ஓடும் பேருந்தில் முதியவர் அடித்து கொலை – நடந்ததை விவரிக்கும் குடும்பத்தினர் மற்றும் போலீஸார்

பட மூலாதாரம், Handout
எச்சரிக்கை: இக்கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்.
"எனக்குப் பக்கவாத பாதிப்பால் கை, கால் செயலிழந்துவிட்டது. அவர்தான் எனக்குப் பணிவிடை செய்து வந்தார். இனி என்னை யார் பார்த்துக் கொள்வார்கள். அந்தப் பையன் எனக்கு எமனாக வருவான் எனக் கனவிலும் நினைக்கவில்லை" எனக் கூறி அழுகிறார் கலைச்செல்வி.
தாம்பரத்தில் அரசுப் பேருந்து ஒன்றில் கலைச்செல்வியின் கணவர் சந்திரசேகரன் மீது சக பயணி ஒருவர் நடத்திய கொடூர தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டார்.
முதியவரைக் கொன்றதாகக் கைதான அமர்நாத் என்ற 25 வயது இளைஞர் மீது 'ஆபாசமாக பேசுதல், கொலை' உள்ளிட்ட பிரிவுகளில் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிறு காலை சுமார் 11 மணியளவில் நடந்த 'திடீர்' தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று காலை கூடுவாஞ்சேரியில் இருந்து வடபழனி நோக்கிச் செல்வதற்காக தாம்பரம் வந்த அரசு பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், "இந்தப் பேருந்து கோயம்பேடு செல்லுமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர், "வடபழனி வரை மட்டுமே செல்லும்" எனக் கூறியுள்ளார்.
தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வரவே, அப்போது படப்பையை சேர்ந்த சந்திரசேகரன் என்ற 74 வயது முதியவர் ஏறியுள்ளார். அவருக்குப் பின் சீட்டில் தாம்பரத்தில் ஏறிய இளைஞர் அமர்ந்திருந்தார்.
"பஸ்ஸில் முதியவர் ஏறி அமர்ந்ததும், 'இந்த பஸ் எங்கே போகுது?' என அந்த நபர் கேட்டுள்ளார். அவர் பதில் அளித்தும் தொடர்ந்து கேள்விகளை கேட்டுள்ளார்" என்கிறார், குரோம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா.
ஒருகட்டத்தில் நடத்துநரிடம் கேட்குமாறு முதியவர் பதில் அளித்தபோது 'உன்னால் பதில் சொல்ல முடியாதா?' எனக் கேட்டு அந்த நபர் வாக்குவாதம் செய்ததாகவும் காவல் ஆய்வாளர் கூறுகிறார்.
"ஒருகட்டத்தில் முதியவரை அந்த நபர் அடித்துள்ளார். அப்போது நடத்துநரும் அருகில்தான் இருந்துள்ளார். இருவரையும் பிரித்துவிட்டு முதியவரை மட்டும் தனியாக அமர வைத்தார்"எனவும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலில் முதியவரின் தலை, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
"சக பயணிகளில் இருந்த நர்ஸ் ஒருவர் பரிசோதித்துவிட்டு, முதியவருக்கு பல்ஸ் இறங்கிக் கொண்டிருப்பதால் உடனே மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்" என்கிறார் சந்திரசேகரனின் மகள் மகேஸ்வரி.

பட மூலாதாரம், Handout
'பஸ்ஸில் ஏறும்போதே போதை'
முதியவர் பயணித்த பேருந்தில் இருந்த சக பயணிகளிடம் விசாரித்தபோது தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் தங்களுக்குக் கிடைத்ததாக மகேஸ்வரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"அந்த இளைஞன் பேருந்தில் ஏறும்போது கடும் போதையில் இருந்துள்ளான். என் அப்பாவை அவதூறான வார்த்தைகளில் திட்டியுள்ளான். இதனைக் கவனித்த நடத்துநர், 'என்னுடைய சீட்டில் வந்து அமர்ந்து கொள்ளுங்கள்' என அப்பாவிடம் கூறியுள்ளார்" என்கிறார் மகேஸ்வரி.
இதையடுத்து, நடத்துநரின் இருக்கையில் அமர்வதற்கு தனது அப்பா சென்றதாகக் கூறிய அவர், "அப்போதும் அந்த நபர், 'எனக்குப் பதில் சொல்லாமல் பயந்து ஏன் ஓட வேண்டும். இவ்வளவு வயதுக்கு மேல் நீ வாழ்ந்து என்ன செய்யப் போகிறாய்?' எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளான்" எனக் கூறினார்.
"சுமார் அரை மணிநேரத்துக்கு இந்த வாக்குவாதம் நடந்துள்ளது. என் அப்பா அந்த நபரிடம் சித்ரவதையை அனுபவித்துள்ளார். அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் அந்த நபர் பேருந்தில் இருந்து ஓடியுள்ளார். அனைவரும் சத்தம் போடவே, எதிர்முனையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்தான் அவனைப் பிடித்துள்ளார்" என்கிறார் மகேஸ்வரி.
'வாக்குவாதம்தான் காரணம்' - காவல் ஆய்வாளர்
தாக்குதலுக்கு ஆளான முதியவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சக பயணிகள் கூட்டிச் சென்றுள்ளனர்.
"அங்கு பரிசோதித்தபோது முதியவர் இறந்துபோனது தெரியவந்தது. இருவருக்கும் இடையில் வாக்குவாதம்தான் பிரதானமாக இருந்துள்ளது" என்கிறார், காவல் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா.
இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான அமர்நாத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் சென்னை பாரிமுனையில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார்.
"பேருந்தில் இருந்த சாட்சிகளிடம் விசாரித்துள்ளோம். அவர்களும் வாக்குவாதம் நடந்த தகவலைக் கூறியுள்ளனர். பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என காவல் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா கூறுகிறார்.
தாக்குதலில் இறந்துபோன முதியவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரசேகரன், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

பட மூலாதாரம், Handout
'என்னைவிட்டு எங்கேயும் நகர மாட்டார்'
இவரது மனைவி கலைச்செல்விக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஒரு கையும் காலும் செயலிழந்துவிட்டது. கணவரும் மனைவியும் மட்டுமே வசித்து வந்ததால் கலைச்செல்விக்கு சந்திரசேகரன் பணிவிடைகளை செய்து வந்துள்ளார்.
"எனக்கு சோறு ஊட்டுவது, தலைவாரிவிடுவது என எல்லா வேலைகளையும் அவர் தான் செய்து வந்தார். அவருக்கும் வயதாகிவிட்டதால் எங்காவது வேலை இருந்தால் கூப்பிடுவார்கள். அவரும் சென்று வருவார். அப்படித்தான் அன்று வடபழனிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்" என்கிறார் கலைச்செல்வி.
பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "கிளம்பும்போது எனக்கு உதவிக்கு ஒருவரை துணைக்கு அமர்த்திவிட்டு, 'சிறிய வேலை தான். இரண்டு மணிநேரத்தில் வந்துவிடுவேன்' எனக் கூறிச் சென்றார். அப்போதும் எனக்குக் காபி கொடுத்துவிட்டு காலுக்கு ஒத்தடம் கொடுத்துவிட்டுக் கிளம்பிப் போனார்" எனக் கூறுகிறார்.
"அவர் சென்ற ஒரு மணிநேரத்தில் போன்கால் வந்தது" எனக் கூறும் கலைச்செல்வி, "அவரைவிட்டால் எனக்கு வேறு ஆதரவு இல்லை. தாம்பரத்தில் அந்தப் பையன் எனக்கு எமனா வருவான் என நினைத்துப் பார்க்கவில்லை" எனக் கூறி கலங்கினார்.
தாம்பரத்தில் விபத்து ஒன்றில் சந்திரசேகரன் சிக்கிவிட்டதாகவே குடும்பத்தினருக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சந்திரசேகரனின் உறவினர்கள் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
"அவருக்கு எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லை. நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் என்னைவிட்டு எங்கேயும் நகர மாட்டார்" எனக் கூறியபடியே கதறியழுதார் கலைச்செல்வி.
"வெளியில் போகும்போது ஆட்டோ, காரில் தான் அழைத்து செல்வார். அவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம். அவர் இல்லாமல் சோறு சாப்பிடக் கூட முடியவில்லை. மே 2-ஆம் தேதியன்று எங்களுக்கு ஐம்பதாவது கல்யாண நாள். அதற்குள் இப்படி நடந்துவிட்டது " எனக் கூறி அவர் வேதனைப்பட்டார்.
'தடுப்பதற்குக் கூட யாரும் வரவில்லை'
இருபது வயதில் இருந்தே தனது கணவர் கடுமையாக உழைத்து வருவதாகக் கூறிய கலைச்செல்வி, "அவரது உடலில் உள்ள காயங்களைப் பார்த்தால் கொடுமையாக இருக்கிறது. ஒரு பெரியவரை இப்படியெல்லாம் ஒருவரால் அடிக்க முடியுமா?" எனவும் கேள்வி எழுப்பினார்.
"பேருந்தில் அவ்வளவு பேர் இருந்துள்ளனர். ஒரு பெரியவரை போதையில் ஒரு நபர் தாக்கும்போது அதைத் தடுப்பதற்குக்கூட யாரும் முயற்சிக்கவில்லை. அந்த நபர் தப்பி ஓடும்போது, 'தங்களுக்குப் பாதிப்பு வரும்' எனக் கருதி நடத்துநர் பிடிப்பதற்காக ஓடியுள்ளார்" என்கிறார், சந்திரசேகரனின் மகள் மகேஸ்வரி.
"பேருந்தில் இருந்த யாராவது அந்த நபரைத் தடுத்து எனது அப்பாவைக் காப்பாற்ற முயற்சி செய்திருந்தால் அவர் இன்று எங்களுடன் உயிருடன் இருந்திருப்பார்" எனவும் அவர் வேதனைப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























