அமெரிக்காவை முந்திய சீனா: வல்லரசுகள் மீதான உலகின் பார்வை மாறுவதாக கூறும் புதிய ஆய்வு

அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மற்ற நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்காவை விடச் சீனா குறைவாகவே தலையிடுகிறது என்று பலர் கூறுவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது
    • எழுதியவர், டெஸா வாங்
    • பதவி, ஆசியா டிஜிட்டல் செய்தியாளர், சிங்கப்பூர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உலகின் பல நாடுகளில் அமெரிக்காவை விடச் சீனா தற்போது மிகவும் நேர்மறையாகப் பார்க்கப்படுவதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) புதிய ஆய்வு கூறுகிறது. இந்த அமைப்பு இத்தகைய முடிவுகளைப் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட, எந்தவொரு அரசியல் சார்புமற்ற இந்த சிந்தனைக் குழுவின் கண்டுபிடிப்புகள், பல நாடுகளில் சீனாவைப் பற்றிய சாதகமான கருத்துகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன என்றும், அதே நேரத்தில் அமெரிக்காவைப் பற்றிய பார்வை மோசமடைந்துள்ளJ என்றும் குறிப்பிடுகின்றன.

பொதுவாக, ஆய்வில் பங்கேற்றவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீனத் தலைவர் ஷி ஜின்பிங் ஆகிய இருவர் மீதும் குறைந்த அளவிலான நம்பிக்கையையே வெளிப்படுத்தினர், இருப்பினும் டிரம்பை விட ஜின்பிங் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்.

அமெரிக்கா இன்னமும் சீனாவை விட தனிநபர் சுதந்திரங்களை மதிப்பதாகப் பார்க்கப்பட்டாலும், மற்ற நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்காவை விடச் சீனா குறைவாகவே தலையிடுவதாகப் பார்க்கப்பட்டது.

பியூ அமைப்பு பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 36 நாடுகளில் 42,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

ஆய்வில் பங்கேற்றவர்களிடம் ஒவ்வொரு வல்லரசைப் பற்றியும் தங்களுக்கு மிகச் சாதகமான, ஓரளவு சாதகமான, ஓரளவு சாதகமற்ற அல்லது மிகவும் சாதகமற்ற கருத்து உள்ளதா என்று கேட்கப்பட்டது.

ஆய்வு நடத்தப்பட்ட 36 நாடுகளில் 25 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்காவை விடச் சீனாவைப் பற்றிச் சாதகமான கருத்துகளைக் கொண்டிருப்பதாக இந்த ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் வல்லரசுகள் மீதான உலகளாவிய கருத்துகளைக் கண்காணித்து வரும் இந்த மையம், இத்தனை நாடுகளில் இத்தகையதொரு முடிவைப் பார்ப்பது இதுவே முதல் முறை என்று இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜொனாதன் ஷுல்மேன் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவைப் பற்றிய நேர்மறையான பார்வைகளில் முந்தைய வீழ்ச்சிகளை பியூ அமைப்பு பார்த்துள்ளது. 2008 இல் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தின் இறுதியிலும், 2017 இல் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் தொடக்கத்திலும் இது நிகழ்ந்தது.

அப்போது கூட, சீனாவைப் பற்றிய சாதகமான பார்வைகள் அமெரிக்காவிற்கு இணையாக அல்லது சற்று குறைவாகவே இருந்ததாக ஷுல்மேன் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஸ்பெயின், இந்தோனீசியா, இத்தாலி, கிரீஸ் மற்றும் கனடா ஆகியவை சீனாவை நோக்கி மிகப்பெரிய மாற்றங்களைக் கண்ட நாடுகளுள் அடங்கும்.

இந்த ஆண்டின் கருத்துக்கணிப்பில் ஆறு நாடுகளில் மட்டுமே அமெரிக்காவுக்கு அதிகமான ஆதரவு பதிவாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவின் தீவிர நட்பு நாடுகளாகும். போலந்து, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இந்தியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகியவையே இந்த நாடுகள்.

தனியாகப் பார்க்கையில், 20 நாடுகளில் அமெரிக்காவைப் பற்றிய சராசரி சாதகமான கருத்து சமீபத்திய ஆண்டுகளில் சீராகக் குறைந்து வருவதையும், அதேநேரத்தில் சீனாவைப் பற்றிய சராசரி சாதகமான பார்வை அதிகரித்து வருவதையும் இந்த மையம் கண்டறிந்துள்ளது.

அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா உட்பட விரிவாக்கப்பட்ட தரவுத்தொகுப்பின் அடிப்படையில், சமீபத்திய ஆண்டுகளில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகளில் சீனாவைப் பற்றிய சாதகமான கருத்துகள் அதிகரித்துள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆண்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட இத்தாலி, ஸ்பெயின், கொலம்பியா, மெக்சிகோ, இந்தோனீசியா, மலேசியா, நைஜீரியா மற்றும் துருக்கி உள்ளிட்ட சில இடங்களில் சீனாவைப் பற்றிய நேர்மறையான பார்வைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் சீனாவைப் பற்றி நேர்மறையான பார்வைகளைக் கொண்டிருப்பதாகவும், அதேநேரத்தில் பணக்கார நாடுகள் மிகவும் எதிர்மறையான பார்வைகளைக் கொண்டிருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இந்த நடைமுறைக்கு ஒரு விதிவிலக்காகச் சிங்கப்பூர் இருந்தது, இது கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட நாடுகளிலேயே மிக அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருந்ததுடன், சீனாவை பற்றி அதிக அளவிலான நேர்மறையான தன்மையையும் கொண்டிருந்தது.

கருத்துக்கணிப்பில் சீனாவைப் பற்றிய மிகவும் நேர்மறையான - மற்றும் மிகவும் எதிர்மறையான - கருத்துகள் ஆசிய-பசிபிக் பகுதியிலிருந்து வந்தன. பாகிஸ்தானியர்களில் சுமார் 90% பேர் சீனாவை ஆதரிப்பதாகத் தெரிகிறது. அதேநேரத்தில் ஜப்பானியர்களில் 11% பேர் மட்டுமே அவ்வாறு ஆதரிக்கிறார்கள்.

அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம், Getty Images

ஜின்பிங் மற்றும் டிரம்ப்

உலக விவகாரங்களைப் பொறுத்தவரைச் சரியானதைச் செய்வார்கள் என்று ஜின்பிங் மற்றும் டொனால்ட் டிரம்ப் மீது நம்பிக்கை உள்ளதா என்றும் இந்த கருத்துக்கணிப்பு ஆய்வில் பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, இரு தலைவர்கள் மீதான நம்பிக்கை பொதுவாகக் குறைவாகவே இருந்தது. பெரும்பாலும் மதிப்பெண்கள் 50%-க்கும் குறைவாகவே இருந்தன. ஆனால் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட பல நாடுகள் டொனால்ட் டிரம்பை விட ஜின்பிங் மீது அதிக நம்பிக்கையைக் கொண்டிருக்க முனைகின்றன.

கருத்துக்கணிப்பில் ஜின்பிங்கிற்கான மிக உயர்ந்த மற்றும் மிகக் குறைந்த மதிப்பீடுகள் முறையே பாகிஸ்தான் மற்றும் ஜப்பானில் இருந்து கிடைத்தன. இது 83% மற்றும் 7% ஆக இருந்தது.

டொனால்ட் டிரம்பிற்கு மிக உயர்ந்த மதிப்பீடு பிலிப்பைன்ஸில் 68% ஆகவும், மிகக் குறைந்த மதிப்பீடு மேற்கு கரை/கிழக்கு ஜெருசலேமில் 4% ஆகவும் இருந்தது.

அவர்களது கருத்துக்கணிப்பில் பொதுவாக "மற்ற தலைவர்களைப் பற்றி இருப்பதைப் போல மக்கள் ஜின்பிங் மீது அத்தகைய வலுவான கருத்தைக் கொண்டிருக்கவில்லை" என்று ஷுல்மேன் கூறினார்.

அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப்பை பற்றி, "மக்கள் ஒரு பதிலை அளிப்பதற்கும், அதுவும் தீவிரமான (மிகவும் சாதகமாக அல்லது மிகவும் பாதகமாக) ஒரு பதிலை அளிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருந்தன".

சீன அரசு தனது மக்களின் தனிநபர் சுதந்திரங்களை மதிப்பதைக் காட்டிலும் அமெரிக்க அரசு தனது மக்களின் தனிநபர் சுதந்திரங்களை அதிகம் மதிப்பதாக இன்னும் அதிகமான மக்கள் நம்பினாலும், இந்த இடைவெளி குறைந்துள்ளதையும் கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது.

வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய கருத்துகளைக் கண்டறிய பல நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் கூடுதல் கேள்விகளை பியூ கேட்டது.

அமெரிக்கா மற்ற நாடுகளின் விவகாரங்களில் பெருமளவில் அல்லது ஓரளவிற்குத் தலையிடுகிறது என்று சராசரியாக 75% பேர் கருதினர், அதே நேரத்தில் சீனாவைப் பற்றி 45% பேர் இந்தக் கருத்தை கூறினர்.

அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம், Getty Images

'அமெரிக்காவின் ஸ்திரமற்ற தன்மை பலரை பதற்றத்தில் ஆழ்த்துகிறது'

மற்ற நிறுவனங்களும் சமீபத்திய ஆண்டுகளில் இதேபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன.

கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப், கடந்த ஆண்டு உலகளாவிய அங்கீகார மதிப்பீடுகளில் சீனா அமெரிக்காவை முந்தியதை கண்டறிந்தது.

ஆனால் அமெரிக்க சிந்தனைக் குழுவான ஆசியா சொசைட்டி ஆண்டுதோறும் நடத்தும் சீனாவைப் பற்றிய உலகளாவிய பொதுக் கருத்து ஆய்வானது, பெருந்தொற்றுக் காலத்தில் சரிந்த சீனாவின் பிம்பம், அதன்பின்னர் மிதமான மீட்சியை மட்டுமே பெற்றுள்ளதாகத் தெரிவித்தது.

கார்னெகி சைனா அமைப்பைச் சேர்ந்த சோங் ஜா இயன் கூறுகையில், பியூ அமைப்பின் சமீபத்திய முடிவுகள் ஆச்சரியமளிக்கவில்லை என்றார்.

"பயன்படுத்தப்படும் படைபலம் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதாரத் தீங்குகள் உட்பட அமெரிக்க கொள்கையின் ஸ்திரமற்ற தன்மை பலரை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

கிரீன்லாந்தை இணைப்பது பற்றிய தனது சொல்லாடலை டொனால்ட் டிரம்ப் தீவிரப்படுத்தியதற்கும், வெனிசுவேலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கும் பிறகு பியூ அமைப்பின் கருத்துக்கணிப்பு தொடங்கியது. இந்தக் கருத்துக்கணிப்பு நடைபெற்ற காலத்தில்தான் அமெரிக்கா இரானுடனான தனது போரையும் தொடங்கியது.

"மக்களிடையே சீனா முற்றிலும் வரவேற்பைப் பெற்றுள்ளதா என்பது இன்னும் ஒரு திறந்த கேள்விதான், ஆனால் அது தற்போது கணிக்கக்கூடிய ஒரு நாடாகத் தோன்றுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில், சீன அரசு தனது பிம்பத்தை மேம்படுத்தக் கடுமையாக உழைத்து வருகிறது" என்றும் சோங் மேலும் கூறினார்.

சீனா மீதான அதிகளவிலான சாதகமான கருத்துகளுக்கும், அதன் அதிபர் ஷி ஜின்பிங் மீதான ஒப்பீட்டளவில் குறைவான நம்பிக்கைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு குறித்து சோங் கூறுகையில், சீனா 'அதிகம் கணிக்கக்கூடிய நாடாக இருப்பதால் சிலருக்கு நிம்மதியை அளிக்கலாம்; ஆனால், ஷி ஜின்பிங் ஒரு முக்கியமான சர்வாதிகாரத் தலைவர் என்ற உண்மையை இது மாற்றிவிடாது' என்றார்.

ஜின்பிங் தலைமையில் சீனா 'மற்ற நாடுகள் தனது உலகளாவிய பார்வைகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்ற அதிகப்படியான வற்புறுத்தல் உட்பட, மிகவும் ஆக்ரோஷமான மற்றும் விரிவாக்கக் கொள்கைகளைக் கையாண்டுள்ளது' என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த நாட்டில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விகளும் தொடர்ந்து நீடிக்கின்றன.

'மிகவும் கட்டாயப்படுத்தக்கூடிய மற்றும் பொருளாதார ரீதியாகக் குறைவான பலனளிக்கும் கொள்கைகளை ஷி ஜின்பிங்கின் தனிப்பட்ட செயல்பாடாகக மக்கள் கருதுகின்றனர்; அதேநேரத்தில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற நேர்மறையான அம்சங்களை ஒட்டுமொத்த சீன தேசத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்' என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு