'ஒரே நஞ்சுக்கொடி': ஒற்றை பிரசவத்தில் ஒரே மாதிரி பிறந்த 4 குழந்தைகள்

பட மூலாதாரம், Metro North Health
- எழுதியவர், ஏமி வாக்கர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் இயற்கையான முறையில் உருவான அரிதான, ஒரே மாதிரியான நான்கு குழந்தைகளை (Identical Quadruplets) பெற்றெடுத்துள்ளார். இந்த கர்ப்பம் "மிகவும் அதிக ஆபத்தானது" என்று ராயல் பிரிஸ்பேன் மற்றும் மகளிர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த நான்கு பெண் குழந்தைகளும் ஜூலை 14ஆம் தேதி, கர்ப்பமான 28 வாரங்கள் மற்றும் 4 நாட்களில் சிசேரியன் மூலம் பிறந்தன. இவர்கள் மோனோசைகோட்டிக் குவாட்ரப்ளெட்ஸ் (Monozygotic quadruplets ) வகையைச் சேர்ந்த குழந்தைகள். அதாவது, ஒரு கருவுற்ற முட்டை நான்கு கருக்களாகப் பிரிந்து உருவான குழந்தைகள்.
34 வயதான ஜெனிடார் நாமோனா என்ற இந்த குழந்தைகளின் தாய்க்கும், அவரது கணவர் ஜோர்தாமிற்கும் ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர். நான்கு குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று கூறப்பட்டபோது அவர்கள் "பெரும் ஆச்சரியத்தில்" ஆழ்ந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.
கர்ப்பத்தின் தொடக்கத்திலிருந்தே ஜெனிட்டாருக்கு சிகிச்சை அளித்த தாய்-சேய் மருத்துவ நிபுணரும் மகப்பேறு மருத்துவருமான மருத்துவர் அலெக்சா பெண்டால், இயற்கையாகவே ஒரே மாதிரியான நான்கு குழந்தைகள் உருவாகும் நிகழ்வு 1.5 கோடி கர்ப்பங்களில் ஒன்றில் மட்டுமே நிகழக்கூடும் என மதிப்பிட்டார்.
"அனைத்து குழந்தைகளும் ஒரே நஞ்சுக்கொடியைப் பகிர்ந்து கொள்வது குறித்து இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை" என்றும் அவர் கூறினார்.
இத்தகைய கர்ப்பம் மிகவும் அதிக ஆபத்தானது என்பதால், 25 வார கர்ப்பமாக இருந்தபோதே ஜெனிட்டாரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து கண்காணித்ததாக மருத்துவர் அலெக்சா பெண்டால் தெரிவித்தார்.
"அவரை 28 வாரங்கள் வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடிந்தாலே அது பெரிய வெற்றி என்று நாங்கள் எப்போதும் கூறிவந்தோம். ஆனால், 28 வாரங்கள் மற்றும் 4 நாட்களில் நான்கு அழகான, ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்தது நம்ப முடியாத ஒன்று. இதில் நாங்கள் பங்கு வகித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றும் பெண்டல் கூறினார்.

பட மூலாதாரம், Jenitar Na’amoana/Gofundme
"முதல் நாளிலிருந்தே ஜெனிட்டார் எல்லாவற்றையும் மிகவும் உறுதியுடன் எதிர்கொண்டார். அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய அனைத்து சிக்கல்கள் மற்றும் ஆபத்துகளையும் அவர் எப்படியோ சமாளித்துவிட்டார்" என்று மருத்துவர் அலெக்சா பெண்டால் குறிப்பிட்டார்.
புதிதாக பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு எமிலி, ஹேரியட், கேத்தரின் மற்றும் அலெக்சா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, அலெக்சா என்ற பெயர் மருத்துவர் அலெக்சா பெண்டாலை நினைவுகூரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Metro North Health
இந்த நான்கு குழந்தைகளும் முழுமையான வளர்ச்சியை அடையும் வரை மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (Neonatal Intensive Care Unit) தங்கவைக்கப்பட உள்ளனர். தற்போது அவர்கள் மிகவும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர் அலெக்சா பெண்டால் தெரிவித்தார்.
இந்த தம்பதியரின் மற்ற நான்கு குழந்தைகளின் வயது ஒன்று முதல் 10 வயது வரை உள்ளது. குறைந்தது 10 பேர் அமரக்கூடிய வேன் வாங்குவதற்காக, குழந்தைகளின் தாய் சமீபத்தில் இணையவழியில் நிதி திரட்டும் முயற்சியை தொடங்கியுள்ளார்.
இதுவரை 37,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் (19,261 பவுண்டுகள்) அதிகமாக நிதி திரட்டப்பட்டுள்ள அந்த முயற்சியில், ஜெனிட்டார் நாமோனா எழுதியுள்ள செய்தியில், "எங்களின் நான்கு அரிய அதிசயக் குழந்தைகளும் பாதுகாப்பாக பிறந்துள்ளனர். இதற்காக எங்கள் மனம் நன்றியால் நிறைந்துள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் நான்கு புதிதாகப் பிறந்த குழந்தைகளை பராமரிப்பது, நாங்கள் கற்பனை கூட செய்யாத சவால்களை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இயற்கையாகவே நான்கு குழந்தைகள் ஒரே கர்ப்பத்தில் உருவாவது மிகவும் அரிதானது. மருத்துவர்களின் கணிப்பின்படி, இது சுமார் 7 லட்சம் பிரசவங்களில் ஒன்றில் மட்டுமே நிகழக்கூடியதாகும்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























