பஞ்சாப் அணி 222 ரன்களை குவித்தபோதிலும் முதல் தோல்வியை சந்தித்தது ஏன்?

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 சீசனின் 40வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசனின் முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப் கிங்ஸ் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிம்ரன் ஹிட்மெயர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்குப் பதிலாக தசுன் ஷனகா மற்றும் யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. சஷாங்க் சிங் மற்றும் ஜேவியர் பார்ட்லெட் ஆகியோருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் லாகி ஃபெர்குசன் அணியில் இடம்பெற்றனர்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அரைசதம் அடித்தனர்.
இந்த இலக்கை 19.2 ஓவர்களில் சேஸ் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணிக்காக யஷஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டானவன் ஃபெரீரா ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
மீண்டும் அதிரடி தொடக்கம்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வழக்கம்போல் அதிரடியான தொடக்கம் கிடைத்தது. ஆர்ச்சரின் மிரட்டலான முதல் ஓவரை பிரப்சிம்ரன் தாக்குப்பிடித்துவிட, இரண்டாவது ஓவரில் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார் பிரியான்ஷ் ஆர்யா. அந்த ஓவரில் அவர் 3 பவுண்டரிகளும், 1 சிக்ஸர்களும் அடித்தார்.
இருந்தாலும் ஆர்ச்சர் வீசிய மூன்றாவது ஓவரில் அவர் தன் விக்கெட்டை இழந்தார். ஆர்ச்சரின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள பிரியான்ஷ் சற்று தடுமாறவே செய்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்லிப் இல்லாமல் முதலில் தப்பித்தார். பின்னர் ஸ்லிப் வந்த பிறகு, அந்த இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் கேட்சை விட்டதால் தப்பித்தார். ஆனால், ஐந்தாவது பந்தில் ஆர்ச்சர் லென்த்தை மாற்ற, பிரியான்ஷ் ஆர்யா அதில் வீழ்ந்தார். அவர் 11 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
பிரியான்ஷ் ஆர்யா அவுட் ஆனதும், அதிரடி காட்டும் பொறுப்பை எடுத்துக் கொண்டார் பிரப்சிம்ரன் சிங். பர்கரின் கடைசி இரு பவர்பிளே ஓவர்களில் 3 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசினார் அவர். அதனால் பவர்பிளேவை 65/1 என்று முடித்தது பஞ்சாப் கிங்ஸ்.
பவர்பிளே முடிந்த அடுத்த இரு ஓவர்களில் கானலி 1 பவுண்டரியும் 3 சிக்ஸர்களும் விளாசினார். 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி.

பட மூலாதாரம், ANI
அதிரடியாக முடித்து வைத்த ஸ்டாய்னிஸ்
ஆட்டத்தின் 9வது ஓவரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன் விகிதம் குறையத் தொடங்கியது. 30 ரன்கள் எடுத்திருந்த கானலியை அந்த ஓவரில் வீழ்த்தினார் யஷ் ராஜ். அதுமட்டுமல்லாமல், 14வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டையும் கைப்பற்றினார் யஷ் ராஜ். 44 பந்துகளை சந்தித்த பிரப்சிம்ரன் 59 ரன்கள் எடுத்தார். இது இந்த சீசனில் அவருடைய 4வது அரைசதம்.
மிடில் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்கத் தடுமாறிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அவுட் ஆகும்போது 18 ஓவர்களில் 181/4 என்ற நிலையில் இருந்தது பஞ்சாப் கிங்ஸ்.
அடுத்த 2 ஓவர்களில் தன் மிரட்டலான அதிரடியால் ராயல்ஸ் பௌலர்களின் பந்துவீச்சை பதம் பார்த்தார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் அவர் 2 சிக்ஸர்கள் அடிக்க அந்த ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. பிரிஜேஷ் ஷர்மா வீசிய கடைசி ஓவரில் அவர் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் எடுத்தார். அதனால், 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.
22 பந்துகளை சந்தித்த ஸ்டாய்னிஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். ராயல்ஸ் அணி தரப்பில் யஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பட மூலாதாரம், ANI
பஞ்சாப் கிங்ஸ் முதல் தோல்வி
223 என்ற இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். அடுத்த ஓவரை வீசவந்தார் அதிவேகமாக வீசக்கூடிய லாக்கி ஃபெர்குசன். இந்த சீசனில் முதல் ஓவரை வீசிய அவரது பந்திவீச்சில் 1 பவுண்டரியும், 2 சிக்ஸர்களும் அடித்தார் சூர்யவன்ஷி.
யான்சன் வீசிய மூன்றாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி அடிக்க, சூர்யவன்ஷி தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்தார். அர்ஷ்தீப் சிங் 'பௌலிங் எண்ட்' மாறி நான்காவது ஓவர் வீச வந்தார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் விளாசிய சூர்யவன்ஷி, அடுத்த பந்திலேயே ஷ்ரேயாஸ் ஐயர் வசம் கேட்சாகி அவுட் ஆனார். ஆனால், அவர் அவுட் ஆனபோதே (3.2 ஓவர்களில்) 51 ரன்கள் எடுத்துவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். 16 பந்துகளை மட்டுமே சந்தித்து 43 ரன்கள் விளாசிச் சென்றிருந்தார் அந்த 15 வயது பேட்டர்.
சூர்யவன்ஷி வெளியேறியதும் அதிரடியை தன் கையில் எடுத்துக்கொண்டார் ஜெய்ஸ்வால். அர்ஷ்தீப் வீசிய அந்த 4வது ஓவரிலேயே 2 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடித்தார் அவர். ஃபெர்குசன் வீசிய 6வது ஓவரில் 16 ரன்கள் வர, பவர்பிளேவில் 1 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இது பஞ்சாப் கிங்ஸின் பவர்பிளே ஸ்கோரை விட 19 ரன்கள் அதிகம். ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற இது மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
பவர்பிளேவுக்குப் பிறகு ராயல்ஸ் அணியின் ரன்ரேட் வெகுவாகக் குறையத் தொடங்கியது. பஞ்சாப் ஸ்பின்னர்கள் சிக்கனமாகப் பந்துவீசியதால், ராயல்ஸ் பேட்டர்களால் பவுண்டரிகளோ சிக்ஸர்களோ அடிக்க முடியவில்லை.
பவர்பிளேவுக்கு அடுத்த 6 ஓவர்களை ஸ்பின்னர்கள் ஹர்ப்ரீத் பிரார் மற்றும் யுஸ்வேந்திர சஹல் வீசினார்கள். அந்த ஓவர்களில் 47 ரன்கள் மட்டும் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது ராயல்ஸ். அந்த 2 விக்கெட்டுகளையுமே (ஜெய்ஸ்வால் & ஜுரெல்) சஹல் வீழ்த்தினார். 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் ஜெய்ஸ்வால். ஜுரெல் 20 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ரன்ரேட் குறைந்ததால் சற்று அதிரடி காட்ட நினைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக். யான்சன் மற்றும் சஹல் பந்துகளில் அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்தார். இருந்தாலும், சஹல் ஸ்பெல்லின் கடைசிப் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 4 ஓவர்கள் வீசிய சஹல், 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஸ்பின்னர்களின் ஓவர்கள் முடிந்ததும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிடி ஆட்டத்திலிருந்து நழுவத் தொடங்கியது. டானவன் ஃபெரீரா மற்றும் ஷுபம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 32 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இந்தப் போட்டியிலேயே இதுதான் சிறந்த பார்ட்னர்ஷிப். டானவன் ஃபெரீரா 52 ரன்களிலும், ஷுபம் துபே 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த பார்ட்னர்ஷிப் உதவியால், 4 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். அதன் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது அந்த அணி. பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தங்களின் முதல் தோல்வியை சந்தித்தது.

பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
பஞ்சாப் கிங்ஸ்
இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் லாகி ஃபெர்குசன் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே சேர்க்கப்பட்டனர். இந்த சீசனில் முதல் முறையாக மாற்றங்கள் செய்தது பஞ்சாப் கிங்ஸ்.
பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்க்கர்ஸ் ஸ்டாய்னிஸ், சூர்யான்ஷ் ஷெட்கே, நேஹல் வதேரா, மார்கோ யான்சன், லாகி ஃபெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல்
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: விஷ்ணு வினோத், ஜேவியர் பார்ட்லெட், வைஷாக் விஜயகுமார், ஹர்ப்ரீத் பிரார், முஷீர் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்தப் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவனில் தசுன் ஷனகா மற்றும் யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
பிளேயிங் லெவன்: யஷஷ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டானவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, தசுன் ஷனகா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா, யஷ் ராஜ் புஞ்சா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ரவி பிஷ்னாய், ரவி சிங், துஷார் தேஷ்பாண்டே, ஷுபம் துபே, ஷிம்ரன் ஹிட்மெயர்.
































