ஐபிஎஸ் அதிகாரியிலிருந்து அரசியல்வாதி வரை - அண்ணாமலையின் பயணம் எப்படிப்பட்டது?

Annamalai, IPS, BJP, NewParty

பட மூலாதாரம், Annamalai/X

படக்குறிப்பு, பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி தமிழகத்தில் அரசியல் தலைவராக வலம் வரும் அண்ணாமலையின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று சென்னையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இன்னும் 2 நாட்களில் எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறேன்" என்று அண்ணாமலை கூறினார்.

இந்த நிலையில், ஜூன் 2-ஆம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்ணாமலை சந்தித்தது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணாமலையின் அரசியல் பயணத்தில் ஏதேனும் மாற்றங்கள் வருமா, அப்படியே தொடருமா என்ற எதிர்பார்ப்புகளும் எழத்துவங்கியுள்ளன.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜக மாநிலத்தலைவராக மேற்கொண்ட நடவடிக்கைகளால், அக்கட்சி தமிழகத்தில் கவனம் ஈர்த்து வந்த நிலையில், அவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. தேர்தலில் அந்த கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அவர் தனிக்கட்சி துவங்கப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தலைவர் பதவி

Annamalai, IPS, BJP, NewParty

பட மூலாதாரம், Annamalai

அண்ணாமலையின் சுயசரிதைப் புத்தகமான 'காக்கிக்கு அப்பால்' நூலில் குறிப்பிட்டுள்ளபடி, அண்ணாமலையின் பூர்வீகம், கரூரில் உள்ள தொட்டம்பட்டி கிராமம்.

பெற்றோர் விவசாயப் பின்புலத்தைக் கொண்ட குப்புசாமி– பரமேஸ்வரி தம்பதியர். கோவையிலுள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த அண்ணாமலை, லக்னோவிலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டில் கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கர்நாடகாவின் கார்கலாவில் ஏஎஸ்பி பணியில் சேர்ந்த அண்ணாமலை, உடுப்பி, சிக்மகளூரில் காவல் கண்காணிப்பாளர், பெங்களூரு தெற்கு காவல்துறை துணை ஆணையர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது காவல்துறை பணியை அவர் ராஜினாமா செய்தார்.

காவல் பணியில் சேர்வதற்கு தனக்கு தூண்டுகோலாக இருந்தவர், தமிழக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் என்று கூறிவந்த அண்ணாமலை, ''ஆறு மாதங்கள் நன்றாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக'' தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

தனக்கு பிடித்த ஐபிஎஸ் மதுக்கார் ஷெட்டியின் இறப்பு தனது சொந்த வாழ்க்கையை சுய ஆய்வுக்குட்படுத்தி பார்க்க தூண்டியதாகத் தெரிவித்திருந்தார் அண்ணாமலை. அவருடைய ராஜினாமா குறித்து, கர்நாடகா மக்கள் சமூக ஊடகங்களில் தங்களுடைய வருத்தங்களை பகிர்ந்திருந்தனர்.

பணியை விட்டு விலகிய பின், தமிழகத்தில் தனது சொந்த ஊருக்கு வந்த அண்ணாமலை, விவசாயத்தில் இறங்கினார். பின்பு 'நாங்கள் தலைவர்கள்' என்ற அமைப்பைத் துவக்கினார்.

அத்துடன் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் சார்ந்து, ஊடகங்களில் பேசத் துவங்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் அண்ணாமலை. கட்சியில் இணைந்தவுடனே அவருக்கு மாநில துணைத் தலைவர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, அதில் தோல்வியடைந்தார். பின்னர் அதே ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அண்ணாமலை. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஓரிரு மாதங்களில் இந்தப் பதவிக்கு வந்த அண்ணாமலை, அதற்குப்பின்பு திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் விமர்சிக்கத் துவங்கினார்.

அதிர்வை ஏற்படுத்திய திமுக கோப்பு

Annamalai, IPS, BJP, NewParty, Press meet

பட மூலாதாரம், Annamalai

படக்குறிப்பு, பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு. (கோப்புக்காட்சி)

அண்ணாமலையின் பிரஸ்மீட் இல்லாத நாட்களே இல்லை எனும் அளவுக்கு அடிக்கடி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கிவந்தார்.

அப்போது பாஜகவில் இருந்த நடிகர் ராதாரவி, ''டூ மச் ஆஃப் பிரஸ்மீட். இது நல்ல போக்கில்லை!'' என்று வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு, அவருடைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அனுதினமும் அடிக்கடியும் நடந்து வந்தது.

திமுக அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கி, அடுத்தடுத்து 'டிஎம்கே ஃபைல்ஸ்' என்று அவர் வெளியிட்ட சில ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

டிஆர் பாலு, கேஎன் நேரு, செந்தில்பாலாஜி, பொன்முடி என பலரைப் பற்றியும் பல தகவல்களை வெளியிட்டார். ஆனால் அவையனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் திமுகவினர் மறுத்துவந்தனர். அண்ணாமலை மீது ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு, மானநஷ்ட வழக்கும் தொடுக்கப்பட்டது. அவர் மாநிலத்தலைவராக இருக்கும் வரை திமுக அமைச்சர்களுக்கும், அவருக்குமான மோதல் தொடர்ந்து கொண்டிருந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் ''என் மண் என் மக்கள்'' என்ற பெயரில், தமிழகத்தில் யாத்திரை மேற்கொண்டார்,

அதேநேரத்தில் அவருடைய நடவடிக்கைகளுக்கு, மிகக்கடுமையான எதிர்வினைகளும் வரத் துவங்கின. குறிப்பாக, அவர் அணிந்திருந்த ரஃபேல் வாட்ச் குறித்த சர்ச்சை பெரியளவில் வெடித்தது.

செய்தியாளர் சந்திப்பில் ரஃபேல் வாட்ச் குறித்து பேசிய அண்ணாமலை, "500 சிறப்பு வாட்ச்களில் என்னுடையது 149வது வாட்ச். என் உடலில் உயிர் உள்ளவரை இந்த வாட்சை அணிந்திருப்பேன். ரஃபேல் விமானத்தின் பாகங்களை வைத்து இந்தக் கடிகாரத்தை செய்தார்கள். அந்த விமானத்தில் என்ன பாகங்கள் உள்ளனவோ, அவை இந்தக் கடிகாரத்தில் உள்ளன,'' என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் விலையுள்ள இந்த வாட்ச்சை அண்ணாமலை அணிந்திருப்பதாக அப்போதிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதற்கு பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே பதில் அளித்த அண்ணாமலை, ''எனது 13 ஆண்டு கால வருமான வரி விவரங்களை வெளியிடத் தயார், திமுகவினர் அவ்வாறு அவர்கள் வருமான விவரங்களை வெளியிடத் தயாரா?'' என்று சவால் விட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, ''நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? அதற்கான ரசீதை அவர் வெளியிடுவாரா?'' என்று பதில் சவால் விட்டிருந்தார்.

அதன்பின் சில மாதங்கள் கழித்து, அந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதையும் அண்ணாமலை வெளியிட்டார். அந்த ரசீது குறித்தும் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த மோதலுக்குப் பின்பே, கரூரைப் பூர்வீகமாகக் கொண்ட செந்தில் பாலாஜி – அண்ணாமலை இடையிலான மோதல் மேலும் வலுத்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரை 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. பிறகு செப்டம்பர் 2024-ல் அவர் உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதிமுகவுடன் உரசல்

திமுகவினரை மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியாக இருந்த அதிமுக மீதும் அண்ணாமலை வைத்த விமர்சனங்கள், கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்தன.

அண்ணா குறித்தும், ஜெயலலிதா குறித்தும் அவர் கூறிய கருத்துகளுக்கு எதிராக அதிமுகவினர் பெரும் போராட்டங்களை நடத்தினர். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து, காரசாரமான விமர்சனங்களை அண்ணாமலை முன் வைத்துப் பேசியது, இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசலை பெரிதாக்கியது. கடந்த 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணியில் இல்லாததற்கு இதுவும் ஒரு காரணமானது.

பிற கட்சியினர் மட்டுமின்றி, உட்கட்சிக்குள்ளும் அண்ணாமலை பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதுபற்றி அவ்வப்போது அவர் வெளிப்படையாகவும் பேசத் துவங்கினார். நடிகர் எஸ்வி சேகர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளாக இருந்த பலரும் அவருக்கு எதிராகப் பேசினர். அதற்கும் அவர் பதிலளித்தார்.

தமிழக பாஜக தலைவராக அவர் இருக்கும்போது எதிர்கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எங்குமே வெற்றிபெறவில்லை. கோவையில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தாலும், அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி, அண்ணாமலை இரண்டாம் இடத்தை பிடித்தார்.

அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி – பாஜக கூட்டணி என மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக தனித்து 11.34 சதவீதம் வாக்குகளை பெற்றது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்பு, லண்டன் சென்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து ஃபெல்லோஷிப் படிப்பை 3 மாதம் படித்தார் அண்ணாமலை.

அதிமுக தலைவர்களுக்கும், அவருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நீடித்து வந்தநிலையில் கடந்த 2025 ஏப்ரலில் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை பாஜக தலைமை நீக்கியது. அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன்பின் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது.

அதற்குப் பின் கட்சி நடவடிக்கைகளிலிருந்தும், ஊடகங்களிடம் பேசுவதிலிருந்தும் அண்ணாமலை ஒதுங்கியிருந்தார். பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, அவர் மீது ஒரு முக்கிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

கோவை தொண்டாமுத்தூரில் அவர் வாங்கிய 14 ஏக்கர் விவசாய நிலத்துக்கு சந்தை மதிப்பைவிடக் குறைவாக உள்ள அரசாங்க வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. அதை மறுத்த அண்ணாமலை, தனது தனிப்பட்ட சேமிப்பு மற்றும் கடன்கள் மூலமே இந்த நிலம் வாங்கப்பட்டதாகவும், 40 லட்ச ரூபாய்க்கும் மேல் இருந்ததாகக் கூறப்படும் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணங்கள் உரிய முறையில் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

'பரப்புரைக்கு பொறுப்பு'

Annamalai, IPS, BJP, NewParty, Agitation

பட மூலாதாரம், Annamalai

படக்குறிப்பு, பாஜக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கட்சி எனக்கு வழங்கிய பொறுப்பு, பரப்புரை செய்வது.'' என்று கூறினார்.

ஆனால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் கடந்த முறை 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த முறை ஒரே ஒரு தொகுதியில் வென்றுள்ளது.

பிபிசியிடம் பேசிய அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ''அண்ணாமலை தலைவராக இருந்தபோதுதான், கட்சியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்தனர். அதுவரை தமிழகத்தில் தன்னை ஒரு பாஜககாரன் என்று சொல்லிக்கொள்ள தயக்கம் காட்டும் நிலை இருந்தது. அதைப் பெருமையோடு சொல்லும் நிலையை அவர் ஏற்படுத்தினார்.'' என்றார்.

பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு பாஜக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஜி.கே.நாகராஜ், ''அவருடைய வெளிப்படைத் தன்மைதான் அவருடைய பலம் என்றால் அவரின் பலவீனமும் அதுதான்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு