரிய ஸ்கோர் எடுப்பதற்கு இந்த ஓவர்கள் முக்கியக் காரணமாக அமைந்தன.
இது ஒருபக்கம் மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சு பிரச்னையை சுட்டிக்காட்டுகிறது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்யும்போது அவர்களுக்கு இப்படியான பெரிய ஓவர்கள் கிடைக்கவில்லை. ஆட்டத்தில் முற்றிலுமாகப் பின்தங்கிவிட்ட பிறகு 18வது ஓவர் (21 ரன்கள்) மற்றும் 20வது ஓவர் (26 ரன்கள்) ஆகியவற்றில் மட்டுமே மும்பை 20+ ரன்களை எட்டியது. இது மிகவும் தாமதமாக வந்துவிட்டதால் மும்பையால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை.
ஒருவேளை அதுபோன்ற ஓவர்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தால் அது ஆர்சிபி அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திருக்கும்.
காரணம் 4: விக்கெட் எடுக்காத பும்ரா
மும்பை இந்தியன்ஸால் பவர்பிளேவில் விக்கெட் எடுக்க முடியவில்லை. அவர்கள் ஸ்பின்னர்களாலும் பெரும் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. இப்படியிருக்கும் போது அவர்கள் பெரிதும் நம்பியிருக்கும் ஜஸ்ப்ரித் பும்ராவும் விக்கெட் எடுக்கத் தவறினால்?
மும்பை இந்தியன்ஸுக்கு இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய தேதிக்கு உலகின் சிறந்த பௌலராகக் கருதப்படும் பும்ராவால் இந்த சீசனில் இன்னும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. சொல்லப்போனால், அவர் கடைசியாக விளையாடிய 5 ஐபிஎல் போட்டிகளில் அவர் 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
அதற்காக பும்ரா சரியாகப் பந்துவீசவில்லை என்றில்லை. அவர் ஓரளவு சிக்கனமாகத்தான் பந்துவீசுகிறார். இந்தத் தொடரில் அவருடைய எகானமி 8.2 தான். இவர் ஓவரில் எதிரணி பேட்டர்கள் முன்பைப் போல் முழுமையாக டிஃபன்ஸிவாக ஆடுவதில்லை என்றாலும், இன்னும் பும்ராவுக்கு எதிராக அவர்கள் சற்று கவனமாகவே விளையாடுகிறார்கள். இருந்தாலும், பும்ராவால் விக்கெட் எடுக்க முடியாதது மும்பை இந்தியன்ஸை பாதிக்கிறது.

பட மூலாதாரம், ANI
பும்ராவாலும் விக்கெட் வீழ்த்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுவதால் எதிரணிகளின் பார்ட்னர்ஷிப்களை உடைப்பது மும்பைக்குக் கடினமாகிறது. மற்ற பௌலர்கள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தத் தவறும்போது பும்ரா ஓவரில் சற்று குறையும் ரன்ரேட் அடுத்த ஓவர்களிலேயே மறுபடியும் எகிறிவிடுகிறது. பும்ரா பந்துவீசாத கட்டத்தையும் எதிரணிகள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
உதாரணமாக, இந்த ஆர்சிபி போட்டியில் பவர்பிளேவில் சால்ட் அதிரடி காட்ட, எப்படியாவது விக்கெட் எடுக்கவேண்டும் என்ற நெருக்கடியில் பும்ராவின் 2 ஓவர்களை அங்கேயே பயன்படுத்தினார் ஹர்திக். டெத் ஓவர்களில் டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட் போன்றவர்களுக்கு எதிராக எப்படியும் பும்ராவின் மீதமிருக்கும் 2 ஓவர்கள் தேவை என்பதால், அவரை மிடில் ஓவர்களில் ஹர்திக்கால் பயன்படுத்தவே முடியாது. இந்த சூழ்நிலை, பட்டிதார் பட்டாசு போல் வெடித்துக் கொண்டிருந்த போது பும்ராவைப் பற்றி நினைக்கக் கூட முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது.
காரணம் 5: ஹர்திக் பாண்டியா கேப்டன்சி
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீதும் பல கேள்விகள் எழுந்தன. பந்துவீச்சின் போது அவர் எடுத்த ஒருசில முடிவுகள் மும்பை இந்தியன்ஸுக்குப் பாதகமக அமைந்துவிட்டன.
இந்தப் போட்டிக்குப் பிறகு பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோமஹேஷ், ஹர்திக் எடுத்த ஒருசில முடிவுகளை விமர்சித்தார்.
"ரஜத் பட்டிதார் களமிறங்கியவுடன் அடுத்த ஓவரிலேயே மயாங்க் மார்க்கண்டேவுக்கு ஓவர் கொடுத்தது தவறான முடிவு. பட்டிதார் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகவும் அதிரடியாக ஆடக் கூடியவர். அப்படியிருக்கும் போது ஒரு ஸ்பின்னரை அந்த கட்டத்தில் பந்துவீசச் செய்யும் முடிவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஓவரில் 20 ரன்கள் வர, ஆட்டம் அப்போதே ஆர்சிபி பக்கம் நகரத் தொடங்கியது" என்று கூறினார் யோமஹேஷ்.
சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் பட்டிதார் களமிறங்கியதும் நூர் அஹமதுக்கு ஓவர் கொடுத்த ருதுராஜ் கெய்க்வாடின் முடிவையும் கூட யோமஹேஷ் அப்போது விமர்சித்திருந்தார்.

பட மூலாதாரம், ANI
அதேபோல், இந்தப் போட்டியில் ஷார்துல் தாக்கூரையும் மிகவும் தாமதமாகத்தான் பயன்படுத்தினார் ஹர்திக் பாண்டியா. ராயல் சேலஞ்சர்ஸ் ஓப்பனர்கள் தொடர்ச்சியாக ரன் குவித்துக் கொண்டிருக்க, 11வது ஓவரின்போது தான் ஷார்துலை முதலில் பயன்படுத்தினார் ஹர்திக்.
இந்த முடிவு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய யோமஹேஷ், "ஷார்துல் தாக்கூர் விக்கெட் எடுத்துக் கொடுக்கும் ஒரு பௌலர். இதைப் பலமுறை செய்திருக்கிறார். இந்தப் போட்டியிலும் கூட பந்துவீசிய முதல் ஓவரே அவர் விக்கெட் எடுத்துக் கொடுத்தார். ஆனால், அவரை ஏன் 11வது ஓவர் வரை ஹர்திக் பயன்படுத்தவில்லை என்று எனக்குப் புரியவில்லை. இந்த முடிவு போட்டியில் பெரும் தாக்கம் ஏற்படுத்திவிட்டது" என்று கூறினார்.
ஹர்திக்கின் பௌலிங் மாற்றங்கள் மட்டுமல்லாமல், ஃபீல்டிங் செட் செய்ததுமே கூட சற்று பிரச்னையாக இருந்ததாக யோமஹேஷ் கூறினார். "இந்த ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஃபீல்டிங் செய்யும்போது சற்று விரக்தியாக இருப்பதுபோல் தெரிந்தது. அவருக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே சூடான வாக்குவாதங்கள் நடந்ததைப் பார்க்க முடிந்தது. பௌலிங் மாற்றங்கள் மற்றும் ஃபீல்ட் பொசிஷன்களில் ரோஹித் வழக்கத்தை விட ஜாஸ்தியாக தலையிட்டது போலத் தோன்றுகிறது." என்று கூறினார்.
மும்பை இந்தியன்ஸின் முன் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்திருப்பதாகவும் யோமஹேஷ் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































